சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள இன்றைய அரசத்தலைவராகத் திகழும் அநுரகுமரதிசநயாக்கா, அவர் தலைவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்க்கும் மேலாகக் கொண்ட நிலையில் எதனையும் சட்டவாக்கம் செய்ய வல்ல பலம் மிகுந்த அரசாங்கத்தையும் தனதாகக் கொண்டு விளங்குவதால் அனைத்துலக நாடுகளால் மதிக்கப்படும் அரசியல் தலைமையாகவும் திகழ்கின்றார். இதனை அவர் ஆட்சியமைத்த பின்னர் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே ஜே. வி. பி யுடன் தங்களுக்கு இருந்த வேறுபாடுகளை மறந்து அவரின் அரசுடன் உறவுகளைப் பலப்படுத்துவதில் காட்டி வரும் அக்கறை தெளிவாக்குகிறது.
இந்த தனது பலமான அரசு நிலையினைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைக்கான நியாயமான முயற்சிகளை இனவாதம் எனவும் சிங்களத்தேச இனத்துக்கு சமானமான ஈழத்தமிழர் தேச இனத்தை சமுகம் எனவும்; ஈழத்தமிழர் தாயகத்தை சிறிலங்காவின் வடக்கு எனவும் கிழக்கு எனவும் சமுகங்களுக்கான சமத்துவத் தீர்வு எனவும் இன்று பலவாறான கருத்தியல்களை அநுர அரசு உருவாக்கி வருகிறது.
இது சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ஜே ஆர் ஜயவர்த்தனாவும் தங்களின் பலமான அரசாங்கங்ளைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களை அரசற்ற தேச இனமாக்கி இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பால் ஈழத்தமிழரின் நிலத்தை ஆக்கிரமிக்க எடுத்த அதே பாணியில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியையும் மாற்றி விடும் அபாயம் உள்ளது என்பதை எதிர்வு கூறுகிறது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் உலகளாவிய நிலையிலான ஒருமைப்பாடே இந்த அநுர அரசின் நரித்தந்திர முயற்சிக்கான ஒரே தடையாக அமைய முடியும் என்பதையும் இலக்கு இடித்துரைக்க விரும்புகிறது.
இந்நிலையில் இந்திய அரசின் அழைப்பின் பெயரில் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியாகிய இவ்வாரத்தின் 15ம் நாள் முதல் 17ம் நாள் வரை தனது அணுகுமுறைப் பயணத்தைத் தொடங்கவுள்ளார். அணுகுமுறைப் பயணம் என்பது இருநாடுகளுக்கும் இடையில் உள்ள நட்பினையும் மூலோபாயத் தொடர்புகளையும் வலுப்படுத்துவதற்கான நடைமுறையில் உள்ள உடன்படிக்கைளை மீளாய்வு செய்வதற்கும் புதிய உடன்படிக்கைகளுக்கான திட்டமிடல்களுக்கும் அரசுத்தலைவர் ஒருவர் நாட்டுக்கு வருகின்ற பயணத்தைக் குறிக்கும். இந்திய ஜனாதிபதி அவர்களால் சம்பிரதாய முறைப்படி இந்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்தியா செல்லும் சிறிலங்கா ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மற்றும் தேவையான அமைச்சர்களையும் சந்தித்து நேருக்கு நேரான உரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட பொருளாதார திட்டங்கள் ஓத்துழைப்புக்கள் குறித்த முன்னாள் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ஆண்டு யூலை 24 இல் வெளியிட்ட தொலைநோக்கு அறிக்கை இந்தியாவும் இலங்கையையும் இறைமையில் பின்னிப்பிணைந்த பாதுகாப்பு பொருளாதாரக் கூட்டாண்மைக்குள் நிலைபெறுவதை உறுதி செய்வதாகவே அமைந்தது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு நடை முறைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பில் உள்ள அநுரகுமர திசநாயக்கா இவற்றை எவ்விதம் எதிர்கொள்ளப் போகின்றார் என்பதை அவர் இந்தியாவை அடுத்து சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அணுகுமுறைப் பயணமே முடிவு செய்யும்.
