Home Blog Page 111

கேரள கடற்பரப்பில் கப்பல் விபத்து : இலங்கை கடற்பரப்பு பாதிப்பு

இந்தியாவின் கேரள கடற்பரப்பில் இடம்பெற்ற MSC என்ற கப்பல் விபத்தினால் தொன் கணக்கான பிளாஸ்ரிக்  துகள்கள் தென் ஆசிய கடற்பரப்பில் கலந்துள்ளளன. பிளாஸ்ரிக் துகள்களினாலான மாசாக்கத்தினால் இலங்கை பாதிக்கப்படுகின்றமையால் அதற்கான பொறுப்புக்கூறலை சிவில் சமூக அமைப்புக்கள் கப்பல் நிறுவனங்களிடம் கோருகின்றன.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் புதன்கிழமை (25)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது  குறித்து தகவல் வெளியிடுகையிலேயே சிவில் அமைப்புக்கள்  மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளன.

“ எக்ஸ்பிரஸ் பேரள்  (X-Press Pearl) அனர்த்தம் இடம்பெற்று 4 ஆண்டுகளின் பின்னர் பிளாஸ்ரிக் துகள்கள் தெற்காசியா மற்றும் இலங்கைக் கரையோரங்களை அலைகளினூடு வந்தடைவதை கிறீன் பீஸ் தெற்காசியா வன்மையாக கண்டிக்கின்றது”  என  Centre for Environmental Justice இன் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும், தெரிவிக்கையில்,

2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி  எம். எஸ். சீ. எல்சா – 3 (MSC ELSA 3) எனும் கப்பல் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதே கடற்பரப்பில் ஜூன் 9 ஆம் திகதி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் மற்றொரு பாரிய சரக்குக் கப்பலான வான்ஹாய் 503 (WAN HAI 503) இலிருந்து மேலதிக கொள்கலன்கள் காணாமல் போனமையையும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகினது. இதற்கு நாம் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

தெற்காசிய கடற்பரப்பில் சில வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க அளவு எரிபொருள், நச்சுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் துகள்களைக் கொண்ட இரண்டு கொள்கலன் கப்பல் மூழ்கியிருப்பது அல்லது மூழ்கும் அபாயத்திற்கு உள்ளாகி இருப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலமையாகும்.

பருவப்பெயர்ச்சிக் காலநிலை மற்றும் பருவகால நீரோட்டங்களால் ஆபத்தான பதார்த்தங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கடலோரப் பல்வகைமை மற்றும் உள்ளூர் சமூகங்களை நோக்கி நகர்ந்து வருகின்றது. இதனால் கடல்சார்குழல், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் பொருளாதாரங்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிறீன் பீஸ் (Greenpeace) மற்றும் பிற கூட்டணி அமைப்புக்கள் இந்தியாவின் இரண்டு மாநிலங்கள் மற்றும் இலங்கைக் கடற்கரையின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் MSC ELSA3 கப்பல் விபத்தினையே சுட்டிக் காட்டுகின்றன.

“எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தத்திலிருந்தே இலங்கை இன்னும் மீளவில்லை. அவ்வாறிருக்க தற்போது இன்னொரு மாசாக்கத்தினை எதிர்கொள்கின்றோம். இது வெறும் விபத்து அல்ல. மாறாக இது ஒரு ஒழுங்குமுறையின் தோல்வி மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையே ஆகும். எனவே மாசாக்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வலுவான பிராந்திய வழிமுறை எமக்கு தேவை என மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயிர்ப்பல்வகைமையியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியாளரும் வழிப்படுத்துனருமாகிய ககனி ரணசிங்க தெரிவிக்கையில்,

“ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க பிரதேசங்கள் மற்றும் கடலோர பிரதேசங்கள் எவ்வாறு இத்தகைய தவிர்க்கப்படக்கூடிய கப்பல் விபத்துக்களால் மோசமடைகின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது.

பிளாஸ்ரிக்கின் துகள்கள் சிறியதாக இருந்தாலும் அவை எமது சுற்றாடல், சமூகம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் அளவிடமுடியாதது. அவை நச்சுத் தன்மையை உறிஞ்சவும் வெளிவிடவும் கூடியவை, கடல்வாழ் உயிரினங்களின் சுவாசத்தை பாதிக்க கூடியவை, மற்றும் சூழலில் பல தசாப்த காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியவை.

பிளாஸ்ரிக் உற்பத்தியை நிறுத்த அல்லது ஒழுங்குமுறைப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்காதுவிடின் நாம் எமது நீரை பிளாஸ்ரிக் கூழாக மாற்றிக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

தெற்காசிய அமைப்பின் பிரசாரகர் அனிதா இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

“எக்ஸ்பிரஸ் பேர்ள்”  இன் விபத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு கப்பல் விபத்தினால் இலங்கையின் கரையோரம் மீண்டும் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. தன்னார்வலர்களினதும் பொது மக்கள் குழுவினதும் உதவியுடனும் அதனை மீட்டிருந்தோம்.

