ஈழத்தமிழர் வரலாற்றில் 10.05. 2025 அதி முக்கிய நாளாக மாறியுள்ளது. அன்று கனடாவின் பிரம்டன் நகரில் அதன் மேயர் மாண்பமை பற்றிக் பிரவுனால் திறந்து வைக்கப்பட்ட ஈழத்தமிழின அழிப்பு நினைவகம் 2009 சிறீலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நினைவகமாக மட்டுமல்லாது ஈழத்தமிழர்கள் மேலான சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற அரசாங்கங்களின் 1956 முதலான அனைத்து ஈழத்தமிழர்கள் மேலான இனஅழிப்பு வரலாற்றுக்கும் இந்திய அமைதிப்படையின் ஈழத் தமிழின அழிப்பு வரலாற்றுக்குமான கூட்டு மொத்தமான வரலாற்று நினைவுச்சின்னமாக உலக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
உலக மக்களின் குரலாக கனடாவில் இருந்து எழுந்துள்ள இந்த ஈழத்தமிழின அழிப்புக்கான முதற்குரல் உலகெங்கும் உள்ள நாடுகளிலும் ஈழத்தமிழரின் இனஅழிப்புக்கான நீதிக்கான குரலாக அனைத்துலக சட்டங்களினால் தண்டனை நீதியும் பரிகாரநீதியும் வழங்கப்பட வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் 16 ஆண்டுகால மக்கள் போராட்டத்தின் வெற்றி முகத்துக்கான முதல் மைல் கல்லாக அமைந்துள்ளது.
கூடவே மூவாயிரம் நாட்களுக்கு மேலாக சிறிலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் நீதிக்காக வெய்யிலிலும் மழையிலும் காற்றிலும் தங்கள் உயிரையும் உடலையும் போராட்டக் கருவியாக்கி உள்ள உறுதியுடன் நடுத்தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்கும் தாய்மார் தந்தையர் உடன்பிறப்புக்கள் உறவினர்களுக்கு முதல் நம்பிக்கையொளியாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இதற்காக பாதிப்புற்ற ஈழத்தமிழர்களுடன் உலகெங்கும் உலகஇனமாகவுள்ள அனைத்து ஈழத்தமிழர்களும் தங்கள் இதயநன்றியை பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுனுக்குத் தெரிவிப்பதில் இலக்கு ஆசிரிய குழுவும் இணைந்து கொள்கிறது. அத்துடன் அனைத்துலக நாடுகளினதும் அமைப்புக்களிதும் ஈழத்தமிழர்கள் குறித்த கடமையையும் பொறுப்பையும் உணர்த்தும் இந்த கனடாவின் ஈழத்தமிழின நினைவகத் தொடக்கம் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமைக்கான முதல் உலக ஏற்புடைமையாகத் தொடக்கம் பெறும் அரசியல் மாற்றத்தை பலப்படுத்தக் கூடிய முறையில் தமிழ்த் தேசியப் பேரவையினர் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் அன்ரூ பற்றிக் சிறிலங்காவுக்கான இந்தியத்துணைத்தூதுவர் பாண்டே, சிறிலங்காவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்டன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ ஆகியோரை அவர்களுடைய அலுவலகங்களில் சந்தித்து ஈழத்தமிழர்களின் வாழ்விட நிலங்களையும் வாழ்வாதார நிலங்களையும் சிறிலங்காவும் பௌத்த பிக்குகளும் சிறிலங்காப் படைகளும் கூட்டாக சிறிலங்கா அரசுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் அரசபடையினருக்கும் சொந்தமானதாக மாற்றும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ளமைக்கு இலக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இதனை தமிழ்த்தேசியப் பேரவை மூன்று விடயங்களாக வகுத்துத் தொகுத்து உலகின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளமை தமிழ்த்தேசியப் பேரவை முறைசார் முறையில் ஈழத்தமிழர் தேவைகைளை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ள அமைப்பாக முன்னேறுகின்றனர் என்பதற்கான முதற் சான்றாகியுள்ளது. 6000 ஏக்கர் ஈழத்தமிழர் நிலங்களை அநுர குமார திசநாயக்காவின் அரசு அரசவர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தியமை உலகுக்குத் தெளிவாக்க்பபட்டு அந்த வர்த்தமானி அறிவித்தலை உலக நாடுகளின் அழுத்தத்தால் மீளப் பெற வைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளமை தமிழசுக்கட்சியினர் ஈழத்தமிழர்களின் எந்தக் கோரிக்கையையும் கவனத்தில் எடுக்காத சிறிலங்கா அரசிடம் 28ஆம் திகதிக்குள் பதில் தருமாறு கோரி உள்ளக தன்னாட்சி உரிமை ஈழத்தமிழருக்கு இருப்பது போல உலகுக்குக் காட்ட முனைந்தமையை முறியடித்து ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமை இழக்கப்பட்டுள்ள உண்மைநிலையை வெளிப்படுத்தி அனைத்துலகத் தீர்வுக்கு தமிழ்த்தேசிய பேரவை முயற்சித்துள்ளமை உலகம் ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கத் தொடங்குவதற்கான முதல் அழைப்பாகவும் உள்ளது. ஈழத்தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர் வாழ்வில் உள்ள நடைமுறை எதார்த்தத்தை எடுத்து விளக்கி மூன்று மாதத்துள் காணிகளுக்கான உரிமத்தை எவ்வாறு ஈழத்தமிழர்களால் சான்றாதாரப்படுத்த முடியுமென்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளமை விடயத்தை உலகு தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான சிறப்பான செயலாகவுள்ளது.
