ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கிச் சிறிலங்கா இராணுவத்தைப் பாதுகாக்கவே இந்தியப்படை அனுப்பப்பட்டது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 288

இந்தோ சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகி 37 ஆண்டுகளின் பின்னர், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினரும் முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர் எழுதியுள்ள ‘நான் அறிந்த ராஜீவ்’ (‘The Rajiv I know’) என்னும் நூலைக் கடந்த வாரத்தில் வெளியிட்டுள்ளார். இந்நூலில் சிறிலங்காவின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனா இந்தோ சிறிலங்கா ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே அருகிலிருந்த அறைக்கு ராஜீவ் காந்தியை அழைத்துச் சென்று, “நாட்டின் தெற்கு வடக்கு என்ற இருமுனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலவரங்களையும், கொழும்பில் நடக்கும் வன்முறைகளையும் சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது. ஆகவே ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து சிறிலங்கா இராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை இந்தியா அனுப்ப வேண்டும்” என்று விடுத்த வேண்டுகோளே, இந்தியா சிறிலங்காவுக்குத் ஈழத்தமிழரின் தாயகப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தனது இராணுவத்தை அனுப்பும் முடிவை எடுக்க வைத்தது என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்றைய சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறிச் சிறிலங்காவின் அரசியலமைப்பைத் திருத்த ஒப்புக் கொண்டதற்காக ராஜீவ்காந்தி இதனைச் செய்ய வேண்டும் என்று கூறியதும் ராஜீவ்காந்தி அறைக்கு வெளியில் இருந்த தனது நிபுணர்களைக் கூட கலந்தாலோசிக்காது ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் “சிறிலங்கா அரசே கேட்டுக் கொண்டாலும் இந்தியா இலங்கையில் இராணுவ ரீதியாகத் தலையிட மாட்டாது” என்ற நிலைப்பாடு மீறப்பட்டு இந்தியப்படைகளை அனுப்ப ராஜீவ்காந்தி வழங்கிய ஒப்புதலால் இந்தியாவிலிருந்த நிபுணர்களும் ஆச்சரியமடைந்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.
கூடவே இலங்கையில் 24 மணிநேரத்துள் தரையிறக்கப்பட்ட இந்தியப்படையின் தளபதிகளுக்கோ படையினருக்கோ இலங்கையின் களநிலவரம் குறித்து எவ்விதி தகவல்களும் அளிக்கப்படாது அவசரமாக இந்தத் தரையிறக்கம் நடைபெற்றது என்பதையும், அமைதிப்படை தரையிறங்கியது முதல் விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் தொடங்குவதற்கும் இடையில் இருந்த இரண்டு மாத காலத்தைக் கூட இந்தியா பயன்படுத்தவில்லையென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் இதுவே சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய இந்திய அமைதி காக்கும் படை தமிழ்ப்போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இது இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியை ‘இந்தியாவின் வியட்நாம்’ ஆக மாற்றியது என அரசியல் மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய அதே வாரத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரை டில்லிக்கு அழைத்து அசோகா ஹோட்டலில் பலத்த பாதுகாப்பில் தங்க வைத்து இந்த ஒப்பந்தத்தின் பிரதியைக் கையளித்த போதே அவரைச் சந்திக்கச் சென்ற பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் அந்த ஒப்பந்தம் தமக்கு ஏற்புடையதல்ல எனத் தெளிவாகக் கூறியனுப்பினார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் “நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கின்றோம். ஆனால் தமிழீழத்தை அடையும் இலட்சியத்திற்காகத் தொடர்ந்து போராடுவோம்” எனப் பிரபாகரன் கூறித் தனது இலட்சியத்தில் மிக உறுதியாக இருந்தார் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் 72 மணித்தியாலங்கள் முதல் 15 நாட்களுக்குள் விடுதலைப்புலிகளைச் சுற்றி வளைக்கலாம் என்ற இந்திய இராணுவத்தின் ஆரம்பக் கணிப்பு, 05.10. 