தெற்கு உலக உருவாக்கத்தில் ஈழத்தமிழர் இறைமை மேலும் இழக்கப்படுவதை நீங்கள் தடுக்கும் நாளாக நவம்பர் 14 | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 311

2024ம் ஆண்டுக்கான நவம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த முதல் வாரத்தில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் தங்களின் தேசியத் தலைவரின் 70வது அகவை நிறைவை நவம்பர் 26லும் தங்களின் தாயகத்தின் 36வது தேசிய மாவீரர் நாளை நவம்பர் 27லும் முன்னெடுப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். இப்பணிகளுக்கு இடையில் நவம்பர் 14இல் சிறிலங்காவின் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் தேசமாக எழுந்து வாக்களித்து தங்களின் இறைமையுடன் கூடிய தாயகத்தில் தங்கிளன் தேசியத்தைப் பேணி தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சிகளை அடைவதற்காக நேர்மையுடனும் உண்மையுடனும் போராடக் கூடிய தங்களின் சிறிலங்காப் பாராளுமன்றத்துக்கான உறுப்பினரை நன்கு சிந்தித்துத் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பில் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் உள்ளனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 28 உறுப்பினர்களே தமிழர் தாயகப் பகுதிகளுக்கான உறுப்பினர் களாகவும் அதில் 10 உறுப்பினர்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழரல்லாத மக்களால் தெரிவு செய்யப்படக் கூடிய வகையிலும் மிகுதியான 18 உறுப்பினர்களே தமிழர்களால் தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்களாகவும் சிறிலங்காவின் அரசியலமைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்காப் பாராளுமன்றத்தின் சட்டவாக்கத்தில் ஈழத்தமிழர்களால் பங்குபற்ற இயலாத முறைமையைக் கொண்டதாக சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமை உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. அப்படியானால் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் 2068 பேர் வேட்பாளர்களாக பங்கேற்று என்ன பயன்? என்கின்ற கேள்வி நியாயமானது மட்டுமல்ல நீதியானதும் கூட. ஆயினும் பங்குபற்ற வேண்டிய இரண்டு முக்கிய நடைமுறைத் தேவைகள் உண்டு. ஒன்று தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் தப்பிப்பிழைக்கும் பொறிமுறைக்கு இது தேவையாக உள்ளது. அடுத்தது அனைத்துலக அரசியலின் புதிய ஒழுங்குமுறையில் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையை வலுப்படுத்த வாக்குகள் மூலம் அதனை உறுதிப்படுத்தல் அவசியமாகவுள்ளது.
முதலாவது தேவையை எடுத்து நோக்குவோம். மக்களின் நாளாந்த வாழ்வைப் பொறுத்த மட்டில் முதல் முக்கியமான தேவைகளாக உள்ள இருப்பிடம், உணவு, நீர், மருத்துவம் சந்தை கல்வி தொழில் வாய்ப்புக்கள் ஆகியனவற்றக்கான நிதியைப் பிரித்தானிய காலனித்துவத்தால் ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் என்ற சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை மூலமாகவே இன்றும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவலநிலை உள்ளது. இதனைத் “தப்பி பிழைக்கும் பொறிமுறை”யாகக் கருதி ஈழத்தமிழர்கள் தாயக தேசிய தன்னாட்சியையும் இதனையும் இணைத்து போராடக்கூடிய கூடிய தியாக மனதுள்ளவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய கடமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வாக்களார்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இந்த வாக்களிப்பு என்பது சனநாயக வழியில் ஈழத்தமிழர்கள் தங்கள் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்கும் களம் என்ற உண்மையான உணர்வைப் பெற இந்த மாவீரர் மாதம் மாவீர்களின் அளப்பரிய தியாகங்களை இவர்கள் மனதில் எழவைத்து இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. அப்பொழுதுதான் தங்களை இனஅழிப்புச் செய்தவர்களாகவும் அதற்கு ஆதரவளித்தவர்களாகவும் உள்ள எந்தச் சிங்கள வேட்பாளருக்கும் ஈழத்தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்ற உறுதி பிறக்கும். அவ்வாறே மக்களை நம்பாது மண்ணை விடுவிக்கும் சத்தி மக்களுடையதே என்பதை மறந்து சிங்கள ஆட்சியாளர்களையும் பிறதேச ஆட்சியாளர்களையும் கொண்டு ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும் எந்த அரசியல் முட்டாள்களுக்கும் வாக்களிக்காத நிலையும் உறுதியாகும்.
