சிறிலங்காவின் 9வது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தத் தேர்தல் முறைமையே சிங்களக்கட்சியின் வேட்பாளர் ஒருவரே சிறிலங்காவின் அரசத் தலைவராக வரக்கூடிய முறையில் கட்டமைக்கப்பட்டவொன்று எனத் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் கொண்ட மக்கள் என்ற வரலாற்று உண்மையை ஈழத்தமிழர்கள் மீளுறுதி செய்யும் சனநாயகப் போராட்டக்களமாக இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளராக சங்குச் சின்னத்தில் போட்டியிடுபவராக முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனை முன்னிறுத்தி 81 ஈழத்தமிழர் சிவில் அமைப்புக்களும் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் மாற்றியுள்ளன. ஈழத்தமிழர் சனநாயக அரசியல் வரலாற்றில் அதிகளவான சிவில் சமுகத்தினரும் அதிக அளவான ஈழத்தமிழர் அரசியல் கட்சிக ளும் இணைந்து பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ள இந்தப் புதிய வரலாறானது ஈழத்தமிழர்கள் மண்ணையும் மக்களையும் பாதுகாக்கத் தேசமாக எழுவதற்கான ஆற்றலுள்ளவர்கள் என்ற புதிய நம்பிக்கையை உலகுக்கு அளித்துள்ளதன் விளைவாகவே அனைத்துலக நாடுகளின் தூதுவர்களும் தமிழர் தாயகத்துடன் நேரடியாகவே செயலாற்றத் தொடங்கியுள்ளனர் என்பது பொதுவேட்பாளருக்கான முதல்வெற்றி.
இத்தேர்தலை நாம் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுள்ள தனியான தேச மக்கள் என்பதை உறுதி செய்ய நமக்கு நாமே வாக்களிக்கும் சனநாயகப் போராட்டமாக மட்டும் மாற்றி 22ம் திகதி முதல் இந்த பொதுவேட்பாளரை அறிமுகப் படுத்திய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு தொடர்ந்து ஈழத்தமிழர்கள் அனைவரையும் பொதுவெளியில் அவர்களிடையுள்ள வேற்றுமைகளை மதித்து ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையில் ஒருமைப்பட்டு ஒரு இலக்கை நோக்கி பல அணுகுமுறைகளில் சனநாயக வழிகளில் செயற்பட வைக்கும் பரந்து விரிந்த சனநாயகக் குடைநிழல் அமைப்பாகப் பரிணாமம் அடைய வைக்கும் தன்பணி தொடங்கும் என்பதை பா. அரியநேத்திரன் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதற்கான நம்பிக்கையைத் தரும் வகையில் இந்தப் பொதுவேட்பாளர் அறிமுகத்தில் உச்சப்பங்காற்றிய ஆசிரியர்கள் மாணவர்கள் தொழிலாளர்கள் மருத்துவர்கள் ஆன்மீகத்தலைவர்கள் கண்முன்னே நிற்கின்றார்கள். எஸ். டபிள்யூ. ஆர் டி. பண்டாரநயாக்காவின் 1920களின் பின்னரான இந்த ஐங்குழுக்கள் இணைப்பே சிங்கள பௌத்த மக்களிடை ஐரோப்பிய மயக்கத்தில் இருந்த தேசிய இறுக்கநிலையை உடைத்து பேரினவாத எழுச்சியாக மாறியது என்பது வரலாறு. அதுபோலவே இன்றைய ஈழத்தமிழரிடையான இந்த தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பின் தொடர் பரிணாமமும் நிச்சயம் ஈழத்தமிழர் தேசிய நீக்கத்தை முன்னெடுக்கும் உள்ளூர் வெளியூர் சக்திகளால் தோன்றியுள்ள இறுக்கநிலையை உடைத்து ஈழத்தமிழர் தேசியப் பேரெழுச்சியை உருவாக்கும் என்பது வெளிப்படை.
