‘ஈழத்தமிழர் இறைமையைத் தக்கவைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு’ ஈழத்தமிழர் தேசிய நாளாம் மாவீரர் நாளில் இதனை மீளுறுதி செய்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 314

ஈழத்தமிழரின் தேசியத் தலைவரின் 70வது அகவைப் பெருவிழா இவ்வாரம் 26ம் நாளிலும் ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாள் மாவீரர்நாளாக 27ம் நாளிலும் இடம்பெறுகிறது. தேசியத் தலைவருக்கும் தேசிய நாளுக்கும் ‘இலக்கு’ தனது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுடன் இணைந்து தெரிவிப்பதில் முதலில் பெருமகிழ்ச்சியடைகிறது. மாவீரர்நாள் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க ஈழத்தமிழர்கள் உறுதி பூணும் தேசிய நாள். “பாதுகாத்தல் என்பதன் பொருள் என்ன? (What is the object of Defence). உள்ளதைத் தக்கவைத்தல் (To preserve). உள்ளதைத் தக்க வைத்தல் அதை இழந்து விட்டு மீளவும் அடைவதை விட இலகுவானது. (To preserve is easier than acquire) எனப் ‘போரில்’ (On War) என்னும் நூலை 1832இல் எழுதிய யேர்மனியில் பிறந்து போலந்தில் காலமான கொளோசவிட்ஸ் (Clausewitz) வலியுறுத்திய கருத்தை மீள்நினைவுபடுத்தி “ஈழத்தமிழர் இறைமையைத் தக்க வைப்பதே ஈழத்தமிழர்க்கான பாதுகாப்பு” என்பதை தேசமாக திரண்டெழுந்து மாவீரர் நாளில் தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழர் மீளுறுதி செய்ய வேண்டும் என்பது இலக்கின் பணிவான வேண்டுகோள். கனடியர்களாக வாழும் ஈழத்தமிழரின் முயற்சியால் கனடா இனஅழிப்பு வாரத்தைக் கொண்டாட அனுமதித்துள்ள நிலையில் கனடிய ஈழத்தமிழர்கள் தமிழீழத் தேசியக் கொடித்தினத்தையும் முன்னெடுத்துள்ளனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்ராறியோவின் எதிர்க்கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் தலைவியான மரிட்ஸ்டைல்ஸ் அவர்கள் “இன்று தமிழீழத் தேசியக் கொடித்தினத்தில் ஒன்ராறியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நாங்கள் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் போற்றுகின்றோம். நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு இனஅழிப்பின் வலியை ஏற்படுத்தும் இந்நாள் தமிழ்ச் சமூகத்தின் உறுதிப்பாட்டையும் வலிமையையும் கூட வெளிப்படுத்துகிறது. தமிழ்ச் சமூகம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளிக்கும் சமூகம். புதிய சனநாயகக் கட்சியினராகிய நாங்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆதரவாயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம்.” எனக் கூறியுள்ளமை தமிழர்களின் பாதுகாப்பை உலகம் உறுதிப்படுத்தும் நாள் தூரத்திலில்லை என்பதை உறுதி செய்கிறது.
மேலும் “சுயநிறைவான தன்னில் தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறைமையையே நான் விரும்புகிறேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டும்.” எனத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு திரு.வே.பிரபாகரன் அவர்கள் 1997 கார்த்திகையில் தமிழீழ உட்கட்டுமானம் நூலின் வழி தேசமக்களுக்குத் தெரிவித்த அவரின் விருப்பை, 27 ஆண்டுகளின் பின்னர் அவரின் 70வது பிறந்த நாளில், சிறிலங்காவின் புதிய அரசுத்தலைவரான தேசிய மக்கள் சக்தியின் தோழர்; அநுரகுமார திசநாயக்காவுக்கு அவர் சிறிலங்காவின் 10வது நாடாளுமன்ற கொள்கைவிளக்க உரையை மக்கள் இறைமைக்கு முன்னுரிமை கொடுக்கும் சனநாயக ஆட்சி பொருளாதார சமத்துவத்துடன் கூடிய நீதிமுறைமையுடனான சட்ட ஆட்சி என்பவற்றை மையப்படுத்தி 21.11.2024இல் நிகழ்த்தியுள்ள இந்நேரத்தில் மீள் நினைவுறுத்த ‘இலக்கு’ விரும்புகிறது. தேசியத்தலைவரின் சுருக்கமான இந்த கொள்கை விளக்கம் பயங்கரவாதப் பட்டியலில் முதலாளித்துவச் சிங்களக் கட்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப் போட்டதன் முட்டாள்தனத்தை தேசிய மக்கள் சக்திக்கு தெளிவாக்கும். ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சியை ஏற்கும் பேச்சுக்களை எந்த அளவுக்கு தேசிய மக்கள் சக்தி நடைமுறைப்படுத்துகிறதோ அந்த அளவுக்கே நல்லிணக்கம் நடைமுறைச்சாத்தியமாகும். பொருளாதார மீட்சியும் வேகம் பெறும்.