இன்றைய உலகில் அமெரிக்காவை முதன்மைப்படுத்திய ஒருமுனைவாக்க அரசியல், சீனாவின் எழுச்சியால் இருமுனைவாக்க அரசியலாகி பிரேசில் ரஸ்யா இந்தியா சீனா தென்னாபிரிக்கா போன்ற வளரும் பொருளாதாரங்களின் கட்டமைப்பான பிரிக்ஸ் இன் வளர்ச்சி இன்று பிரிக்ஸ் பிளஸ் என முப்பது நாடுகளாக பெருவளர்ச்சி பெறுவதும், சங்காய் கோப்பரேசன் ஓர்கனைசேசன் என்ற சீனா ரஸ்யா இந்தியா உடன் ஆறு யூரேசிய நாடுகளையும் உள்ளடக்கிய சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பனவும், “பல்கூட்டுச் செலுத்துகை”யாக்கத்தை (Multiplex) இன்றைய உலகின் புதிய அரசியல் முறைமையாக மாற்றியுள்ளது. இதுவே இன்று ‘தெற்கு உலகம்’ (Global South) என்பது இன்றைய உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையில் அதற்கான தனித்துவத்துடன் திகழ வேண்டும் எனச் சீன அரசுத்தலைவரையும் இந்தியப் பிரதமரையும் ரஸ்யாவில் அக்டோபர் 24 இல் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் பிளஸ் மாநாட்டில் கைகுலுக்க வைத்தது. இந்தியாவுக்கு தெற்கு உலகம் என்ற கட்டமைப்பினைச் சீனா தன்னை உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையில் முன்னிலைப்படுத்த உதவும் என்ற எண்ணம் உண்டு. இதனால் உலகின் தெற்கில் தெற்காசிய தென்கிழக்காசிய நாடுகளை இணைத்த கட்டமைப்பு ஒன்றினுடாக இந்தியா தனது தெற்காசிய மேலாண்மையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இன்று உண்டு. இதே அச்சம் பிரேசிலுக்கும் உண்டு. இரண்டு நாடுகளுமே சீனாவின் பி. ஆர் ஐ என்னும் உலகைத் தரை கடல் பாதைகளால் வளைத்து இணைக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே ரஸ்யாவில் நின்றன. ஆயினும் இந்திய சீன வர்த்தகர்கள் உடைய அழுத்தம் சிவில் சமுக அழுத்தமாக மாறியதன் விளைவே எங்களுடைய பிரச்சினையை நாங்கள் தீர்ப்போம் என்ற பிரகடனத்தை சீனாவும் இந்தியாவும்வெளிப்படுத்தி நட்பாகக் கைகுலுக்கச் செய்தது. இங்குதான் ஈழத்தமிழர்களும் இந்தத் தேர்தல் மேடையில் தங்களின் வர்த்தகர்களைச் சிவில் அமைப்புக்களை இணைத்து உலகத் தெற்கு என்னும் 45வீதமான உலக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்டமைப்புக்குள் ஈழத்தமிழர்களின் இறைமை மேலும் இழக்கப்படுவதைத் தடுக்கப் பலமாக இறைமைக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று இலக்கு அழைக்கிறது. தேர்தலின் பின்னர் செயற்படுவோம் என்று இருக்காது ஈழத்தமிழர்களின் சிவில் அமைப்புக்களும் பொதுவேட்பாளராக நின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனும் தேர்தல் மேடையில் அவர் அவர்களின் கடமையைச் செய்ய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
இனபேதம் மதபேதம் மனித சமத்துவமின்மை இலங்கைத் தீவின் சாமானிய மக்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலைக்கான முக்கிய காரணியாக இதுவரைகால அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்டதெனக் கண்டியிலும் பேசியுள்ள சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுர குமாரதிசநாயக்கா “இருநாடுகள் கொண்ட தீவு இலங்கை” என்பதை ஏற்று இருதேச இனமக்களும் முஸ்லீம் மலையக குடிமக்களும் அவரவர்களுடைய தனித்துவத்துடன் அதே வேளை இலங்கைத் தீவு அனைவருக்குமான தாயகமாக உள்ளது என்ற அடிப்படையில் சமமான சகோதரத்துவமான சுதந்திரத்துடன் வாழ்ந்து தீவின் பாதுகாப்பை அதன் பொருள்வளத்தை அதன் மனித வலுவை இணைந்து பாதுகாக்கக் கூடியதான முறையில் எல்லோருக்குமான அரசியலமைப்பை உருவாக்கி செயற்பட வேண்டும் என்பது இலக்கின் கருத்து. அத்துடன் இதற்கான உரையாடல் அரசியல்வாதிகளுடன் நடத்தப்படாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணிக்கும் செயற்பாட்டாளர்களுடனும் மக்களின் சிவில் அமைப்புக்களுடனும் இதற்கு உதவக் கூடிய கற்றோருடனும் அனுபவமுள்ளவர்களுடனும் நடாத்தப்பட வேண்டும் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

 

Tamil News