Home Blog Page 20

ஈ.பி.டி.பியின் கொலைகள் தொடர்பில் சிறிதரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக கடந்த காலங்களில் செயற்பட்ட சதா என்ற சுப்பையா பொன்னையா என்பவர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (11) பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.

நிமலராஜன், அற்புதன், நிக்லஸ் உள்ளிட்ட பலரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி படுகொலை செய்ததாக சுப்பையா பொன்னையா அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டதாக சிறிதரன் சபையில் சுட்டிக்காட்டினார்.
நிமலராஜன் போன்றவர்களின் கொலைகள் மூடி மறைக்கப்பட்டதாக சிறிதரன் கூறினார்.

இசைப்பிரியா, இராணுவத்தால் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கொலைச் சம்பங்களுக்கு எல்லாம் நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய சிறிதரன் அதனை இலங்கை அரசாங்கத்தால் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதியின் படி நடந்தவர்கள் எனின் ஏன் அரசாங்கம் வெளியக விசாரணைக்குத் தயாராகக் கூடாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

ஏன் வெளியக விசாரணையைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
வெளியக விசாரணையை ஏற்றுக்கொள்ளும் வரையிலும் நீதி, நல்லிணக்கம், சமாதானம் என்பது எப்போதும் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் செலவிடப்பட்ட தொகை!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற சலுகை விபரம்:

மஹிந்த ராஜபக்சவுக்கு….
111 பணியாளர்கள்
​9 மருத்துவ ஊழியர்கள்
​8 சாரதிகள்
​2 எழுதுபவர்கள்
​5 இயந்திரப் பணியாளர்கள்
​1 கடற்படை உதவியாளர்
​46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள்
​16 சமையல்காரர்கள்
​26 மின்சார வல்லுநர்கள்
​4 சிவில் பொறியியலாளர்கள்
​4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள்
​2 களஞ்சிய காவலர்கள்
​3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள்
​1 தச்சர்
​1 நாய் பராமரிப்பாளர்
​ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார்.

​கோட்டாபய ராஜபக்சவுக்கு…. 60 பணியாளர்கள்
​3 மருத்துவ உதவியாளர்கள்
​1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்
​6 சாரதிகள்
​5 எழுதுபவர்கள்
​8 பாதுகாப்பு அதிகாரிகள்
​13 ஆதரவு பணியாளர்கள்
​8 சமையல்காரர்கள்
​3 தொழில்நுட்ப வல்லுநர்கள்
​1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்
​6 சிறப்பு நிபுணர்கள்
​1 நாய் பராமரிப்பாளர்
​ஆகியோர் .

​சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும், ஜனாதிபதியாக செயல்பட்டு இறந்தவர்களுடைய (பிரமதாசாவின் மனைவி ஹேமா )விதவை சலுகை 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன் விபரம்:

​*பிரமதாசாவின் மனைவி ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன்
​*சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன்
​*மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன்
*​மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன்
​*கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன்
​*ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் – முல்லையிலிருந்து இளைஞர்கள் நடைபவனி!

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் முகமாக இரண்டு இளைஞர்கள் நேற்று(10)  முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து  நடைபவனியாக சென்றுள்ளனர்.

நடைபவனியாக சென்ற இளைஞர்கள்  துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி. எமது நிலங்களும் / எமது வளங்களும் எமக்கானதே ! முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம் கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது.

உள்ளிட்டவாறான கோஷங்களை முன்வைத்து போராட்டத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் நடைபவனியாக சென்றுள்ளனர்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி : நேரில் சென்று பார்வையிட்ட களுவாஞ்சிக்குடி நீதவான்!

மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி,  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர்.

1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று  களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை, இன்று   நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் தொல்பொருள் திணக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக  அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபி எனும் அரச துணை ஆயுதக்குழு செய்த கொலைகளை வெளிப்படுத்த தயார்: சுப்பையா பொன்னையா

ஈபிடிபி எனும் அரச துணை ஆயுதக்குழு தலைவர் செய்த கொலைகளை அவருடன் அன்று ஒன்றாக இருந்த சுப்பையா பொன்னையா என்பவர்  ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார்.

மேலும் தான் சாட்சி சொல்லத் தயார் எனவும் கூறியுள்ளார்.

