ஈழத்தமிழர் இறைமையைப் பாரத் லங்கா கூட்டாண்மையிலிருந்து மீட்க அழைக்கிறது சாந்தனின் ஆன்மா | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 276

ஈழத்தமிழர் இறைமையைப் பாரத் லங்கா கூட்டாண்மையிலிருந்து மீட்க அழைக்கிறது சாந்தனின் ஆன்மா | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 276

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டு திருச்சிச் சிறப்பு முகாமில் உள உடல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுச் சாந்தன் காலமாகியமை தமிழக அரசினதும் மத்திய அரசினதும் சட்டக் கொலையாக உலக வரலாற்றுப் பதிவு பெற்றுள்ளது. ஒரு தாயின் பாசத்தின் மேல் விழுந்த யாராலும் ஈடுசெய்ய இயலாத பெரும் துயரமாக, ஒரு உயிரின் விடுதலைக்கான தேடலை சட்டவிரோதமாக உருக்குலைத்த மனிதாயத்திற்கு எதிரான குற்றமாக மிகக் கொடுமையான மனித உரிமை வன்முறையாக அனைத்துலகச் சட்ட வரலாறு இதனைப் பதிவாக்கியுள்ளது
இதற்கான பொறுப்பைத் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்ற வகையில் 29.02.2024
அன்று உயர் நீதிமன்றம் மத்திய அரசு சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி அளித்த நிலையிலும் தமிழக அரசு ஏன் உடன் அனுப்பாது காலதாமதம் செய்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்குச் சாந்தனின் நடமாட இயலாத உடல்நிலை காரணமெனச் சாட்டுச்சொல்லித் தமிழக அரசு தப்பிக்க முயன்றாலும் இருதய நோயாளிகளையே தகுந்த பாதுகாப்புடன் வான் அம்புலன்ஸ் மூலம் மிக நீண்ட தூரங்களுக்கே அழைத்துச் செல்லும் இன்றைய உலகில் திருச்சியில் இருந்து பலாலிக்கு ஒரு மணிக்குள்ளேயே பயணிக்கக் கூடிய விமான வசதியிருந்தும் அதனைக் கூடப் பயன்படுத்தாத தமிழக அரசின் செயலும் மத்திய அரசின் செயலும் சாந்தனின் மரணத்தில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றமையையும் இந்தியாவிலும் சட்டத்தின் ஆட்சி ஈழத்தமிழர்களுக்கு இல்லையென்கின்ற உண்மையையும் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. தமிழக அரசின் இச்செயலுக்கு தாயகத்திலும் உலகிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், யாழ்ப்பாண சிவில் சமுகம் என்பன உட்பட அனைத்து தமிழுணர்வுள்ளவர்களும் தமிழமைப்புக்களும் வெளிப்படுத்தும் பலமான கண்டனத்துடன் ‘இலக்கும்’ இணைந்து கொள்கிறது. வெறுமனே தேர்தல் கோஷமாக தமிழுணர்வையும் தமிழின உணர்வையும் இனியும் திராவிட முன்னேற்றக்கழகம் முன்வைக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசின் இந்தச் செயல் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது உறுதி. அத்துடன் இன்னும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டும் மனித உரிமைகள் வன்முறைப்படுத்தலாக அவர்களின் நடமாடும் சுதந்திரம் தடுக்கப்பட்டுச் சிறப்பு முகாமில் தமிழக மத்திய அரசுக்களால் திட்டமிட்ட வகையில் பழிவாங்கும் நோக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றைய மூவரையும் உடன் விடுதலை செய்ய அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் உடன் செயற்பட வேண்டும் என்பதையும் ‘இலக்கு’ வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
மேலும் சாந்தனின் மரணமும் மற்றைய மூவரின் நாளாந்த சுதந்திர வாழ்வுக்கான மறுப்பும் பாரத் லங்கா கூட்டாண்மைக்குள் எந்த அளவுக்கு ஈழத்தமிழர்களின் இறைமை முடக்கப்படுகிறது என்பதற் கான மற்றொரு உதாரணமாக அமைகின்றன. எனவே பாரத் லங்கா கூட்டாண்மைக்குள் இருந்து ஈழத்தமிழர்களின் இறைமையை ஈழத்தமிழர்கள் மீள்விக்க உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் அனைத்துலக சட்டங்களைப் பயன்படுத்தி உடன் உதவ வேண்டுமென்பது இலக்கின் வேண்டுகோளாக