ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளாம் 27.11. 2024 மாவீரர்நாள், கொட்டிய தொடர் மழை சரியான முறையில் வடிகால்கள் குளங்கள் ஏரிகள் பேணப்படாததாலும் மண் நினைத்தவாறு எல்லாம் அள்ளப்பட்டதாலும் பெரு வெள்ளக் கடலாக ஈழத்தமிழர் தாயகத்தை மாற்றிய நேரத்திலும் அந்த இயற்கைத் துன்பத்தை எல்லாம் கடந்து தாயகத்தில் மாவீரர் துயிலகங்கள் எங்கும் மாவீர்களுக்கு வீரவணக்கம் செய்திட ஈழத்தமிழர் மக்கள் வெள்ளம் கடலெனப் பரந்து விரிந்தது. இக்காட்சி இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் இறைமையையும் தேசியத்தையும் நீக்கலாமெனச் சிங்கள பௌத்த தேசியமும் அதன் கூட்டாண்மைப் பங்காண்மை உலக நாடுகளும் காணும் கனவு பகற்கனவே என்பதை உலகுக்கு உறுதியாகத் தெளிவாக்கியது. கூடவே சனநாயக வழிகளில் ஈழத்தமிழர் தங்களின் இறைமையுடன் கூடிய தாயகத்தில் தங்களின் தனித்துவமான தேசியத்தைப் பேணி தங்களின் பிரிக்க முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் அனைத்துலகத் தொடர்களையும் உறுதிப்படுத்தும் உறுதியின் உறைவிடமாக ஈழத்தமிழர்கள் இன்றும் உள்ளனர் என்பதை 2024 மாவீரர் நாள் சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் மீளுறுதி செய்துள்ளது.
மேலும் தோழர் அநுரகுமார திசநாயக்காவின் புதிய அரசாங்கமும் ஈழத்தமிழர்களுக்கு மாவீரர் நாளை வெறும் இறந்தவரை நினைவு கூறும் வருடாந்த நினைவுநாளாகவே முன்னைய சிங்கள அரசாங்கங்கள் போலவே அனுமதித்தது. மாவீரர் என்ற மதிப்பளிப்பு உச்சரிப்புக் கூட மறுக்கப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது. தேசியத் தலைவரின் வீட்டுக்கு முன்னால் வைக்கப்பட்ட தேசியத் தலைவர் சாதாரண உடையில் இருந்த படத்தைக் கூட அநுர ஆட்சி அனுமதிக்கவில்லை. அம்பாறையில் திருக்கோவிலில் கஞ்சிக்குடிசாறு மாவீரர் துயிலகத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வீதியில் மறித்துப் பொலிசார் வாய்த்தர்க்கம் செய்துள்ளனர். அந்த மாவீரர் துயிலகத்திற்குச் சென்ற வாகனங்களின் இலக்கங்கள் பதியப்பட்டுள்ளன. இவை எல்லாம் இவ்வாண்டும் ஈழத்தமிழர்களின் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், இறந்தவரை விரும்பியவாறு நினைவேந்தல் செய்யும் உரிமை உட்பட அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் இரண்டாந்தரக் குடிகளாக நடாத்தப்பட்டுள்ளனர். இந்நேரத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அனைத்துலக இதழான ‘த டிப்ளோமட்’ இல் அதன் தெற்காசிய செய்தியாளர் சுதா ராமச்சந்திரன் 18.11.2024இல் மேரிலான்ட் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் “முரண்பாடுகள் தீர்வு”
(Conflict resolution) கற்கைத்துறையின் பேராசிரியரும், 2022இல் “சிறிலங்காவில் தேர்தல் அரசியல் – அரசத்தலைவர் தேர்தலைச் சூழ்ச்சித்திறனுடன் கையாளுதலும் சனநாயகமும்” (“Electoral Politics in Sri Lanka: Presidential Elections, Manipulation and Democracy,”) என்ற நூலின் ஆசிரியருமான கீதபொன்கலனைப் பேட்டி கண்டபொழுது அவர் “ஜே.வி.பி சிங்கள தேசியத்துள் ஆழப்புதைந்துள்ளதால் அநுரகுமார திசநாயக்காவின் அரசாங்கத்திடம் தமிழர் தேசியப்பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் எதிர்பார்க்க முடியாது. பொதுவான சிறிலங்காவினர் என்ற அடையாளத்தினை வளரச்செய்து அந்தக் கூடாரத்துள் தமிழர் தங்கள் அரசியல் அடையாளத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென அழைப்பவராகவே அநுர உள்ளார்.” என அநுர அரசியலை இலகுமொழியில் மிக ஆழமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். அதே த டிப்ளோமட்டில்
