சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு தந்த வலியை இறைமையை மீட்கும் வலிமையாக்குவோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 287

ஈழத்தமிழர் தாயகத்திலும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்கும் தமிழகம் உட்பட்ட அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் மே 18, 176000 தமிழர்களை மனிதவதை செய்து சிறிலங்கா இனஅழிப்பு செய்த 2009 ஆண்டு மே 18 இன் வரலாற்று நினைவு நாளாக-தாங்கொணா வலி தரும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் அமைகிறது.
இவ்வாண்டு 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த மே 18-சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நாள் தந்த வலியை இறைமையை மீட்கும் வலிமையாக்குவோம் என்ற உறுதி மொழியுடன் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கும் வீறு கொண்டெழுந்து கொண்டாடுகின்றனர்.
2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு என்பது 1921 முதலான 88 ஆண்டுகால சிங்கள இனவெறியின் பௌத்த மதவெறியின் திட்டமிட்ட அரசபயங்கரவாத வெளிப்பாடு. ஈழத்தமிழர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்களால் அழித்து ஒழித்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்வது மட்டுமல்ல அவர்களின் அனைத்து வாழ்வுக்கான உட்கட்டுமானங்களையும் அழித்தல் என்பதே சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலையின் தலைமை நோக்கு.
இன்று பலஸ்தீனத்தில் பலஸ்தீனிய மக்களை இஸ்ரேயல் அவர்கள் வாழ்ந்து வரும் வீடுகளை விட்டு வெளியேற்ற எவ்வாறு 35000க்கும் அதிகமான பலஸ்தீனிய மக்களை குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் இயலாமையில் உள்ளவர்கள் என்று பார்க்காது குண்டுமழை பொழிகின்றதோ அவ்வாறு அன்று 2009 இல் சிறிலங்கா இவற்றையும் இவற்றைவிடக் கொடூரமான முறையில் தமிழர்களை நிர்வாணமாக்கி ரசித்துப் படமெடுத்து வன்புணர்ச்சி செய்து போராட வலுவுள்ளவர்கள் எனத் தாங்கள் கருதிய அனைவரையும் கொன்று குவித்து, உடலங்களைக் கூட மனிதத்தன்மையற்று நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் காட்சிப்படுத்தி, கிண்டல் கேலி செய்து கிட்லரிசத்தை விட மோசமான வதைமுகாம்களை நிறுவியது.
இந்த முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் “இனஅழிப்பால் நில ஆக்கிரமிப்பைச் செய்யலாம்” அதனை தமக்கு ஆதரவான நாடுகள் அனைத்துலகச் சட்டங்கள் விசாரணைக்கு உள்ளாக்காதவாறு தடுக்கும் என்ற புதிய அரசியல் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
இதுவே கடந்த வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்கா ரவா மேலான இஸ்ரேலியச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தி இஸ்ரேயலை அது ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன எல்லைகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடுமாறு அனைத்துலக நீதிக்கான நீதினமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இஸ்ரேயல் சிறிலங்காவைப் போலவே காசாவில் எந்த இனஅழிப்பும் நடைபெறவில்லையென வெளிப்படையாக அறிவிக்க வைத்துள்ளது.
அன்று முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பில் பிராந்திய ஆசிய மேலாண்மைகளும் அமெரிக்க மேற்குலக வல்லாண்மைகளும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மறைமுகமாகப் பங்கேற்று இனஅழிப்பால் அரசியல் நடத்துங்கள் எங்களின் சந்தை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால் போதுமென்று அனைத்துலகச் சட்டங்களில் இருந்து சிறிலங்காவுக்கு விதி விலக்களித்தமையாலேயே ஈழத்தமிழர்கள் இன்றும் சிறிலங்கா என்னும் தங்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை 22.05. 1972 இல் சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்திச் சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசை நிறுவியதால் சிறிலங்கா இழந்து விட்ட போதிலும், படைபல ஆக்கிரமிப்பால் தமது அரசியல் பணிவை வலுக்கட்டாயமாகப் பெறும் வாழ்வில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதே நிலைதான் பலஸ்தீனத்திலும். ஆனால் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் நடைமுறையரசின் இறைமையை ஒடுக்கவே சிறிலங்கா செய்தது எனச் சொல்லத் தயங்குவதால் இன்றும் ஈழத்தமிழரால் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலகத் தீர்வு எதனையும் பெற இயலவில்லை. இதனைச் சிங்களச் சட்டதரணியான சிறிநாத் பெரேரா வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல முதலாளித்துவ கட்சியாகத் தன்னை மாற்றியுள்ள தேசிய மக்கள் சக்தியும் ஈழத்தமிழர்களுடைய தன்னாட்சி உரிமையை தராது எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னாட்சி உரிமை வேண்டுமெனக் கூற தமிழரிடையே ஒற்றுமை வேண்டும். யாழ்ப்பாணத்திற்கு தான் தனது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பொறுப்பில் இருந்து விலகுமுன் கடந்த வாரத்தில் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் யூலி சங் அவர்கள் நீங்கள் ஒற்றுமையாக வராது விட்டால் தீர்வு குறித்து என்னால் பேச இயலாது என முகத்தில் அடித்த மாதிரி ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரும் தன்னிடம் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் எவரும் எத்தகைய தீர்வு குறித்தும் பேசவில்லை என்று கூறியுள்ளார். தூதரங்களால் இலங்கைத் தீவின் அரசியல் எதிர்காலம் திட்டமிடப்படும் இந்நேரத்தில் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் எதற்காக தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தார்களோ அதனை ஈழத்தமிழர்களின் முடிந்த முடிவாக வெளிப்படுத்திச் செயற்படும் ஆண்டாக 2024 அமைய வேண்டும் என்பது இலக்கின் முள்ளிவாய்க்கால் 15வது நினைவேந்தல் அழைப்பாகவுள்ளது.
