இந்தோ சிறிலங்கா தேசியவாதமும் ஈழத்தமிழர் இறைமையும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 274

இந்தோ சிறிலங்கா தேசியவாதமும்
ஈழத்தமிழர் இறைமையும் | Ilakku Weekly ePaper 274

பிரித்தானிய காலனித்துவ அரசு சந்தை இராணுவத் தேவைகளுக்காக 1833ம் ஆண்டு கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் “சிலோன்” என்ற ஒற்றையாட்சி அரசில் “சிலனிஸ்” என்ற பொதுத் தேசியத்துள் தமிழ்த் தேசியத்தையும் சிங்களத் தேசியத்தையும் செயற்கையாக இணைத்து 115 ஆண்டுகள் தாங்கள் ஆண்டு காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக 04.02.1948 இல் தங்களால் உருவாக் கப்பட்ட அந்தச் செயற்கையான “சிலோன்” அரசுக்கு சுதந்திரம் வழங்கியமையே இலங்கைத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையின் மூலமாக இன்றும் உள்ளது. இதனாலேயே பலஸ்தீனிய மக்கள் தேசியப் பிரச்சினை போன்றே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையும் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக உலக நாடுகளாலும் ஐக்கிய நாடுகளாலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை ஏற்புடைய தீர்வை நடைமுறைப்படுத்த இயலாமைக்குக் காரணம் இந்தியா. இந்தியா, தான் 1987 இல் இந்திய சிறிலங்கா உடன்படிக்கையின்படி தமிழர்களுடைய கண்ணியமான வாழ்வை 13வது திருத்தத்தின் மூலம் உருவாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைத் தடுத்தது. ஆனால் 13 வது திருத்தத்தின் வடக்கு கிழக்கு ஒரு நிர்வாக அலகு என்ற மிகச்சிறிய நிர்வாக இணைப்புக் கூட இன்று இந்தியா அழைத்துப் பேசும் ஜே. வி. பியால் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டு விட்டது. இவ்வாரம் சிறிலங்காவின் பிவிதுருஹெல உறுமயக் கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில 13 வது திருத்தம் மாகாணசபை சமுகப் பொலிஸ் அதிகாரத்தை வழங்குகிறதென அதனை நீக்குமாறு சிறிலங்காப் பாராளுமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை தனியாள் மசோதாவாக கொண்டு வர வர்த்தமானிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சிங்கள அரசியல்வாதிகள் 13வது திருத்தம் ஈழத்தமிழர்களுக்கான தொடக்கமாக எந்த வகையிலும் அமைய அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மாண்பமை சுப்பரமணியம் ஜெயசங்கர் அவர்களுக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
உண்மையில் இந்திய சிறிலங்கா ஒப்பந்தம் 1987 இல் கைச்சாத்தானதின் வழி இலங்கைத் தீவின் அரசியலில் ‘இந்தோ சிறிலங்கா தேசியவாதம்’ சட்டநிலையில் தோன்றியது. இது இந்தியாவின் பிராந்தியத்துக்கான பரந்துபட்ட பாதுகாப்பு என்ற மையப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அயல்நாட்டினர்க்கான முன்னுரிமை என்ற செயல்முறையுடன் கூடிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருநாடுகளின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் தலைமை நோக்குடையது. பொருளாதாரத்தைக் கூட்டாக வளர்த்தல், பௌத்தத்தை மேம்படுத்தி இந்தோ சிறிலங்காப் பண்பாட்டு வளர்ச்சிக்கான உறவுப்பலாமாக அதனை முன்னெடுத்தல் என்னும் பொதுமைகளின் அடிப்படையில் உருவான தேசியவாதம். இந்தத் தேசியவாதம் இந்தியா சிறிலங்கா மக்களின் நலன்கள் சார்பாக முக்கியத்துவப்படுத்தப்படாது ஆட்சியாளர்களிடையான அயல்நாட்டினர் என்ற உறவுப் போக்குக்கு முன்னுரிமை அளித்து சிறிலங்காவின் பாதுகாப்புக்கோ பொருளாதாரத்துக்கோ அபாயங்கள் ஏற்படுகின்ற நேரத்தில் முதலில் சிறிலங்கா உதவி கோரும் அயல் அரசாக இந்தியா தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அப்படி தான் உதவ இயலாதென்றாலே சிறிலங்கா வேறு நாடுகளை அணுகலாம். இது பிராந்திய மேலாண்மையை நாகரிகமான முறையில் சிறிலங்காவின் மேல் நிறுவிய செயற்பாடு. இந்த உடன்படிக்கையில் தமிழர் வரலாற்றுத் தாயகம் தமிழர்களின் தேசியம் தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலான அரசியல் தீர்வுகள் எதுவும் பேசப்படவில்லை. ஜே. ஆரின் மாவட்டசபைக்குப் பதிலாக வடக்கு கிழக்கு இணைந்த ஒரு நிர்வாக அலகான மாகாணசபையை முன்மொழிந்தது. இது சிறிலங்காவின் நிதிப்பரவலாக்கலில் வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கான பொதுத்திட்டமிடலுக்கு உதவும் நோக்கானது. இந்த ஒரலகு என்பது ஜே. வி. பி யின் நீதிமன்ற வழக்கால் நீக்கப்பட்டுவிட்டது. மேலும் இன்று இந்தியப் பொருளாதாரத்தின் தலைமையில் சிறிலங்காவின் பொருளாதாரம் கூட்டொருங்கு முறையில் வளர்க்கப்பட வேண்டும் என்ற புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையின் தேவைக்கு ஏற்ப எல்லாவிதமான இணைப்புக்களும் கொண்ட பொருளாதாரமாக இந்தோ சிறிலங்காப் பொருளாதாரம் மாற்றம் கண்டுள்ளது.