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையென்பது மொழி மத சாதி பிரதேசப் பிரச்சினையல்ல. இந்த மண் எங்க ளின் சொந்த மண் என்கிற நிலத்தின் மீதான பறிக்கப்பட முடியாத பிறப்பால் வந்த அடிப்படை உரிமையை மீளுறுதிப்படுத்தும் இறைமைப் பிரச்சினை. எனவே மண்ணின் மீதான தங்களின் நிலஉரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்களுக்கு தங்களுடன் தங்கள் மண்ணில் வாழும் எல்லா மக்களதும் அரசியல் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பான வாழ்வும் அமைதியும் வளர்ச்சிகளும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பது நன்கு தெரியும். மண்ணில் வாழும் அனைத்து மக்களும் சமத்துவமான சகோதரத்துவமான சுதந்திரமான முறையில் உண்மைகளின் அடிப்படையில் தேசமாக எழுந்து செயலாற்றுகின்ற பொழுதுதான் மண்ணின் பொருளாதாரம் மக்களின் பொருளாதாரமாக உள்நாட்டு வெளிநாட்டுச் சுரண்டலற்று ஊழல்களற்று உறுதிப்பட்டு மக்களின் ஆட்சி அரசியலில் நடைமுறைச்சாத்தியமாகும். இதனாலேயே ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மண்மீட்புப் போர் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் மண்ணில் அந்த மண் தங்களுடையது என்ற வாழ்வியல் தன்மையுடன் மற்றவர்களைச் சமத்துவமாக ஏற்று வாழும் பொழுதுதான் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் நடைமுறைச் சமுக வாழ்வாகி அனைத்து தளைகளில் இருந்தும் விடுதலை நடைமுறைச் சாத்தியமாகும். ஒரு மனிதன் தான் விடுதலை பெற்றவன் என்று உள்ளத்தால் முழுஅளவில் உறுதி கொண்டால் அவனை எதனாலும் அடிமைப்படுத்த முடியாது. இதற்காகவே ஈழத்தமிழரின் சின்னமாக பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு ஈழத்தமிழர் யாராலும் அடிமைப்படுத்த முடியாத விடுதலை உள்ளம் கொண்டவர்கள் இதனால் சிறிலங்காவினதோ அல்லது அதன் ஆதரவு நாடுகளதோ ஈழத்தமிழரின் இறைமையை அடிப்படையாகக் கொள்ளாத எந்தத் தீர்வு முயற்சியும் அவர்களின் சமத்துவத்தையோ சுதந்திரத்தையோ உறுதி செய்யாதென்கிற உண்மையைச் சிங்களப் பெரும்பான்மையினர்க்கும் பிராந்திய உலக வல்லாண்மைகளுக்கும் தெரிவிக்கின்ற தேர்தலாக இந்தத் தேர்தல் மாற்றப்பட்டுள்ளது. இதில் பொதுவேட்பாளருக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதிப்படுத்தி இருப்பை உறுதியாக்குவதுடன் அந்த மண்ணில் வாழும் அனைவருக்குமான அரசியல் உரிமைகளையும் உறுதி செய்யும் என்பதைக் கவனத்தில் கொண்டு வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழரும் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களும் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்கையில் அது யாருக்கும் தோல்வியற்ற வெற்றி-வெற்றி என்ற நிலையாக மாறி அனைவரதும் வாழ்வுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர் தாயகத்தில் நடைமுறைச்சாத்தியமாக்கும். இதனால் எத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டாலும் அத்தனை வாக்குகளும் இந்நோக்குக்குப் பலம் சேர்க்கும்.
வாக்குகள் பெறும் நோக்கு தேசஇனத்தைப் பலராகப் பிரிந்து குழுக்களாக்கி கட்சிகளாக்கி பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்குங்கொல்குறும்பும் இல்லது நாடு என்ற வள்ளுவரின் எச்சரிப்பையும் மறக்கவைத்து முரண்பாடுகளின் இருப்பாகவே நாட்டையே மாற்றிவிடும். இதிலிருந்து வேற்றுமைகளை மதித்து சமுக விலக்கை மாற்றி அனைவரையும் உள்வாங்கிப் பொதுவெளியில் தேசமாக மக்கள் தாயக தேசிய தன்னாட்சி ஒருமைப்பாட்டுடன் எழுவதற்கான வெற்றிச் சங்கொலியாக சங்குச் சின்னத்துக்குக் குவிக்கப்படும் வாக்குகள் மாறட்டும். உலக அரசியலுக்கு நமக்கு நாமே வாக்களிப்பதன் மூலம் தங்களுக்குத் தாங்களே மக்கள் போராடலாமென்கின்ற புதிய சனநாயகப்போராட்டத்தை ஈழத்தமிழர்கள் பொதுவேட்பாளர்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளனர். இதன்வழி ஈழத்தமிழர்கள் சனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளாது தம்மைத் தனிமைப்படுத்தும் போக்கால் அவர்கள் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் தாராண்மைவாத சனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்ற நீண்டகால குற்றச்சாட்டும் முறியடிக்கப்பட்டுள்ளது. கூட்டாண்மைகளின் இறைமைகளின் இணைவாகவும் வல்லாண்மைகளின் பங்காண்மைகளின் இடமாகவும் மாறியுள்ள இலங்கைத் தீவின் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களின் இறைமையை வலியுறுத்தும் ஒருமைப்பாடு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துலகச் சாதக நிலைகளையும் தோற்றுவிக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. எப்பொழுதும் பரிணாம மாற்றங்கள் ஏற்படுகையில் வரலாற்றை மாற்றுகின்ற வரலாறு தோன்றும். இதனைப் பிளவு என்று தவறாகப் பொருள் கொள்ளாது பரிணாமம் என்று ஏற்று ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் கொண்ட மக்கள் என்பதைச் சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் வாக்களித்து உறுதி செய்ய இலக்கு பணிவாக அழைக்கிறது.