சனவரியில் தொடங்கவுள்ள புதிய அரசியலமைப்புத் தயாரிப்பில் தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 320

சிறிலங்காவின் அமைச்சர் அவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகள் மக்களிடம் குடியொப்பத்திற்காக முன்வைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஜனவரியிலேயே புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வரும் இலங்கையின் முக்கிய தமிழ் நாளிதழான வீரகேசரி 29.12. 2024 ஆசிரிய தலையங்கம் மூலம் மீளவும் அழைப்பு விடுத்துள்ளதை இலக்கும் வரவேற்கிறது. இந்த அழைப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்குமான ஒரு அவசர அழைப்பாக அமைகிறது. ஏனெனில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் மக்களால் நடாளுமன்றத் தேர்தலில் ஏற்கப்பட்டவர்களும் ஏற்கப்படாதவர்களும் கூட புதிய அரசியல் அமைப்பு குறித்து ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டு அனைவருக்கும் ஏற்புடைய ஆலோசனைகள் அடங்கிய தமிழர்களின் அரசியல் அமைப்பு கட்டமைப்பினை முன்வைக்கின்றனர். இதற்காக அவர்களை பாராட்டுகிற அதே வேளை தாயகத்திலும் புலத்திலம் உள்ள அரசியல் அமைப்புக்குத் தங்கள் கருத்துகளை வழங்க அக்கறையுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழரும் தங்கள் கருத்துகளைப் புதிய அரசியலமைப்பு குறித்துத் குறுகிய காலத்தில் தெரிவிக்க வல்ல அமைப்பாக இந்தக்கட்டமைப்பை மாற்றினால்தான் அனைத்து ஆர்வம் உள்ளவர்களின் எண்ணங்களை உள்வாங்கிய பலமான அரசியல் அமைப்புக்கான ஆலோசனைத் தொகுப்பாக அது அமையும் என்பது உறுதி.
அதே நேரத்தில் இலங்கைத் தீவில் இயல்பாகவே உள்ள தமிழ், சிங்கள தேச இனங்களினதும் இறைமைக ளின் சமத்துவத்தன்மை அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் மதிக்கப் பெற்று, ஈழத்தமிழர்களின் தாயகப் பகுதிகளை ஈழத்தமிழர்களும் சிங்களவர்களின் தாயகப்பகுதிகளைச் சிங்களவர்களும் தங்களுக்கு இயல்பாகவே உள்ள தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில பொருளாதார வளர்ச்சிகள் வேகம் பெறக் கூடிய வகையில் கூட்டாண்மை பங்காண்மைகளுடன் பேணி வளர்க்க உறுதியளிக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கைத் தீவின் கூட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சிகளை, பாதுகாப்பை, நிதி உறுதிப்பாட்டை, மதிப்பலத்தை வெளிப் படுத்தி, அதனைத் தங்களுடன் சமமான குடிகளாக சமத்துவமான அரசியல் உரிமைகளைக் கொண்டவர்களாக வாழும் முஸ்லீம் மக்கள் மலையகத் தமிழர் ஆகியோரின் பங்களிப்புடனும் உறுதிப்படுத்தத் தக்க வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலே இலங்கைத் தீவில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் நடைமுறைச் சாத்தியமாகும். நாம் சிறிலங்கன் அல்ல இலங்கைத் தீவினர் என்ற மனநிலை அனைத்து மக்களிடையும் உறுதிப்பட்டுச் சிறிலங்காவினர் அனைவருக்குமான சமத்துவ ஆட்சியென அமையாது இலங்கைத் தீவினர் அனைவருக்குமான சமத்துவமான ஆட்சிக்கானதாகப் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அனைவரும் சமமான சமுக பொருளாதார அரசியல் ஆன்மீக வளர்ச்சிகளில் பாதுகாப்பான அமைதியுடன் வாழ்தல் நடைமுறைச்சாத்தியமாவதற்கான முறையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்கு இன்றைய தேசிய மக்கள் சக்தியின் அரசுக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இறைமையை முன்னிறுத்தி தீர்வுத்திட்டங்களைச் சிந்திக்குமாறும் முயற்சித்துக் கைவிடப்பட்ட பழைய தீர்வுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஏற்ப அனைத்துலகத்தால் வற்புறுத்தப்படக்கூடிய அதே வேளை ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்யக் கூடிய புதிய முறைமைகளை முன்னெடுத் தல் காலத்தின் தேவையாக உள்ளது.
ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைப் பிரச்சினைக்கு வித்திட்ட காலனித்துவ பிரித்தானியாவின் இன்றையப் பிரதமரிடம் அந்தத் தவற்றை மாற்றியமைக்கத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களால் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் மீளப்பெற 1977இல் ஈழத்தமிழரின் குடியொப்பத்தால் உறுதிப்படுத்தபப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையின் குரலாக அனைத்துலக ஆதரவைப் பெற்றுத் தருமாறு கோரி இவ்வாண்டு பெப்ருவரி 4ம் திகதி ஈழத்தமிழர்கள் கரிநாளாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டு வரும் சிறிலங்காவின் சுதந்திர நாளன்று காலை 11 மணிக்கு இலண்டனில் ஈழத்தமிழர்கள் இன்றைய பிரித்தானியப் பிரதமர் சேர் கியர் ஸ்டார்மோருடைய 10ம் இலக்க டவுனிங் ஸ்ரீட் பிரதமர் இல்லம் நோக்கி சிறிலங்காவின் இலண்டன் தூதரகத்தின் முன்னிருந்து ஈழத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைத்துலக தமிழர் பேரவை அனைத்துலக தமிழ் ஈழ ராஜதந்திரக் கவுன்சில் போன்ற ஈழத்தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து பேரணியொன்றை நடாத்தவுள்ளனர். இது இலண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் தேசமாக எழும் பேரணியாக எழுச்சியுற இப்போதிருந்தே இலண்டன் ஈழத்தமிழர்களும் தங்களிடையுள்ள வேறுபாடுகளை மறந்து அனைத்து நிலையிலும் உழைக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
நீண்டகால நோக்குடன் தேசத்தைக் கட்டியெழுப்புதலை மையமாகக் கொண்ட அரசியல் அமைப்பு தயாரிப்புச் செயற்றிட்டத்தை ஒரு போதும் ஊதியமற்ற தன்னார்வ அடிப்படையிலான செயற்பாடுகள் மூலம் செய்ய முடியாது. செயற்பட்டாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் பொழுதே அவரின் திறனை முழு அளவில் பயன்படுத்தி அச்செயற்றிட்டத்தைத் திட்டமிட்டபடி திட்டமிட்ட காலத்துள் நிறைவேற்ற முடியும் என்கிற முக்கியமான கருத்தினை கடன் வர்த்தகம் மற்றும் பொருளியல் ஆய்வாளரும் கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான உமேஷ் மொரமுதலி தனது எக்ஸ் தளத்தில் சிறிலங்காவின் அரசத்தலைவர் அரசாங்கத்துக்காப் பலர் தன்னார்வ அடிப்படையில் பணியாற்றுகிறார்கள் எனக் கூறியமைக்குத் தனது பதில் கருத்தாகக் கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்தார்.
இவ்விடத்தில் சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை மறுப்பின் விளைவாகவும் அதன் ஈழத்தமிழர் பண்பாட்டு இனஅழிப்பின் தொடக்கமாவும் 1974 ஜனவரி 10 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 ஈழத்தமிழர்களின் உயிர்களை இழக்கவைத்த பண்பாட்டு இனஅழிப்பு குறித்து 51 ஆண்டுகளாக எந்த அனைத்துலக நீதியையும் பெற இயலாதிருப்பதைச் சிந்திக்கையிலும், ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னர் கடந்த பதினைந்தாண்டுகளாகத் தங்களின் தேசத்தைக் மீள் கட்டியெழுப்ப இயலாத நிலையைச் சிந்திக்கையிலும், ஊதியமற்ற தன்னார்வ செயற்பாட்டளார்களைப் பயன்படுத்தி முயற்சித்து வருவதே திறனற்றதாகச் செயற்பாடுகள் பலனின்றிப் போனதற்கான முக்கிய காரணி என எண்ணத் தோன்றுகிறது. வேலை விபரிப்பு வழங்கப்படாது ஊதியமின்றிய செயற்றிட்டத்துக்கான பலங்கள் பலவீனங்கள் சந்தர்ப்பங்கள் அச்சங்கள் உள்ளடக்கிய வர்த்தகத் திட்டமின்றி எதிர்கொள்ளும் அபாயங்களுக்கான முகாமைத்துவத் திட்டமின்றி வெறும் தன்னார்வச் செயற்பாட்டை மட்டும் ஊக்குவித்ததன் விளைவே ஈழத்தமிழர்களின் எந்த வொரு திட்டமும் துறைசார் ஆற்றலாளர்களின் வளத்துணைகளின்றி அனைத்துல ஈர்ப்பினைப் பெற இயலாதனவாக எதுவித பலனுமின்றிச் செயலிழந்து போயின என்பது வெளிப்படையான உண்மை. இந்த ஆண்டிலாவது ஒருமைப்பாட்டுடன் ஊதியத்துடன் கூடிய செயற்பாட்டாளர்கள் மூலம் செயற்றிட்டங்களை, அதற்கான பொருளாதார பலத்தையும் இணைத்துத் திட்டமிட்டு மனிதவளங்களை உறுதிப்படுத்தி அவற்றின் இலக்கினை அடைய ஈழத்தமிழர்கள் இயன்றளவு முயற்சிக்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

Tamil News