இந்தியா எதுவித எதிர்பார்ப்புமில்லாமல் மிகப்பெருந்தொகையான நிதியை சிறிலங்காவுக்குத் தனது நாட்டுக்கு வழங்குவது போலவே வழங்கியும் புலனாய்வு சிவில் நிர்வாகம் என்பவற்றில் இணைந்தும் இறைமைப்பகிர்வை உறுதி செய்து இந்தியாவின் யூனியன் பிரதேசம் போலவே சிறிலங்கா மாறிவிட்டதைத் தெளிவாக்குகிறது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இனம்சார்ந்த நிலையில் பரிணாமம் அடைந்து வரும் தமிழகத் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்ற இனஉறவுத் தமிழ்த்தேசியவாதத்திற்கு எதிரான தொப்புள்கொடி அறுப்பு முயற்சியாகவும் உள்ளது. இந்தோ சிறிலங்கா தேசியவாதம் ஈழத்தமிழரிடையிலேயே இலங்கையில் அவர்கள் ஒருமதம் சார் பண்பாட்டை ஏற்கும் அளவுக்கு மதவெறியாகவும் மாறி வருகிறது. சிங்களவர்களும் தங்களுடைய சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு இந்தோ சிறிலங்கா தேசியவாதம் பேரெழுச்சி தரும் ஒன்றாக உள்ளதால் ஏற்று வருகின்றனர். இதுவே ஜே.வி.பி யினரின் அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான குழுவுக்கான இந்திய உயர்மட்டச் சந்திப்புக்கான அழைப்பு என்பதை அங்கு சென்று வந்ததின் பின்னர் ஜே. வி. பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித கெரத் டெய்லி மிரர்க்கு வழங்கிய செவ்வியில் தெளிவாகக் காணலாம். “பிராந்தியப் பாதுகாப்புக்கு நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்கத் தயார்.” இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையின் பாதுகாப்பு – இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பு. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை எங்களுக்கானதாக மாற்ற மாட்டோம். நுரைச்சேலை மின்நிலையத் திட்டம் சீனாவுக்கு, சம்பூர் இந்தியாவுக்கு என ஒருநாட்டின் நலனுக்காக மற்றைய நாட்டின் நலனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் இந்தியா சென்றது இரண்டு நாடுகளாக நாங்கள் நெருக்கமாக எப்படி இணைந்து பணியாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்ள உதவியுள்ளது என்ற விஜித கெரத்தின் வார்த்தைகள் அநுரதிசநாயக்காவுக்கே இந்திய அமெரிக்க ஆதரவுநிலை அரசுத்தலைவர் தேர்தலில் உறுதியென்பதையும் தெளிவாக்குகிறது.
இந்நிலையில் அதிகாரம் இல்லாத கட்சிக் கதிரைக்குத் தேர்தல்களும் நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவுகளும் பெற்று ஏதோவொரு உலகத்தில் தமிழரசுக்கட்சி உள்ளமை வேதனை பயக்குகிறது. இதுதான் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் நிலையா எனச் சோராதவாறு ஈழத்தமிழர் இறைமை மீட்புக்கு மூன்று தூண்களை பலஸ்தீனிய விடுதலைப் போராட்டம் காட்சிப்படுத்துகிறது. 01. படைவழி ஆக்கிரமிப்பு மூலம் நிலத்தை ஆக்கிரமித்து அதனைத் தங்கள் தேசமாக மாற்ற முடியாது ( ஐக்கிய நாடுகள் பாதுகாப்பச் சபையின் 242 தீர்மானம் ) 02. தங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உலக ஆதரவைத் தேட முடியாது 03. ஆக்கிரமிப்பைச் செய்யும் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த மக்களாலேயே நிராகரிக்கப்படுவர். இஸ்ரேயலின் பலஸ்தீனிய மக்கள் மேலான போர் ஆய்வின் இந்த மூன்று ஆய்வு வெளிப்பாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு தங்கள் தாயகம் படைபல ஆக்கிரமிப்புள் இருப்பதையும், சிறிலங்கா சட்டவிரோதமான தனது ஆட்சிக்கு உலக ஆதரவை பெற இயலாது என்பதையும் இன்று சிறிலங்கா 91 பில்லியன் டொலரில் மீள முடியாத துன்பத்துள் நாட்டின் எல்லா மக்களையும் ஆழ்த்தியுள்ளது. ஈழத்தமிழர் மேலான இனவெறி மதவெறித் தனமான போரினாலும் அதன் விளைவுகளாலும் என்பதால் அதனை எல்லா மக்களும் நிராகரிக்கும் காலம் நெருங்கி விட்டது என்பதையும், மனதிருத்தி, இந்த மூன்று தூண்களின் வழியிலும் ஈழத்தமிழர்கள் நிலையை உலகுக்கு எடுத்துரைத்து விரைவில் ஈழத்தமிழர்க்கான தளைகளிலிருந்து விடுபடும் ஆற்றலை வளர்க்கலாம் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.

 

Tamil News