1987 இல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்திய இராணுவ ஜெனரல் சுந்தர்ஜி ‘ஆபரேசன் பவன்’ மூலம் மூன்று நான்கு வாரங்களில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க முயற்சித்தமை, திடீரென இராணுவ உலங்கு வானூர்திகளில் வந்திறங்கி விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்கத் திட்டமிட்டது போன்ற பல இராணுவ முயற்சிகளிலும் இந்தியப் படையினர் தோல்வியே அடைந்த வரலாற்றை மீள் நினைவுபடுத்தியுள்ளார். அத்துடன் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர், அந்தக் காலத்தில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் ஜே. என் தீக் ஷித் “பிரபாகரன் அவர்களுக்கு தமிழீழம் மீதிருந்த பற்றுதியையும், திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனத்தையும், எதிர்த்து நிற்பதில் அவரின் பேராற்றலையும், ஒற்றை நோக்கில் அவர் மிக்க உறுதியுடன் செயற்பட்டதையும், மிகக் குறைவாக மதிப்பிட்டு விட்டோம். தமிழர்களுக்காக இறங்கி வருவதில் ஜெயவர்தனாவுக்கு இருந்த அரசியல் உறுதியையும் நேர்மைத்தனத்தையும் அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். இலங்கைத் தமிழர்களிடம் இருந்து புலிகளைத் தனியாகப் பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது.” எனத் தனது பணிகள் குறித்துச் செய்த பதிவுகளையும் மீள்நினைவுபடுத்தியுள்ளார்.
இந்நூல் இந்தியா ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அவர்கள் அடைந்து வாழ்வதற்கு உதவும் நோக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதை மீள் உறுதி செய்துள்ளது. இந்த உண்மையை அன்றே தியாகி திலீபன் சமகாலத்தில் வெளிப்படுத்தினார். இந்நூல் வெளிவந்துள்ள சமகாலத்தில் “தங்களுடைய தன்னாட்சியைப் பயன்படுத்தி வாழ இயலாத எல்லைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான தங்கள் ஒற்றுமையை” வெளிப்படுத்தும் ஐக்கியநாடுகள் சபையின் வாரமும் மே 25 முதல் 31 வரை இடம்பெறுகிறது. இவ்வாண்டுத் தொடக்கத்தில் தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர்களும் தங்களின் தன்னாட்சியைப் பயன்படுத்தி வாழ இயலாத எல்லைகளில் வாழும் மக்களாகவே பிரித்தானிய காலனித்துவத்தால் தள்ளப்பட்டுள்ள இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர்களுக்கான சிறப்புப் பிரதிநிதியொருவரை நியமித்து ஈழத்தமிழர்கள் தங்கள் தன்னாட்சியின் அடிப்படையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் தேவையை இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யரின் நூல் உலகுக்கு மேலும் தெளிவாக்கியுள்ளது. அதாவது பிராந்திய மேலாண்மைகளோ உலக வல்லாண்மைகளோ தங்கள் நலன்சார் நிலைப்பாட்டையே அதீத மனிதாயத் தேவையில் உள்ள ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் எடுப்பர். இதுவே இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யரின் நூல் தரும் சான்றாகவும் உள்ளது. எனவே தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாங்கள் இலங்கைத் தீவின் இறைமையுள்ள மக்கள் என்பதை உறுதியுடன் வெளிப்படுத்தி ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி ஒருவரின் மேற்பார்வையில் தங்களின் தாயக எல்லைகளில் தங்களின் தன்னாட்சி உரிமையுடன் தங்கள் வாழ்வை முன்னெடுக்க உழைக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது. பலஸ்தீனர்களின் அரசநிலைக்காக ஸ்பெய்ன், அயர்லாந்து, நோர்வே நாடுகளின் அங்கீகாரம் மே 28 இல் தொடங்கவுள்ள நேரத்தில் ஈழத்தமிழர்களும் தங்கள் தாயகத்துக்கான உலக அங்கீகாரத்தை நோக்கிய கோரிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்பதே இலக்கின் உறுதியான எண்ணம். மக்கள் போராட்டத்தின் மூலமே விடுதலை என்ற தியாகி திலீபனின் சிந்தனை, பலஸ்தீன மக்களைப் பொறுத்த மட்டில் உண்மையாகி எமக்கான மீள்அழைப்பாகிறது என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Tamil News