இலங்கை அரசாங்கம் தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்த  நிலையில் இத்தகைய அனர்த்தங்களுக்கு பொறுப்பான தனியார் நிறுவனங்கள் முழுமையாக பொறுப்பேற்காத போது  தூய்மைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செலவு  வீணாக பொது மக்களின் மீதே சுமத்தப்படுகின்றது என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

மேலும் “இந்த அலட்சியம் மற்றும்  பொறுப்பற்ற தன்மையின் தொடர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கப்பலிற்குரிய தனியார் நிறுவனமே அதற்கான செலவை கொடுக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல. இலங்கை அரசாங்கம் பொருளாதார நட்டத்திற்கும் உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கும் எம்.எஸ்.சி இனை பொறுப்பேற்க செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Climate Action Now அமைப்பின் சுற்றுச்சூழல்சார் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக  தெரிவிக்கையில்,

எல்லைதாண்டிய பிளாஸ்ரிக் மாசுபாடு கடலினுள் சிந்தப்படும் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. மாறாக அவை கடந்து பிராந்தியம் முழுவதும் எல்லைகளை உள்ள கடற்சூழலையும் கரையோரப் பிரதேசங்களையும் பாதிக்கின்றது.

இந்த தொடர்ச்சியான சம்பவானது அபாயகரமான சரக்குகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பிளாஸ்ரிக் உற்பத்தியின் உலகளாவிய உற்பத்தியின் அதிகரிப்பையும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள அமைப்பு ரீதியான தோல்வியை வெளிப்படுத்துகின்றது.

எனவே, அரசாங்கம் பிராந்தியங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மாசாக்கத்திற்கு காரணமான மாசாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சுகாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய சமூகங்களை பாதுகாக்கவும் உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்புக்கள் மற்றும் கடல்வாழ் உயிரியல் பல்வகைமை ஆகியவற்றிற்கான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கவும். தொடர்புடைய சர்வதேச விதிகளை ஆதரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  தெரிவித்தார்.

எனவே, கிறீன்பீஸ் ஆனது மெடிரறேனியன் கப்பல் நிறுவனத்திடம் (MSC) இருந்து கப்பலிலிருந்த சரக்குப் பொருட்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் விரைவான துப்பரவு நடவடிக்கையையும், விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் சுதந்திரமான மதிப்பீட்டிற்கும் எம். எஸ். சீ எல்சா 3 கப்பல் விபத்தினால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பு உயிர்ப்பல்வகைமை இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டு திட்டத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றது.

மேலும் எம். எஸ். சீ நிறுவனமானது அனர்த்தம் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளது. எனவே பொறுப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல என்பதும் எம். எஸ். சீ நிறுவனத்திற்கு நினைவூட்டுகின்றோம்.

இலங்கையில் ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது: மனோ கணேசன் தெரிவிப்பு

‘‘ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது.

இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை.

ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் கைவிட்டு விட வேண்டாம் என உங்களை கோருகிறேன்‘‘ என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கை வந்துள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வோல்கர் டேர்க்  நேரடியாக தெரிவித்தார்.

ஐநா மனித உரிமை ஆணையருக்கு, எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் மக்கள் மத்தியில் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு உங்களை கோருகிறேன்.

இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும்  மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பில் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன்.

இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

யாழ் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி புதன்கிழமை (25) ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன: வோல்கர் டேர்க் கருத்து

தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் (UN High Commissioner for Human Rights Volker Türk) இதனை தெரிவித்தார்.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல்

தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர்.

இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள்.

இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும். அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா விளக்கு” போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ” அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (24) மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைக் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், திருமலை மாவட்ட ஆயர் வண.நோயல் இம்மனுவல், வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரின்; கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட 2021.01.15 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை முன்வைத்த சிறீதரன் எம்.பி, எழுத்துமூல கோரிக்கை ஒன்றையும் ஆணையாளரிடம் நேரிற் கையளித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய அனைத்து அரசாங்கங்களும் சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதத்தை நிறுவனமயமாக்கி, ஈழத்தமிழர்களின் அடையாளத்துவ வாழ்வை சிதைத்து, சுயாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அடியோடு இல்லாமற் செய்தன. இதற்காக நீண்டகாலம் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்ட பின்னர், ஆயுத மோதல் ஏற்பட்டிருந்ததடன், அதன் உச்சமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்ற இனப் பேரவலம் நிகழ்ந்திருந்தது.

போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை  தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடுசெய்யத்தக்கவையல்ல என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அதேவேளை இலங்கை அரசு OHCHR ன் OSLAP திட்டத்தை தடையின்றி அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.

இத்தகைய உள்ளக அரசியல் நிலைமாறுதல்களை கடந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமென தங்களை தயவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நீதிக்கான பாதைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும் சமநேரத்தில்; ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் ஒரு தேசமாக அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்ற அடிப்படையில் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை தங்கள் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும் – என்றுள்ளது.