அவர்கூறிய அவர்கள் செய்த கொலைகளில் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளார்..
1. தினமுரசு பத்திரிகை ஆசிரியர் அற்புதன் எனப்படும் ரதேஸ்.
2. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக இருந்த கே.எஸ். ராஜா.
3. நெல்லியடி சட்டத்தரணி மகேஸ்வரி.
4. டக்ளஸ்சின் மெய்பாதுகாவலர் ஒருவர்.
5. மலையக இளைஞர் மோகன்.
6. மலையக இளைஞர் விஜி.
7. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கடத்திக் கொலை செய்தமை.
8. கொழும்பு பார்க் வீதியில் ஈ.பி.டி.பி.க்கு சொந்தமான வீடு ஒன்றில் வதை முகாமாகம் நடாத்தப்பட்டு அங்கும் பல கொலைகள் இடம்பெற்றன எனவும் இவைகளுக்கும் தான் சாட்சி சொல்லத் தயாராகவுள்ளேன் என்றும் ஈ.பி.டி.பி உறுப்பினரான சுப்பையா பொன்னையா எனும் முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் யாழ் ஊடகமையத்தில் நேற்று 10/09/2025, தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் கூட்டாளி சார்லி கக் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

அநுர அரசு மக்கள் ஆணையை நிறைவேற்றத் தவறி விட்டதா? திரு. சரவணன்

தமிழ், சிங்கள மக்கள்  ஆகிய இரு தரப்பினருடனும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்கள் முக்கிய அவதானிப்புகள் என்ன?
இன்றைய அரசியல் சூழலில், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில், இந்த அரசு மக்களின் ஆணையை மதித்து செயல் படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதுதமிழ் மக்களிடமும், தென் இலங்கையில் வாக்களித்த மக்களிடமும் ஒரே மாதிரியான கேள்வியாக உள்ளது.
நான் ஆரம்பத்தில் ஜே.வி.பியுடன் (JVP) இணைந்து செயல்பட்டேன். ஆனால், அந்த அமைப்பு இனவாத பாதையைஎடுத்தபோது, அதற்கு எதிராக நாங்கள் செயல்பட்டோம். எந்த அமைப்பாக இருந்தாலும், அது காலத்தின் போக்கில்மாறக்கூடியது; ஒருகாலத்தில் முன் னேற்ற சக்தியாக இருந்தாலும், பின்னர் பின்ன டைவு அடையும் வாய்ப்பும் உண்டு. அதேபோல், ஜே.வி.பியையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகள் தங்கள் பழைய சித்தாந் தத்தையே தொடர்கின்றன. ஆனால்ஜே.வி.பி. வித்தியாசமானது. அது விமர்சனமும் சுயவிமர் சனமும் செய்து, சித்தாந்த ரீதியில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்தது. இரண்டு முறை ஆயுத கிளர்ச்சிகளில் ஈடுபட்ட அந்த இயக்கம், முன்னர் ஆயுதப்போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருந்தது. ஆனால் இன்று, அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் வழியாக ஆட்சியில் பங்கேற்கத் தயாரான அமைப் பாக மாறியுள்ளது.
இதனால், ஜே.வி.பியை ஒரு சாதாரண பாரம்பரிய கட்சியாக பார்க்காமல், மாற்றத்தைக் கற்றுக்கொண்டு, புதியசூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்ட அரசியல் இயக்கமாக நாம் பார்க்க வேண்டும். இன்றைய நிலையில், அது சுதந்திர ஜனநாயகத்தின் கட்டமைப்புக்குள் அரசி யலுக்கு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதே முக்கியம்.
இன்றைய சூழலில், இடதுசாரி தலைமை யிலான அரசாங்கம் முதன்முறையாக லிபரல் ஜனநாயக கட்டமைப்புக்குள் நுழைந்துள்ளது. ஆனால், அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்ற பொதுமக்கள் குற்றச் சாட்டுஅதிகரிக்கிறது. இது, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்குள் மட்டுமே இயங்க வேண்டியநிலைமையால் வருகிறது.
அரசாங்கம் கடந்த 10 மாதங்களில் சில மாற்றங்களை செய்திருந்தாலும், பல விஷயங் களை முன்னேற்றுவதற்குசட்டரீதியான கால அவகாசமும் அவசியம். அதே நேரத்தில், அரசாங்கம் தந்திர ரீதியில் தடைகளை கடந்து செல்லவேண்டியுள்ளது. குறிப்பாக, இன வாத சக்திகளை எதிர்கொள்வதில் அவர்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை, சில விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தாலும், சில வற்றை திறமையாக கடந்து வருகின்றனர்.
இலங்கையின் அரசியல் கட்டமைப்பு, குறிப்பாக இனவாத பிரச்சனைகளை சட்டரீதியாகத் தீர்க்க இயலாதபடிஅமைந்துள்ளது. இதனால், அரசு எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்ற முடியாமல் தடுமாறுகிறது.
தமிழ் சமூகத்துக்குப் பொது பிரச்சினை என்னவென்றால், தென்னிலங்கையில்  நடக்கும் அரசியல் மாற்றங்கள்அவர்களுக்கு சரியாகச் செல்லவில்லை. சிங்கள மொழி ஊடகங்களில் வெளிப்படும் தகவல்கள் தமிழில்கிடைக்காததால், அரசின் நடவடிக்கைகள் தமிழ் மக்களிடம் தவறாகப் புரியப்படுகிறது. இதனால், “அரசாங்கம்எதையும் செய்யவில்லை” என்ற நம்பிக்கை உருவாகிறது.
