3வது உலகப் போருக்கான முன்னாயத்தக் காலத்தில் ஈழத்தமிழரிறைமையை எவ்வாறு பாதுகாக்கலாம்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 283

3வது உலகப் போருக்கான முன்னாயத்தக் காலத்தில் ஈழத்தமிழரிறைமையை எவ்வாறு பாதுகாக்கலாம்? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 283

இஸ்ரேயல் டமஸ்காசிலுள்ள ஈரானியத் தூதரகத்தைத் தாக்கியதன் எதிரொலியாக ஈரான் இஸ்ரேயலின் மேல் முந்நூறு ஏவுகணைகள் மற்றும் தன்னியக்க வானூர்திகளால் அடையாள வான்வெளி தாக்குதல் நடத்தியது.  இதற்குப் பதிலடியாக இஸ்ரேயல் ஈரானில் அதன் அணுசத்தித் திட்டத்தின் மைய நகராகச் சீனாவின் தொழில்நுட்பப் பலத்துடன் இயங்கும் அணுசத்தி உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தைப் பெறுவதற்கான யுரேனியம் புளோரைட்டைத் தயாரிக்கும்  மூன்று அணுஉலைகளைக் கொண்ட இஷ்கான் நகரின் அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கும் ஈரானின் சீகாரி இராணுவத் தளத்திற்கும்  அண்மையாக வலவனில்லா வானூர்திகளால் வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. அமெரிக்கச் செய்திகள் ஏவுகணைகளால் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை இஸ்ரேயல் நடத்தியதாகத் தெரிவிக்கின்றன. மூன்று பெருவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் வலவனில்லா வானூர்திகளை ஈரான் வெற்றிகரமாகச் சுட்டு விழுத்தியதாகத் தெரிவித்த ஈரானின் வான்வெளி முகவர் நிலையத்தின் பேச்சாளர் குசைன் டலிரின் அவர்கள் ஈரானின் அணுசத்தி நகருக்கு எந்தக் குறிப்பிடத்தக்கப் பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவித்துள்ளார். ஈரான் இதற்கான உடனடி எதிர்வினையெதையும் உடன் செய்யப்போவதில்லையென றொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குக் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கு இஸ்ரேயல் இத்தாக்குதலுக்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்னதாகவே அறிவிப்பு செய்திருந்ததாகவும் ஆயினும் வாசிங்டன் மௌனத்தைக் கடைப்பிடித்துள்ளதெனவும் சில செய்திகள் வெளியாகின. அந்த வகையில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் பலத்தைக் குறைக்கவேண்டுமென்னும் அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டத்துடன் இதனை இணைத்துப் பார்க்கும் திறனாய்வுகளும் வெளியாகின. அமெரிக்கா மத்திய கிழக்கில் ஈராக்கின் சதாம் குசைனின் ஆட்சியையும், லிபியாவில் கடாபியின் ஆட்சியையும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியையும் நிலைகுலைய வைத்த அதேபாணியில் இஸ்ரேலுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று பில்லியன் ஆயுதங்களை வழங்கி அதன்வழி ஈரானின் ஆட்சியை நிலைகுலைய வைக்கச் செயலாற்றுகிறது என்ற கருத்துக்களும் தலைதூக்கியுள்ளன.
எது எப்படியிருப்பினும் மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறிகளாகவே இஸ்ரேயலின் பலஸ்தீனம் மேலான இனஅழிப்பு போரையும், உக்ரேன் ரஸ்யப் போரையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  நேட்டோ அமைப்பு ஏற்கனவே 20 வருடத்துள் ரஸ்யாவுடனான பெரும்போர் மூளும் என்னும் எதிர்பார்ப்புடன்  90000 படையினருடன் போர் ஒத்திகை பயிற்சிகளை மேமாதம் வரை நடாத்துவதற்கான செயற்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.  அதில் 20000 படையினரை பிரித்தானியா இணைத்துள்ளது.  அதே நேரத்தில் பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கிரான்ட் சாப்ஸ் அவர்கள் 5வருடங்களுள் ரஸ்யா, சீனா, ஈரான் வடகொரியாவுடன் பிரித்தானியாவுக்குப் போர் மூளுமென எச்சரித்துள்ளார். இவைகள்  2ம் உலகப் போருக்குப் பின்னரான காலம் என்பது முடிவடைந்து 3வது உலகப் போருக்கான ஆயத்தக்காலம் என்பது உலகில் ஆரம்பமாகியுள்ளது என்ற கருத்து தோன்ற வைத்துள்ளது. பிரித்தானிய மக்களிடை நடத்தப்பெற்ற கருத்துக் கணிப்பெடுப்புக்களும் இதனை உறுதி செய்கின்றன.  53வீதமானவர்கள் அடுத்த ஐந்து வருடத்துள் 3வது உலகப் போர் மூளும் என்ற கருத்தினையே கொண்டுள்ளனர். பிரித்தானியா இவ்வாண்டு இறுதியில் தேர்தலை எதிர்நோக்கும் நிலையில் 2019இல் கொன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் 57 வீதமானவர்களும் லேபர்கட்சியின் ஆதரவாளர்களில் 51 வீதமானவர்களும் போர் வருமென்ற கருத்தினையே கொண்டுள்ளனர். இதனால் இருகட்சிகளுமே பாதுகாப்புச் செலவுகளை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கருத்துக் கணிப்பில் 