பொதுவேட்பாளர் சிந்தனை ஈழத்தமிழரிடையே வேகம் கொண்டுள்ள நிலையில் எதற்குப் பொதுவேட்பாளர் ஈழத்தமிழர் இறைமையின் அடிப்படையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுக்கவா அல்லது இந்திய நோக்கான அனைத்தையும் இழந்து விட்ட 13ஐ நடைமுறைப்படுத்தவா என்பதை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலாவது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தெளிவுபடுத்த வேண்டும். முள்ளி வாய்க்கால் கஞ்சிக்கு கூட தண்டனை வழங்க முற்படும் அரசின் எந்தத் தேர்தலையும் சனநாயகவழியில் புறக்கணிப்பது ஒன்றுதான் ஈழத்தமிழரின் இறைமையை உறுதிப்படுத்த ஒரேவழி.
ஆனால் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க இந்தியா தனது கண்ணியமான தீர்வு என்று 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது பிரிவும் அது உருவாக்கிய வடக்கு கிழக்கு ஒரே நிர்வாக அலகு என்ற இணைப்பும் அனைத்துச் சிங்களத் தலைமைகளாலும் மீறப்பட்டு பொலிஸ் அதிகாரமற்ற நில உரிமையற்ற சிங்கள அரசின் ஜனாதிபதியின் நிதி நிர்வாகப் பரவலாக்கலுக்கான புதிய 13வது திருத்தத்தை ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வாக்க முயல்கிறது. எரிக்சொல்கைம் ஈழத்தமிழர் தாயகத்தில் சிறிலங்கா மேற்கொள்ளும் புதிய பொருளாதார முயற்சிகளுக்கு அனைத்துலக சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதுடன் கூடவே 13ஐ ஏற்பதே நன்று என அரசியலிலும் நெறிப்படுத்தல் செய்கின்றார்.
ஆனால் அவுஸ்திரேலியாவில் இலங்கையில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று வரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளனர். இன்று வரை ஈழத்தமிழர்கள் பாதுகாப்பற்றவர்களாக ஓடுக்குமுறையை எதிர் கொள்கின்றனர் என கிறீன்ஸ் கட்சியின் செனட்டர் டேவிட் சூபிரிஜ் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க காங்கிரசில் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பதைக் காங்கிரஸ் ஏற்கவேண்டும் என்ற முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் ஏற்குதோ இல்லையோ ஆனால் உலகளாவிய நிலையில் உண்மைகள் உலக மக்களுக்குத் தெளிவாகத் தொடங்கியுள்ளது என்பதற்கு இதுவும் உதாரணமாகிறது.
ஆனால் இவற்றுக்கு வலுவூட்டுவதற்கு ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் தாங்கள் இறைமையுள்ள மக்கள் தங்களின் இறைமையை மீள்வித்தல் பிரிவினைவாதமல்ல. தங்களை சிறிலங்கா அரசபயங்கரவாதம் 1970 முதல் 1978 வரை காரணமின்றிக் கைது செய்து விசாரணையின்றி தடுத்துவைத்து இனவழிப்புச் செய்து அதன் உச்சமாக 1979 டிசம்பருக்குள் எல்லா அரசியல் விழிப்புணர்ச்சி உள்ள தமிழர்களையும் கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் எரிக்கவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்த அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் இனஅழிப்புக்கான தற்பாதுகாப்புப் போராட்டமாகவே தொடங்கியது. இது பயங்கரவாதமல்ல என்ற உண்மைகளை பலமாக வெளிப்படுத்த வேண்டும். 2024ம் ஆண்டை ஈழத்தமிழர்களும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களும் இணைந்து ஈழத்தமிழர் இறைமையை அவர்கள் மீளக்கட்டமைப்பது பிரிவினையும் அல்ல அதற்கான அவர்களின் சனநாயக ரீதியான செயற்பாடுகள் பயங்கரவாதமுமல்ல என்பதனை உலக மக்களுக்கு உறுதியுடன் வெளிப்படுத்த இலக்கு மீளவும் அழைக்கின்றது. அப்பொழுதுதான் முள்ளிவாய்க்கால் தந்த வலி வலிமையாகி மக்கள் பாதூப்பான அமைதி வாழ்வு பெறுவர்.

Tamil News