உள்ளது. இதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களின் உலகத் தமிழர்கள் என்ற பலத்தைப் பயன்படுத்தித் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள மனித உரிமைகளையும் அமைதியையும் பேண உதவும் மக்களுக்கும் அமைப்புக்களுக்கும் தெளிவுகளை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக அவர்களின் அரசுக்களையும் அனைத்துலக அமைப்புக்களையும் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை குறித்த அக்கறையினை வேகப்படுத்துவிக்க வேண்டும் என்பது இலக்கின் நெறிப்படுத்தலாக உள்ளது. இதுவே சாந்தனின் ஆன்மாவுக்கான வீரவணக்கமாகவும் அமையும்.
இதனை விடுத்துச் சிறு சிறு தீவுகளாக ஈழத்தமிழர்களின் முழுயான பலத்தைத் தாங்களே உடைத்துச் சின்னச் சின்னக் குழுக்களாக பாழ்செய்யும் உட்பகையும் வெறுப்பும் கொண்டவர்களாக விளங்குபவர்களுக்கு ஈழத்தமிழர்களின் இறைமைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன அழிப்புக்கும் குரல் கொடுக்கும் துணிவு நடைமுறைச் சாத்தியமாகாது. மாறாகத் தாங்கள் ஈழத்தமிழர் களின் இறைமையை ஒடுக்கும் அரசுகளுக்குத் துணை போய் அவர்களின் முகவர்களாகத் தாங்கள் விரும்பியவாறு ஈழத்தமிழர்களின் உயிரால் முத்திரையிடப்பட்ட தெளிவான முடிவுகளை எல்லாம் மாற்றியமைத்து, ஏதோ ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்புக்கும் அமைதிக்கும் எதையோ வெட்டி விழுத்தி
விட்ட மாதிரி தோற்றம் காட்டுவதுதான் நடைமுறைச்சாத்தியமாகும். இன்று அத்தகைய அத்தனை உலக ஈழத்தமிழர் அமைப்புக்களுக்கும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒருவருக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வைக் கூட உருவாக்க உங்களால் இயலவில்லை என்பதையே சாந்தனின் மரணம் சரித்திரமாக்கியுள்ளது.
இனியாவது இந்த தனித்துத் தவில் வாசிக்கும் தன்னல இசைக்கச்சேரிகளை நிறுத்தி விட்டு பொதுத்தளத்தில் ஒருமைப்படுங்கள். அதில் உங்கள் எண்ணங்களையும் பேச்சக்களையும் செயல்களை யும் வெளிப்படுத்துங்கள். அதன் பலத்தையும் பலவீனத்தையும் அதனைச் செயற்படுத்தக் கூடிய வாய்ப்புக்களையும் அதற்கு உள்ள அச்சுறுத்தல்களையும் தேசமாகப் பகுத்தாராய்ந்து, அதற்கான சத்தியளித்தல்களைச் செய்வோம். குழுநிலையில் இருந்து விடுபட்டுத் தேசமாக நாம் எழுகின்ற பொழுதுதான் அனைவரது தாயக தேசிய தன்னாட்சி நோக்கிய முயற்சிகளையும் அவை பிரிவினை யல்ல பயங்கரவாதமல்ல ஈழத்தமிழர்களின் தேசநிர்மாணச் செயற்பாடுகளென அனைத்துலக அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் விலத்தல் நிலையில் நின்று உள்வாங்கல் நிலைக்குள் உட்படுத்த முடியும். அனைத்துலக அமைப்புக்கள் நாடுகள் வழியான ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலகச் சட்டப்பாதுகாப்பை ஏற்படுத்திட நாங்கள் குழுக்களல்ல ஒரே தேசத்தவர் என்ற முழுமைப்படுத்தல் உடன் அவசியம். இதுவே ஈழத்தமிழரின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் நடைமுறையின் வழியான அவர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் உறுதிப்படுத்தி அவர்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்கள் நிர்ணயிக்க உதவும். இதுவே இலக்கின் உறுதியானதும் இறுதியானதுமான எண்ணம். பேசிப்பேசிக் களைத்தது போதும். பேசாது செயலில் இணைவோம். செயலால் உறவுகள் மீளுருவாக்கம் பெறும். உறவுகளின் பிணைப்பு தேசத்தின் நிர்மாணத்திற்கான சத்தியை வெளிப்படுத்தும். அப்பொழுது மக்கள் தலைமைத்துவம் தோன்றும். இந்த மக்கள் தலைமைத்துவம் தான் தேசியத் தலைவரின் கனவு. கனவு நனவாகும். மாண்டவை சனநாயக வழிகளில் மீளும். வாழ்வு மாறுபடுவதேயன்றி அழிக்கப்படுவதில்லை. காலமாகிய சாந்தன் வித்துடல் விடுதலையை ஊக்குவிக்கும் மண்ணினதும் மக்களதும் மீளப்புதுப்பிக்கும் ஆற்றலாக!

Tamil News