80 வீதமானவர்கள் ரஸ்யாவே பிரித்தானியாவின் பகைமையாகவும் 68 வீதமானவர்கள் ஈரானும் 64 வீதமானவர்கள் சீனாவும் 64வீதமானவர்கள் வடகொரியாவும் 27 வீதமானவர்கள் பாக்கிஸ்தானும் பகைமை நாடுகளாக அமையும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா பிரித்தானிய நட்பு நாடாக அமையுமென 81 வீதமானவர்களும் பிரான்சென 68 வீதமானவர்களும் யேர்மனியென 63 வீதமானவர்களும் போலந்தென 59 வீதமானவர்களும் அவுஸ்திரேலியாவென 57 வீதமானவர்களும் இஸ்ரேயெலென38 வீதமானவர்களும் தென்கொரியாவென 35 வீதமானவர்களும் யப்பானெ 31 வீதமானவர்களும் துருக்கியென 18 வீதமானவர்களும் இந்தியாவென 25 வீதமானவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.  இவை எல்லாம் 3ம் உலகப் போருக்கு மக்களின் மனநிலையை ஆயத்தம் செய்வதாகவே உள்ளன. இதனை மேலும் வலியுறுத்தக் கூடிய வகையில் பிரித்தானியாவின் பாதுகாப்புக் கொள்கை என்பது பெரிய போர் ஒன்றுக்கான பிரகடனத்தன்மை கொண்டதாக அமைகிறது எனக் எனக் கார்டியன் ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளர் ஓவன் யோண்ஸ் எச்சரித்துள்ளார்.
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாதுகாப்பு செலவீனங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதமாக அதிகரிக்கப்படும் என்னும் தொழிற்கட்சியின் தலைவரின் பிரகடனம் பிரித்தானியா ஆயுத இருப்புக்களை நிரம்பல் செய்வதிலும் வரவிருக்கும் முரண்பாடுகள் குறித்த அச்சத்தினை வளர்ப்பதிலும் அக்கறை காட்டும் என்பதை உறுதி செய்கிறது. ஆயினும் அமைதியை உருவாக்குவதில் இந்த ஆர்வத்தை பிரித்தானியா காட்டவில்லையென ஓவன்  யோண்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.  அவர் ஆங்கில நாவலாசிரியர் ஜோர்ஜ் ஓர்வல் ‘அமைதியின் அமைச்சகம்’ என்ற தனது படைப்பில் குறிப்பிட்ட “பாதுகாப்பு” என்பது நடைமுறையில் “குற்றம்” என்ற சுலோகத்தையும் குறிப்பிட்டு பாதுகாப்புச் செலவீனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் பொழுது அது நடைமுறையில் குற்றத்தை அஞ்சாது செய்வதற்கான தன்மையையும் தோற்றுவித்துவிடும் என்கிற ஜோர்ஜ் ஓர்வலின் அச்சத்தை மீள்நினைவுபடுத்தியுள்ளார். மேலும் பிரித்தானியாவின் மூத்த இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் சேர் பற்றிக் சான்டேர்ஸ் அவர்கள் பிரித்தானியா போருக்கு முன்னதான பரம்பரையினை ரஸ்யாவுடன் போரிடத் தயார் படுத்த வேண்டும் என்று கூறியதை இலக்கம் 10 டவுனிங் ஸ்ட்ரீட் மறுத்து கட்டாய இராணுவ சேவை முறைமைகள் தேவையில்லையென்று கூறிய போதிலும் படைகளின் மனிதவலுவையும் ஆயுதப்பலத்தையும் தொழில்நுட்பப்பலத்தையும் அதிகரிக்கும் திட்டங்களை வேகப்படுத்தச் செய்கிறது.
இவைகள் எல்லாமே உலக மக்கள் 3வது உலகப் போருக்கு முன்னதான மக்களாகத் தம்மை ஆயத்தம் செய்வதை வெளிப்படுத்தும் பொழுது ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகளாவிய நிலையிலும் எப்படித் தங்களை இந்த 3வது உலகப் போருக்கு முன்னதான காலத்தை எதிர்கொள்ள ஆயத்தம் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வியையே இலக்கு இவ்வாரச் சிந்தனையாக முன்வைக்கிறது. பிரித்தானிய காலனித்துவம் ஈழத்தமிழருக்கு அவர்களின் இறைமை வெளிப்படாதவாறு சிறுபான்மை இனம் என்ற அடையாளத்தை உலகின் முன் வழங்கியது. இந்திய மேலாண்மையும் அதன் அமெரிக்க மேற்குலகத் தோழமை நாடுகளும் இணைந்து இன்று ஈழத்தமிழரை சிறிலங்கா என்னும் சிங்கள பௌத்த நாட்டில் வாழும் சமுகம் என்னும் நிலைக்கு அடையாளப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இனஅழிப்பு நோக்கிலான சிறிலங்காவின் பாதுகாப்போ அல்லது இறைமையழிப்பு நோக்கிலான இந்தியாவின் பாதுகாப்போ ஈழத்தமிழர்களுக்கு உலகம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கிடைக்கப் போவதில்லை. அப்படியானால் புலம்பெயர் தமிழர்கள்தான் ஈழத்தமிழர்களை இந்த 3வது உலக போருக்கான ஆயத்தக் காலத்திலும் போர் மூளுமானால் அந்த இக்கட்டான காலத்திலும் பாதுகாப்பதற்கான அவசரகால முகாமைத்துவத்தை உருவாக்க வேண்டும். இதனை செய்வதற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் குழநிலை அமைப்புநிலை போட்டித் தன்மைகளைத் தாண்டி ஒரு பொதுவான அமைப்பினைக் காலம் தாழ்த்தாது சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் மாயையில் மயங்கு வதை விடுத்து உருவாக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வாரப் பணிவன்பான வேண்டுகோளாக உள்ளது.

Tamil News