மேலும் குருந்தூர் மலையில் விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததென பௌத்தபிக்குகளும் தொல்லியல் திணைக்களமும் அகப்படுத்தியுள்ள 79 ஏக்கர் காணிக்கு அப்பால் விவசாயிகளின் 325 ஏக்கர் காணியை விவசாயிகள் விவசாயம் செய்யலாம் எனச் சிறிலங்காவின் அரசத்தலைவர் அனுமதித்த நிலையிலும் அரசத்தலைவரின் கட்டளையையும் மீறி பௌத்த பிக்குகளும் படையினரும் அங்கு விவசாயம் செய்யச் சென்றவர்களைக் கைதாக்கி அவர்களின் கருவிகளையும் பறித்துள்ள சட்டவிரோத செயல் குறித்தும் தமிழ்த்தேசியப் பேரவை தூதுவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளமைபாராட்டுக்குரியதாகவே உள்ளது.
முன்றாவதாகத் தையிட்டி விவகாரமும் அது எத்தகைய அப்பட்டமான சட்டவிரோதச் செயலாக உள்ளதென்பதையும் உலகின் கவனத்துக்கு தூதுவர்கள் வழி கொண்டு வந்துள்ளமை சிறப்பான வொன்றாகவே உள்ளது.
தமிழரசுக்கட்சி சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைக்குள்ளேயே அனைத்தும் என்ற நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உரியதை உரிய முறையில் செய்துள்ளமை தமிழ்த்தேசியப் பேரவை ஈழத்தமிழர்களின் தேசியப் பேரவையாக பெருவளர்ச்சியடைவதற்கான முதலடியாக உள்ளதென்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.
அதே வேளை சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மே மாதம் 14ம் நாள் அரச அழைப்பால் இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷை தனது அமைச்சுக்கு வருவித்து எவ்வித ஆதராமுமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கும் மற்றும் அதன் அடிப்படையிலான ஈழத்தமிழின அழிப்பு நினைவுச்சின்ன நிறுவுதலுக்கும், கனடாவின் ஒன்ராறியோ மாகாணப் பாராளுமன்றத்தின் 104ம் இலக்க அறிவூட்டல்வாரச் சட்டத்தின் வழி மே மாதம் 12 முதல் 18 வரை ஒரு வாரம் ஈழத்தமிழின இனஅழிப்பு அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இவை சிறிலங்காவில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கான குழப்பத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டுத் தலையீடெனவும் எச்சரித்துள்ளார். இதன்வழி சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தியும் எத்தகைய அரசியல் கொள்கையை கோட்பாட்டை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டுள்ளது என்பது உலகுக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பும் போக்கும் இன்றுவரை அன்று போலவே தொடர்கிறது என்பதற்கு இதனை விடச் சிறப்பான உதாரணம் இனியொன்று தேவையில்லை என்பதை தேசிய மக்கள் சத்திக்கு வாக்களித்த ஈழத்தமிழர்களுக்கு இலக்கு எடுத்தியம்ப விரும்புகிறது.
அதே வேளை இவ்விடயத்திலும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் மாண்பமை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் “ஈழத்தமிழர்களுக்கு இனஅழிப்பு எதுவும் இடம்பெறவில்லையென்றால் எதற்காக சிறிலங்கா அனைத்துலக விசாரணைக்கு அஞ்சுகிறது. எதற்காக றோம் பிரகடனத்தில் கையெழுத்திடத் தயங்குகிறது. உண்மைக்கு அரசு அஞ்சுகிறது என்பதே எதார்த்தம்.” என உரிய நேரத்தில் உரிய முறையில் பதிலளித்து உலகளாவிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கும் அவருக்கு இலக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறது.
உலக அளவில் பங்காண்மை கூட்டாண்மை வழியாகவே அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வுகளை நோக்கி நகரும் இன்றைய நிலையில் தமிழ்த் தேசியப் பேரவை ஈழத்தமிழர்களின் தேசநிர்மாணத்தை மக்களின் மனிதவலு, மண்ணின் மூலவளம், அனைத்துலக ஈழத்தமிழரின் மூலதன ஒருங்கிணைப்பு வழியாக முன்னெடுக்கும் ஈழத்தமிழர்களுக்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக கூட்டாண்மையாக பங்காண்மையாகப் பெருவளர்ச்சி அடைய வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
மே 22 உடன் ஈழத்தமிழர் அரசற்ற தேச இனமாக மாற்றப்பட்ட 53 வது ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் மே 14 உடன் ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனமாக அமைந்து 49 ஆண்டுகள் நிறைவு பெறும் நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரவை 1977 ஈழத்தமிழ் மக்களின் குடியொப்ப ஆணையை சனநாயக வழிகளில் நிலைநிறுத்தும் தனது தாயகக்கடமையை முன்னெடுப்பதற்கான ஈழத்தமிழ் மக்கள் அமைப்பாக வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். பிரிவினையல்ல வாழ்வியல் உரிமை ஈழத்தமிழர் இறைமைப்பிரச்சினை. பயங்கரவாதமல்ல ஈழத்தமிழரின் மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் அடிப்படை மனித உரிமைப் போராட்டம் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது கனடாவை முன்னிறுத்தி உலக நாடுகள் அனைத்தும் உணர வைக்க வேண்டியதே உண்மையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இலக்கின் எண்ணம்.
ஆசிரியர்