Home Blog Page 103

செம்மணி மனித புதைகுழி: இதுவரையில் 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம்- செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின்  எலும்புக்கூடுக்கு அருகில்,  ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள  38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10, சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது,” என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார்.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார்.

“முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது.”

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார்.

செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார்.

1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது.

செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம்.

யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

“சிரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் திட்டத்தை நிறுத்துவதற்காக” இந்த உத்தரவு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸின் இரசாயன ஆயுதத் திட்டம் தொடர்பாக சிரியா அரசாங்கம் சொத்துக்களை முடக்கி, சிரியாவிற்கு ஏற்றுமதி செய்வதை மட்டுப்படுத்திய 2004 அறிவிப்பை இரத்துச் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 4வது மதிப்பாய்விற்கு IMF அங்கீகம்

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 4வது மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகரித்துள்ளது.

அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.

செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா  மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஐந்தரை நாட்கள் முடிவடைந்தது. இன்றைய நாளில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித உடல் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் உடலுடன் சப்பாத்து குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. அதனுடைய எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய செம்மணி புதைகுழி வழக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சட்ட வைத்திய அதிகாரி அகழ்வு நடந்த பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார். தற்போது அகழ்வு பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரியோடு பேசி கடந்த அகழ்வு பணி தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.

பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது.

ஏற்கனவே தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினரால் அடையாளப்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பகுதிகள் நீதிமன்ற அனுமதிக்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய தொல்லியல் துறை மாணவர்களின் உதவியுடன் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் சேர்ந்து தற்போது துப்பரவாக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்கப்பட்டன.
ஏற்கனவே நீல நிற புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான என்புக் கூட்டுத்தொகுதி இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூட்டுத் தொகுதிகளும் இன்று அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்  தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான பழைய வழக்கையும் தற்போதைய புதிய வழக்கையும் ஒரே வழக்காக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வொல்கர் டர்க்-கின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் இருக்கலாம்: சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் இலங்கை விஜயத்தின் பின்னணியில் சில உள்நோக்கங்கள் இருக்கலாம் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மரணித்திருக்கும் நிலையில், 15 – 20 வருடங்களுக்கு முன்னர் உள்ள புதைக்குழியொன்றை பார்வையிடுவதற்கு வொல்கர் டர்க் இலங்கைக்கு வருகைத்தந்தமையின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட பகுதியில் பல சிங்களவர்களும், முஸ்லிம்களும் வசித்துவந்த போதிலும், இன்று அவர்கள் இல்லாமல் போயுள்ளனர்.அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் மற்றும் ரெலோ போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் பலரையும் விடுதலை புலிகள் கொலை செய்துள்ளனர் என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுடைய நூற்றுக்கணக்கான வதைமுகாம்களும் இருந்துள்ளதுடன், அங்கு பலர் அழைத்துச் செல்லப்படுவதை மக்கள் அவதானித்தமை தொடர்பிலும் எமக்கும் யுத்த காலத்தில் தகவல்கள் கிடைத்திருந்தன.

துணுக்காய், மாங்குளம் பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வதைமுகங்களும் கண்டறியப்பட்டிருந்ததுடன், அங்கு பலர் வதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்;டமை பலரும் அறிந்தவொரு விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினால், இன்று யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகளாக காட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதற்கு வழியை வகுக்கும் வகையில் அமைந்துள்ளன என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மீள நிகழாமையே தற்போது அவசியம்: விமல் வீரவங்ச

உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடி கடந்த காலத்தை தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயம் என்றும் மாறாக எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இடம்பெறும் அகழ்வு பணிகளின் போது பாடசாலை மாணவரின் நீல நிற பை ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து வினவப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அகழ்வு பணிகள் நிறைவடையும் வரையில் எம்மால் இறுதி முடிவுக்கு வர முடியாது.
தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் ஆடை அல்லது அதிலிருந்த இலக்க தகடு ஏதாவது மீட்கப்படுமாயின் விசாரணைகள் வேறு பக்கம் திரும்பும்.
இன்னும் 15 நாட்களுக்கு அங்கு கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, அந்த 15 நாட்களுக்கு பின்னர், எமக்கு இறுதி முடிவுக்கு வரமுடியும் என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது யுத்தம் நிலவிய நாடாகும். சகல பக்கங்களில் இருந்தும் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, உயிரிழந்தவர்களின் யாருடைய துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள்? என்பது மட்டுமே தெரியாமல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடி கடந்த காலத்தை தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயமாகும். மாறாக எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டும்.எனினும் இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மீண்டும் வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சாடியுள்ளார்.

இதனூடாக இலங்கைக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. சர்வதேச சக்திகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இலங்கையில் இனங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையே காணப்படுகிறது. அவர்களின் தனிப்பட்ட அரசியலுக்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிதியுதவி குறைப்பால் இலட்சக் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தை செலுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது.

இதன்படி, குறித்த நிதி குறைப்பானது, 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்கு புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழமைவாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் எனவும், குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப்பின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக ‘குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்’ என்று தி லான்செட் கூறியுள்ளது.

அத்துடன், அமெரிக்க நிதியுதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவை காணும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவாரம் ஸ்பெயினில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான உதவி மாநாடு ஒன்றுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடவுள்ள நிலையில், தி லான்செட்டின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
133 நாடுகளின் தரவுகளுக்கு அமைய, 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யு.எஸ்.எய்ட்டின் நிதியுதவியினால் 91 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு

அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு கூறினார்.

உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

எனவே, ஒழுக்கமான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பௌத்த மதத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதில் உபசம்பதா போன்றன மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.

மேலும், சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார்.

இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும்,அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும், இனவாதம் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.