13.11. 2024இல் அம்பிகை அகிலன் எழுதியுள்ள “மாறும் சிறிலங்காவில் தமிழர் தேசியப் பிரச்சினை-இடதுசாரியான திசநாயக்காவின் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள்” என்னும் கட்டுரையும் “சிறிலங்காவின் வன்முறையான உறுதியற்ற இனத்துவ தேசிய வரலாற்றில் தமிழர்களுக்கு நடந்த இனஅழிப்பை ஏற்காமலும் அனைத்துலக நீதி வழங்கலை அனுமதிக்காமலும் பயங்கரவாதத் தடைச்சட்டங்கள் மற்றும் காணி அபகரிப்பு குறித்த தமிழர்களின் குரல்களுக்கு மௌனமாகவும் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் அமைப்பின் 9வது விதியை உறுதிப்படுத்தியும் தமிழர்களின் நீதிக்கான மற்றும் தன்னாட்சி உரிமைக்கோரிக்கைகளை அலட்சியம் செய்துமே அநுர ஆட்சி தொடரும் என எதிர்வு கூறியுள்ளது. அநுர அலையின் இந்த உள் நோக்கைப் புரிந்து கொள்ளாது தப்பிப்பிழைக்கும் பொறிமுறையுள் ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் இறைமையைத் தேசியத்தை பேணாத போக்கில் அநுர அலையுள் தன்மானவற்றவர்களாகச் சிங்கள பௌத்த பெரும்தேசியத்துள் உள்வாங்கப்பட்டு விடுவார்களா? என்ற அச்சம் உலகெங்கும் எழுந்துள்ளது. இதனை ஊக்குவிக்கக் கூடிய முறையில் சிறிலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்றத்துக்கான 10வது பொதுத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் தங்களின் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற போக்குக்கு எதிராக சிங்கள ஆட்சியில் ஊழலை மாற்றவும் குடும்ப ஆட்சியை விரட்டவும் எழுந்த அநுர அலை மயக்கத்தில் நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசியுமென தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு அதனை ஈழ தேசியத்தை விட்டு ஈழத்தமிழர்கள் நீங்கி வருகிறார்கள் எனச் சில திறனாய்வார்கள் செய்த எதிர்நோக்குப் பார்வையும் பலமுமற்ற திறனாய்வுகளை எல்லாம் பொய்யாக்கி இறைமையைத் தேசியத்தை சனநாயக வழியில் மீளுறுதி செய்யும் மக்கள் பலம் ஈழத்தமிழர் தாயகத்துக்கு என்றும் உண்டென உலகுக்குத் தேசமாகவே 2024 மாவீரர் நாளில் ஒன்றுபட்ட மக்களாக ஒருமைப்பாட்டுடன் திரண்டெழுந்தனர்.
ஒருநாட்டின் மக்கள் தாங்கள் வாழும் மண் தங்களுக்குச் சொந்தம் என்ற இறைமை உணர்வையும் தாங்கள் ஒரே நாட்டினர் என்ற தேசிய ஒருமைப்பாட்டு உணர்வையும் உறுதிப்படுத்தும் பொழுது அந்த மக்கள் தங்களைத் தாங்களே எல்லா அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவித்த மக்களாவார்கள். இதனை ஈழத்தமிழர்கள் 2024 மாவீரர்நாளில் தெளிவாக நிரூபித்துள்ளனர். மேலும் தலைவர் ஒருவருடைய சிந்தனை அரசியலில் மீளவும் வலுப்பெறும் பொழுது அவர் அரசியலில் மீள்வருகையாகின்றார் என்பர். அந்த வகையில் 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் நாளுடன் இனஅழிப்பால் சிறிலங்கா முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கருதிய தேசத்தலைவர் மேதகு பிரபாகரனின் சுட்டு விரல் ஆணையை மந்திரமாகக் கொண்டு செயற்படும் தன்மான ஈழத்தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்ட அந்தத் தலைவன் காட்டிய ஓரு அணியில் ஓரே தேசமாக எழுந்து பிரபாகரனின் 2வது வருகைக்கு கட்டியம் கூறும் நாளாக 2024ம் ஆண்டு மாவீரர் நாளை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை இலக்கு பெருமையுடன் கூட்டிக்காட்ட விரும்புகிறது.
மேலும் இவ்வாசிரிய தலையங்கம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கையில் வடக்கு கிழக்கில் வெள்ள நிவாரணப் பணிகளில் அனைத்துலகத் தமிழரும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, இலக்கில், உலகின் காலநிலை மாற்றத்தால் தமிழர் தாயகம் மிகுந்த இயற்கை அழிவுகளைச் சந்திக்க வேண்டி வருமென அதனை எதிர்கொள்ள வல்ல ஈழத்தமிழரின் இடர்முகாமைத்துவத்துக்கான கட்டமைப்புக்களை நிதிவளத்துடன் மனித வலு இணைப்புடன் உருவாக்குமாறு பலமுறை கேட்டிருந்தோம். ஆயினும் அதற்கான துலங்கல் எதுவும் அமையாததால் இன்று அவசர இடர்முகாமைத்துவ வேலைகனைச் செய்ய வேண்டிய நிலை தோன்றியுள்ளது. பாதிப்புற்றவர்களின் தேவைகளின் பட்டியல்கனை அவர்களின் தேவைகளுடன் உடன் இலக்குக்கு அனுப்பினால் உலகத்தமிழரின் கவனத்துக்கு அதனைக் கொண்டு வந்து யாராவது உதவ முற்பட்டால் அவர்களை மக்களுடன் இணைப்போம் என்பதை இலக்கு இந்நேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.