ஆகவே, அரசாங்கம் சில முன்னேற்றங்களை எட்டியிருந்தாலும், தகவல் பரிமாற்றத் தடைகள் மற்றும் சட்ட ரீதியானகட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் தோல்வியடைந்தது போல தோன்றுகிறது. உண்மையில், நிலைமையைசரியாக புரிந்துகொள்ளாமல், முழுமையான ஏமாற்றம் என்ற போக்கே தமிழ் சமூகத்தில் அதிகமாக உள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் ஆசைகள், பிரச்சனைகள், இராணுவமயமாக் கல், பௌத்தமயமாக்கல் போன்ற விடயங்கள் தெற்குமக்களிடம் போய் சேருகின்ற னவா? அவர்கள் இதைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்கிறார்களா?
இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதம் கடந்த காலத்தில் எளிதாக மக்களிடம் விற்கப்பட்டதால், ஊடகங்கள் அதைப் பயன்படுத்தி சமுதாயத்தை ஊழல் மற்றும் தீவிரவாத பாதைக்கு தள்ளின. இதேபோன்று, தமிழ் சமூகத்திலும் தேசியவாதம் எளிதாக விற்கப்பட்ட ஒரு அரசியல் கருவியாக மாறியது.
தமிழ் உரிமை தேவையும் அரசியல் இடமும் உண்மையில் இருந்தாலும், கண்மூடித் தனமான தேசியவாதம் மக்களை தவறான முடிவுகளுக்குத் தள்ளியது. இதனால் இரு சமூகங்களிலும் உண்மையை அறியாத பொது மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். எனது பார்வையில், சிங்களத்திலும் தமிழிலும் தகவல் சிக்கல்கள் தொடர்ந்ததால், இரு சமூகங்களுக்கும் நீண்டகாலபிரச்சினை நிலைத்திருக்கிறது.
ஆனால், பௌத்த அடிப்படைவாத சிந்தனை இருக்கும் வரைக்கும், இந்த பிரச்சனைகள் வந்து ஒரு சுகமான முறையில் தீரும்என்று நினைக்கின்றீர் களா?
இலங்கை அரசு அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்சிகள்மாறினாலும், அந்த அடித்தள சித்தாந்தமே அரசை இயக்குகிறது. எனவே பிரச்சனை நபர்களோ அரசியல் சக்திகளோஅல்ல. பேரினவாத சித்தாந்தமே அடிப்படை பிரச்சனை. இது நீண்டகாலமாக ஒரு பெரிய செயல்முறையின் மூலம்சமூகத்தில் வேரூன்றியது.
இந்த நிலையை மாற்ற, அதேபோல் ஒரு நீண்டகால செயல்முறை அவசியம். ஒரே அரசாங்கம் அல்லது ஒரேதலைமையால் அதை முழுமையாக மாற்ற இயலாது. அதனால், எந்தக் கட்சி தலைமை தாங்கினாலும் பேரினவாதஅரசின் கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டியிருக்கும்.
ஆனால், தற்போதைய NPP அரசு முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது கணிசமான மாற் றங்களை ஏற்படுத்தும் திறன்கொண்டதாக தெரிகிறது. பெரிய மாற்றம் சாத்தியமா என்ற சந்தேகம் இருந்தாலும், இதுவரை இல்லாத சிலமுன்னேற்றங்களை அவர்கள் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, ரணில் விக்ரமசிங்க போன்ற “மேட்டுக்குடி அரசியல்வாதி” ஆட்சியில் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் அரசியல் மாற்றத் தில் ஒரு புதிய கட்டத்தைசுட்டிக்காட்டுகிறது.
ரணில் விக்ரமசிங்க உண்மையில் ஊழலுக்காகத் தானா கைது செய் யப்பட்டார், இல்லையெனில் NPP அரசின் அரசியல்யுக்தியா?
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. முன்னர் ஜனாதிபதி அல்லது உயர்ந்த அரசியல்வாதிகள் மீது கை வைக்க முடியாது என்ற நிலைமை நிலவியது. ஆனால்இப்போது, குற்றச்சாட்டு இருந்தாலே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான சுட்டுமாதிரியாக இது மாறியுள்ளது. இதனால், குற்றச்சாட்டு உள்ள பலரும் சட்ட வலையில் சிக்கக்கூடும் என்ற அச்சத்தால் எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். அரசாங்கம் அரசியல் தலையீடு செய்யாமல், நீதித்துறை மற்றும் சட்டத்துறைக்கு முழு சுதந்திரம் வழங்குவோம் என்றுஉறுதியளித்திருப்பது, இந்த செயல்முறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் சிங்கள தலைவர்களைப் பற்றி சிங்கள மக்களின் அபிப்பிராயம் என்ன?
ரணில் கைது சம்பவத்துக்குப் பிந்தைய சிங்கள சமூகத்தின் எதிர்வினை அரசுக்கு சாதகமாகவே இருந்தது. எதிர்க்கட்சிகள்பெரும் அளவில் எதிர்ப்பை ஏற்படுத்துவார்கள் என நினைக்கப்பட்டாலும், அது நடக்கவில்லை, சில சிறிய குழுக்கள் மட்டுமேதெருக்களில் காணப்பட்டனர். மாறாக, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ரணில் கைது நியாயம் என வலியுறுத்தும்தரப்புகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தின. இதனால், மக்களிடையே ஒருவகை ஒற்றுமை ஏற்பட்டது.
தென்னிலங்கையின் பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை நிலைநிறுத்தியு ள்ள நிலையில், மக்களைஅடிப்படையில் கவர்ந்திருப்பது இன்னும் ஜேவிபி (JVP) மற்றும் என்பிபி (NPP) மட்டுமே என்கிற அவதானிப்புவெளிப்படுகிறது.