செம்மணி புதை குழி: நீதி கோரும் போராட்டம்

Chemmani செம்மணி புதை குழி: நீதி கோரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்றைய தினம் இறுதி நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் கடந்த 23ம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்றைய தினம் வடக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்றைய தினம் பேரணி ஒன்று ம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவர் செம்மணிக்கு செல்வாராயின் அவரிடன் கையளிப்பதற்கு கடிதம் ஒன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்யாவிட்டால், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் குறித்த கடிதம் கையளிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் வலி சுமந்த கதையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தை ஏற்பாடு செய்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் : அருட்தந்தை லியோ

யுத்தம் முடிந்தும் மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் இதனால்தான் அரசாங்கமும் இராணுவமும் காணிகளை விடுவிக்காது இழுத்தடிப்பு செய்துவருகிறது என அருட்தந்தை லியோஆம்ரோங் அடிகளார் தெரிவித்தார்.

எமது நிலம் எமக்கு வேணும்  என்ற கோரிக்கையுடன் வலிகாமம் வடக்கு  மயிலிட்டிமக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து தொடர்சியாக நான்காவது நாளாக  செவ்வாய்க்கிழமை (24) போராடிவருகிறார்கள்  இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்போராட்டம் இந்த மக்களின் அடிப்படை உரிமையை கேட்கிறார்கள் இது தமிழர்களின் குரலாக ஒலிக்கப்படுகிறது எமது நிலத்தை அபகரித்து வைத்திருப்பது என்பது இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே பார்கவேண்டியுள்ளது.

இது தனியே மனித உரிமை மிறல் மட்டுமல்ல இன அழிப்பின்செயற்பாடாக விளங்குவதாக நாங்கள் நோக்கவேண்டியுள்ளது .

இந்த இடத்து மக்கள் 1990 ஆண்டு முதல் வெளியேற்ரப்பட்டு  2009 ஆண்டு யுத்தம்  முடிவடைந்த பின்னர் இல் ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்ட சூழலில் குறிப்பாக 2013 ஆம் ஆண்டு அந்த ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளது .

இது வேனையான விடயமாகும். தற்போதும் கூட ஆலயங்களுக்கு சென்று வழிபட முடியாதுள்ளது ,வாழ்விடங்களுக்கு செல்லமுடியாதுள்ளது.

தங்களது நல்லதண்ணீர் கிணறுகளில் தண்ணீர் அள்ளி குடிக்க முடியாதவர்களாக அந்த மக்கள் இருக்கிறார்கள்.இவ்வாறாக பல வேதனைகளுடன் பல மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் செந்த நிலங்களில் மக்கள் வாழவிடாது அரசாங்கமும் இராணுவமும் தடுத்து வருகிறார்கள் என்றால் இதனை இன அழிப்பின் மற்றோருவடிவமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இன்றைய சூழலில் மயிலிட்டியில் செந்த நிலம் வேண்டும் என்று போராடுகிறார்கள் இன்னும் சில துரம் தள்ளி சென்றால் தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் கட்டப்பட்ட விகாரையை அகற்றுமாறு மக்கள் போராடுகிறார்கள்.

செம்மணியில் மனித புதைகுழிகளை சர்வதேச கண்காணிப்போடு அகழ்வாராட்சி செய்யவேண்டியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக்கோரியும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியும்  போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இத்தகைய போராட்டங்கள் வடக்கு கிழக்கில் தான் இடம்பெற்றுவருகிறது.

யுத்தத்தால் அளித்தார்கள், காணிகளை அபகரிக்கிறார்கள் போராட்டம் செய்தால் ஒடுக்கிறார்கள் இந்தநிலை தென்னிலங்கையில் இல்லை. காரணம் தமிழ்மக்களை சிறுபான்மை யாக பார்ப்பதும் ,நாங்கள் தேசிய இனம் இல்லை என மறுப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

மக்களின் தேவைகளோடு அவர்களின் குரலாக நாங்கள் இருக்கின்றோம் . மக்களின் கோரிக்கை நியாயமானது ,தேவையானது அவசியமானது என்றார்.

வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி, வொல்கர் ரெக்குடனான சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மனித உரிமை பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியாhக குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர விடயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் புதிய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து தேசிய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் வொல்கர் ரெக்கிற்கு விளக்கியதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கை நாளைய தினம் (25) சந்தித்து கலந்துரையாடவுள்ளன.

நாளை இரவு இந்த சந்திப்பு இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.  இதேவேளை, சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் (24) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை, நேற்று (23) பிற்பகல் இலங்கையை வந்தடைந்த வொல்கர் ரெக், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகளை காப்பது தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தாம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொறிமுறையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வொல்கர் ரெக், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை அடுத்து இலங்கையின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்ததை அடுத்து இலங்கை முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் உள்ள இஸ்ரேலிய நாட்டினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 18 வரை இஸ்ரேலில் இருந்து 10 ஆயிரத்து 899 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதேநேரத்தில், ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஈரானில் இருந்து 5 ஆயிரத்து 782 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.