இவ்விடத்தில் தேசிய மக்கள் சக்தியை “இடதுசாரித் தோழர்களாக”த் தொழுதெழ முயலும் ஈழத்தமிழர்களுக்குச் சிங்கள மார்க்சியம் எத்தகையது என்பதை விளக்கும் வகையில் ‘எல்லோருடைய பார்வையும் எல்லோருடைய குரலும்’ என்ற விருதுவாக்கியத்துடன் செயற்படும் ‘மொடன் டிப்ளோமசி’ ஆய்வு மின்னிதழில், செப்டெம்பர் 28ம் திகதி கட்மாண்ட் நேபாலில் உள்ள தெற்காசிய ஆய்வுகள் அபிவிருத்திகள் நிறவனத்தின் ஆய்வாளர் சகஸ்ராண்சுதாஸ் (Sahasranshu Dash) எழுதிய “சிறிலங்காவின் மார்க்சிய தேசியவாதமும் தமிழர் பிரச்சினையும்” என்ற ஆய்வுக்கட்டுரையில் அரகலிய போராட்டத்தில் பங்குபற்றிய சிங்கள அரசியல்வாதிகளும் பல்கலைக்கழக அறிவுஜீவிகளும் கூட “சிங்களவரின் நேத்தன்யாகு” எனப்படக்கூடிய மகிந்த ராசபக்சாவை அவருடைய ஊழல்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிகள் குறித்தே ஆழமாக விமர்சித்தார்களே தவிர 2009ம் ஆண்டு பெப்ரவரி
6ம் நாள் முதல் மே மாதம் 18ம்நாள் வரை அவருடைய ஆணையின் கீழ் செய்யப்பட்ட நாற்பது முதல் எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஆடுமாடுகளை வெட்டுவது போலக் கொன்று குவித்த இனஅழிப்புக் குற்றங்கள் குறித்தோ 2009 பெப்ரவரி முதல் 2012ம் ஆண்டுவரை திட்டமிட்ட முறையில் இராணுவத்தினரைக் கொண்டு அவர் செய்வித்த வெளிப்படையான இராணுவ ஆவணமாகவே உள்ள பாலியல் வன்முறைகள் குறித்தோ இது எங்கள் நாடு நாங்கள் எங்கே போவோம் என கமாஸ் பலஸ்தீனியர்கள் போல ஓலிமிட்ட மக்கள் குறித்தோ இஸ்ரேலுக்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் சிங்கள இடதுசாரிகள் கூட எதுவுமே பேசாது மௌனமாகவே அன்று செயற்பட்டனர்” என எழுதியுள்ளமையை மீள்நினைவூட்ட இலக்கு விரும்புகிறது. எனவே அநுர அரசினை இடதுசாரித் தோழர்களின் அரசாகப் பார்த்து ஈழத்தமிழர் ஏமாற்றமடையாது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். ஆயினும் சிங்களவர்களுக்கு ஊழல் ஒழிப்பு குடும்ப ஆட்சி நீக்கம் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சிகள் கல்வி மாற்றங்கள் சட்டத்தின் ஆட்சி போன்ற நல்ல செய்கையில் அநுர அரசு ஈடுபடுகையில் நாமும் பாராட்டுவோம். மேலும் இடதுசாரித்தன்மையுடன் செயற்பட்டு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையையும் தீருங்களென அழைப்பு விடுப்போம்.
இதற்கு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது மக்கள் எண்ணிக்கையில் அல்ல, இறைமைகளின் சமத்துவத்தினை ஏற்கும் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய காலனித்துவத்தால் தீர்க்கப்படாத அனைத்துலகப் பிரச்சினையாக ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக உள்ளது என்ற அடிப்படையினை அநுர அரசுக்குத் தெளிவுபடுத்திட வேண்டும். இதன் வழி புதிய அரசியலமைப்பில் சிங்கள சிறிலங்காவில் வாழும் சமுகமாக (community) ஆக ஈழத்தமிழரைச் சிங்கள பௌத்த பேரினவாத உணர்வில் மாற்றாது வடக்கு கிழக்குத் தாயகத்தில் இறைமையுடன் திகழும் மக்களாக ஏற்று இலங்கைத் தீவின் பாதுகாப்பு பொருளாதாரச் சிக்கல்களில் ஒன்றுபட்டு உழைக்க வழிசெய்யுமாறு வலியுறுத்துவோம்.
14. 12. 2024இல் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18வது ஆண்டு நினை வேந்தலை ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கும் பெருமதிப்புடன் நினைவு கூர்கின்றமையை அநுர அரசுக்குச் சுட்டிக்காட்டி மதிப்புக்குரிய பாலா அண்ணனின் பேச்சுவார்த்தை முயற்சிகளின் எழுத்துக்களையும் ஆவணங்களையும் அநுர அரசு ஒருமுறை பொறுமையாக வாசித்து உணரின் நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் எவ்வாறு இலங்கைத் தீவினை ஈழத்தமிழரும் சிங்களவர்களும் முஸ்லீம் மக்களும் மலையக மக்களும் இணைந்து தன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார எழுச்சிகளை உறுதிப்படுத்தலாம் என்பதையும் இவ்விடத்தில் பரிந்துரையாக இலக்கு முன்வைக்க விரும்புகிறது.
Home ஆசிரியர் தலையங்கம் இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம்...