இவர்களுக்கு தென்னிலங்கையில் இன் றும் மக்களுடைய ஆதரவு உள்ளதா?
வடக்கு கிழக்கில் அனுரகுமாரா தமிழர்களுக்கு நேரடி நல்லெண்ண செயல்களை காட்டாதது விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை ஏமாற் றத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த தேர்த லில்அவருக்கான வரவேற்பு குறையக்கூடும் என்ற கருத்து வடக்கு கிழக்கிலிருந்து எழுகிறது. எந்த அரசும் நீண்ட காலம்அனைவரையும் திருப்தி செய்ய இயலாது, அதேபோல் என்பிபிக்கும் (NPP) எதிர்ப்பு நிலைகள் விரைவில் தோன்றும்என்று கருதப்படுகிறது. சிவில் நிர்வாக துறையே புதிய ஆட்சிக்கு பெரிய சவாலாக மாறும், ஏனெனில் “system change” அங்கேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் எதிர்ப்புகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.
தமிழ் சமூகத்தின் பார்வையில், கடந்த 76 ஆண்டுகளில்  NPP காட்டிய முன்னேற்றம் கணிசமானது. சிங்கள-பௌத்ததேசியவாத  அழுத் தங்களுக்கு இடமளிக்காமல், சட்டரீதியான பாது காப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் என் பிபி சில முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இருந்தாலும், ஒதுக்கப்பட்டநிதிகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது; சில உதாரணங்களில், ஒதுக்கப்பட்ட வளங்கள்பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
செம்மணி பிரச்சினை போன்ற உணர்ச்சி கரமான விவகாரங்களில், விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்றவலியுறுத்தல் தொடர்கிறது.
ஆட்சியின் கவனம் அதில் இருக்கிறது என்பதையும் சிலர் உணர்கிறார்கள். எனினும், வடக்கு கிழக்கு மக்களிடையேஇன்னும் எச் சரிக்கையுடனான நம்பிக்கையற்ற மனநிலை நிலவி வருகிறது. NPP தங்களை முழுமையாக நம்பவைக்கவில்லை; ஆனாலும், அரசுகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அளவு முன்னேற்றமும் நல் லெண்ணமும்வெளிப்படுகிறது.
இதனால், NPP அரசாங்கத்துக்கு எதிர்ப்பு அலைகள் இயல்பாக உருவாகினாலும், வடக்கு கிழக்கில் அது முந்தையஆட்சிகளைக் காட்டிலும் குறைந்த நம்பிக்கையின்மையுடன், எச்சரிக்கையுட னான ஒரு எதிர்பார்ப்புடன்பார்க்கப்படுகிறது.
செம்மணி பிரச்சினையை தமிழ் தரப்பு இன்னும் சந்தேகத்தோடு பார்க்கிறது. 148 எலும்புக்கூடுகள் தோண்டிஎடுக்கப்பட்டும், கார் பன் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. இதனால் உண்மையான விசாரணை நடக்குமா அல்லது கண்துடைப்பாகவே முடிவடையுமா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த ப்ராசஸுக்கு அரசாங்கம் ஒத்துழைக் கிறதா அல்லது தடைகளை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கியமான கேள்வி. இதுவரை அரசாங்கம் சிங்கள சக்திகளுக்கு இடமளித்து குழப்பம் செய்யவில்லையெனவும், விசாரணை சுதந்திரமாகநடக்கிறது என்ற நேர்மையான பார்வையும் சிலரிடம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் சில குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. குறிப்பாக, சிஐடி கண்காணிப்பின் காரணமாகவேலை தடைபடுகிறது என சிலர் கூறுகின்றனர். இருந்தாலும், இது முழுமையாக அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்தப்படவில்லை; காவல்துறை  அல்லது சிஐடி மட்டத்தில் நிகழும் பிரச்சினைகள் முறையீட்டின் மூலம்சரிசெய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில், சில சந்தேகங் கள் இருந்தாலும், தற்போதைய ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மையான முறையிலே நடை பெறுகின்றன என்பதே மக்களின் பார்வையாகும்.
அனுரகுமார் அரசு தற்போதைய அரசியலமைப்பை திருத்துமா, இல்லை புதிய அரசியலமைப்பு உரு வாக்குமா?  இன்றுதேர்தல் நடந்தால், NPP மீண்டும் ஆட்சிக்கு வருமா?
புதிய அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என அரசாங்கம் நம்பிக்கை தருகிறது, ஏனெனில் அவர்களிடம் மூன்றில் இரண்டுபெரும்பான்மை உள்ளது. மேலும், அடுத்த தேர்தலிலும் மீண்டும் பெரும்பான்மை பெறும் வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அதுஉறுதியானதல்ல. காரணம், அரசை மாற்றும் வகையில் தெளிவான மாற்று இன்னமும் இல்லை. அப்படி ஒரு மாற்றுஉருவானால்தான் அரசாங்கம் வீழ்ச்சி அடையும். சிலர் ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் நீடிக்காது என்கிறார் கள். ஆனால்எனது பார்வையில், இந்த அரசு ஐந்து ஆண்டுகள் முடித்த பின் இன்னொரு அரசு நிச்சய மாக அமையும்; பின்னர் தேவையான அரசியல் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது.