“இருளால் இருளை அகற்ற முடியாது. ஒளியினால் மட்டுமே அது முடியும். வெறுப்பை வெறுப்பால் அகற்ற முடியாது. அன்பினால் மட்டுமே அது முடியும்” என்ற மார்ட்டின் லூதர்கிங் அவர்களின் கூற்றை மீள்நினைவுபடுத்திச் சிறிலங்காவின் இன்றைய அரசுத்தலைவர் அநுரகுமார திசநாயக்கா தனது 10வது சிறிலங்காப் பாராளுமன்றத் தொடக்கத்துக்கான கொள்கை விளக்க உரையை நிறைவு செய்துள்ளார். இந்தக் கொள்கை விளக்க உரையில் சிறிலங்காவின் இன்றைய அரசுத்தலைவர் அநுரகுமார திசநாயக்கா ‘சிறிலங்காவினர்’ என்கிற தேசஇனத்துக்கானதும் சிறிலங்கா என்கிற அரசாங்கத்திற்கானதுமான பொருளாதார மீளுருவாக்கத்திற்கான ஊழலற்ற ஆட்சியொன்றை சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் அவர் தலைமையிலான அரசு ஏற்படுத்த எதனைச் செய்ய விரும்புகின்றாரோ அதனைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ளார். இதனை வரவேற்றுப்பாராட்டும் அதே நேரத்தில் அவர் ஈழத்தமிழர்களைக் குறித்த இருளில் இருப்பதால் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வைச் சூழ்ந்துள்ள இருளை அவரால் அகற்ற முடியாதிருக்கப் போகிறது என்பதை அவரின் இந்தக் கொள்கை விளக்கவுரை தெளிவாக்கியுள்ளது. ஆயினும், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் தனியான தேச இனமாக உள்ள ஈழத்தமிழரை அந்த ஏற்புடைமையுடன் சிங்கள தேசஇனத்துடன் சமமாக மதித்து இரு தேச இனங்களும் இணைந்து இலங்கைத் தீவின் பொருளாதார மீட்புக்குப் பயணிக்க வைக்கக் கூடிய அணுகுமுறை அவரது கொள்கை விளக்க உரையில் எள்ளளவும் எடுத்துரைக்கப்படவில்லை என்பதை ‘இலக்கு’ வேதனையுடன் கூட்டிக்காட்ட விரும்புகிறது. மேலும் தோழர் அநுரகுமார திசநாயக்கா அவர்களால் அவரின் கொள்கை விளக்க உரையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இனவெறி மதவெறி அரசியல்தான் இலங்கைத் தீவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற துணிகரமான கூற்றை இலக்கு வரவேற்கின்றது. அதே வேளை இந்த இனமதவெறியையும் அதன் விளைவுகளையும் மாற்றவல்ல நியாயமான தீர்வை அவர் சிந்திப்பதற்கு இலங்கைத் தீவு தமிழ் சிங்கள இருஅரசுக்களின் ஒரு தீவாகவே வரலாற்றைக் கொண்டுள்ளது என்ற உண்மையை அவர் ஏற்று மக்கள் மயப்படுத்த வேண்டும் என இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது இறைமையின் அடிப்டையிலான அவர்களின் தாயகத்தில் தேசியத்தன்மையுடன் தன்னாட்சி உரிமையுடன் பாதுகாப்பான அமைதியுடனும் வளர்ச்சிகளுடனும் வாழும் வாழ்வை மீள்நிறுவும் தேவையாக உள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தி தெளிவாகப் புரிந்து கொண்டாலே இனநல்லிணக்கம் என்பதை ஏற்படுத்தக் கூடிய வகையில் தீர்வுதனை உருவாக்க இயலும்.
மேலும் சமகால உலகம் ரஸ்ய உக்ரேன் போர் மற்றும் இஸ்ரேயல் கமாஸ் போர் என்பவற்றாலும் இந்தப் போர்களை முகாமைத்துவப்படுத்தும் அமெரிக்கச் சிந்தனைகளாலும் கலப்புப் போர்முறைகளைக் கொண்ட உலகாக இன்றைய உலகு முழுவதையும் மாற்றி வருகிறது. இது பாதிப்புற்ற மக்களுடைய உலக முறைமைகளுக்கு எதிரான ஆயுத எதிர்ப்பு பயங்கரவாதம் எனப்பட்டியிலிடப்பட்ட நிலையை மாற்றி வன்முறையற்ற போராட்டங்க ளும் கூட “கலப்புப் போர்முறை” என வரைவு பெறும் சிக்கல்நிலையைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் இந்துமாக்கடலின் முக்கிய நாடான இலங்கைத் தீவில் இந்த கலப்புப் போர்முறையின் தாக்கங்கள் பலமாக அமையும் என்பது வெளிப்படை. இதிலிருந்து விடுபடுவதற்கு இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு இலங்கைத் தீவில் உள்ளதையும் சிங்களவர்கள் தங்களுக்கு இலங்கைத் தீவில் உள்ளதையும் தக்கவைப்பதற்கான திறந்த உரையாடல் மூலமான செயற்பாடு உடன் தேவையென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.

Tamil News