உள்ளக மற்றும் கலப்புப்பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்க ஐ.நாவில் கோரிக்கை!

பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் என கூட்டாக எச்சரித்திருக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் தகவல் நடுவம், தமிழ் ஆய்வு நிலையம், இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் இளையோர் அமைப்பு, சர்வதேச ஈழத்தமிழர் பேரவை, கனேடியத் தமிழ்த்தேசிய அவை, உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிலும் இயங்கிவரும் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளுக்குக் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏதுவான பலதரப்பட்ட வழிமுறைகள் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் எனவும் அக்கடிதத்தில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை தமிழ்மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படுவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்கும் வழிகோலும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், உள்ளகப்பொறிமுறையை நிராகரிக்குமாறும், இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (செப்டம்பர் 10) ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் விஜித ஹேரத், அந்த அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர், புதிய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவுவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று வோல்கர் டேர்க் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், புதிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

போலந்து மீது தாக்குதலா: ரஷ்யா பதில்

”போலந்தில் எங்கும் தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை” என ரஷ்யா தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டு வான்வெளியில் நள்ளிரவில் 19 முறை ஆளில்லா விமானங்கள் பறந்ததை போலந்து இராணுவம் பதிவு செய்துள்ளதாக  போலந்து பிரதமர் கூறியிருந்தார். இந்த நிலையில்   ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்  மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளது.

“உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட யுஏவி  ஆளில்லா விமானங்கள் அதிகபட்சம் 700 கி.மீ வரைதான் செல்லும், அதைத்  கடக்காது.” “எனினும், இந்த விவகாரம் குறித்து போலந்து பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஆலோசனை செய்ய தயாராக இருக்கிறோம்.” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.