ஈழத்தமிழர் இறைமையும் பொதுவான இணக்கமும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 273

ஈழத்தமிழர் இறைமையும் பொதுவான இணக்கமும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 273

சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை 08.02.2024 இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலை இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக வலயமாகச் செயற்படத் தொடங்கி விட்டதென்பதையும் தாய்லாந்து சிங்கப்பூர் இந்தோனேசியா, சீனாவுடன் சுதந்திர வர்த்தக வலயங்கள் ஏற்படுத்தப்படுமென்பதையும் அவரது உரையில் ரணில் அறிவித்தார். மேலும் மேல் மாகாணத்துள் பெருமளவிலான பொருளாதார முயற்சிகள் உள்ள நிலையை மாற்ற யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் பொருளாதார மையங்கள் விரைவு படுத்தப்படும் எனவும் அறிவித்தார். இவை தமிழர் தாயக நிலம் கடல் வானம் என்பன தமிழரின் கருத்துக்கேள்படாத நிலையில் அனைத்துலக பாகங்கள் பொருத்தும் இடைநிலைச் சந்தையாகவும், இந்து சமுத்திரத்தின் சேவைகள் நிலையமாகவும் பொருளாதார மையமாகவும், மீள் உற்பத்தி செய்யும் வலுச்சத்திகள் மையமாகவும், தனியார் பல்கலைக்கழக மையமாகவும் மாற்றப்படப்போகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. தமிழர் தாயக வளத்தையும் தமிழர்களின் மனிதவலுவையும் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட தான் நினைத்த மாதிரி மூலதன வரவுக்காக பயன்படுத்துவேன் என்ற ரணிலின் செய்தி இதன்வழி தெளிவாகியுள்ளது. தமிழர் தாயக நிலங்களையும் கடலையும் வானையும் உலக வல்லாண்மைகளுக்கும் பிராந்திய மேலாண்மைகளுக்கும் விற்பதே அவரின் பொருளாதார நெருக்கடிக்கான உத்திகளில் முக்கியமானதாகத் தெரிகிறது. இது ஈழத்தமிழர்களுக்கான எல்லா நெருக்கடிகளுக்குமான தொடக்கமாகும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வெளிநாட்டுக் கடன் சீரமைப்பு என்பன 91 பில்லியன் டொலர் கடனை கடன் கொடுத்தவர்கள் ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர்கள் படி காலத்தை நீட்டிக் கட்ட உதவினாலும் கூட தனியார் கடனே அதிகமாக இருப்பதால் அவர்கள் நீண்ட காலத்துக்கு குறைத்துக் கட்ட அனுமதியார்கள். இதனால் அனைத்துலக நிதியம் மற்றும் உலக வங்கி இலங்கை மக்கள் மேல் திணிக்கும் கடுமையான திட்டங்களாலும், அரசின் இவ்வருட வருமானம் 4127 பில்லியனாகவும் செலவீனம் 6978 பில்லியனாகவும் இதில் வட்டியாக மட்டும் 2651 பில்லியன் அமைவதா லும், இலங்கையில் மக்கள் வாழ இயலாத பொருளாதார நெருக்கடியே தொடரும். இதனால் உள்நாட்டுக் கிளர்ச்சி எழுவதைச் சமாளிக்கப் புத்தர், கன்பிசியஸ், மகாகவி பாரதியார் வழி அவர்
ரணில் அறிவுரைகளையும் பகர்ந்துள்ளார்.
“நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து விடுபட முடியாது. நெருக் கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும் நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது” எனத் தனது உரையைத் தொடங்கினார். அப்படியானால் இந்த கூற்றின் அடிப்படையில் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களுடைய பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுக்கான நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தீர்க்க முயல்வதைச் சிறிலங்கா அரசாங்கம் பிரிவினை என்றும் பயங்கரவாதம் என்றும் வரைவு செய்கின்ற தவறை சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கா இனியாவது திருத்திக் கொள்வாரா? ரணில் விக்கிரமசிங்கா மட்டுமல்ல ஈழத்தமிழர் அரசியல்வாதிகளும் ஈழத்தமிழர் அமைப்புக்களும் நெருக்கடியைச் சபிப்பதையும் நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதையும் நிறுத்தி நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பது குறித்து சிந்தித்துச் செயலாற்றுவார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
மேலும் சிறிலங்கா ஜனாதிபதி “நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்குப் புத்தரின் “தங்களுக்குத் தாங்களே ஒளியாக வேண்டும்” என்ற போதனையின் வழி நெருக்கடிகளைச் சமாளிக்கும் செயல்முறையைத் தன்னிடமிருந்தே தொடங்க வேண்டும். உலகில் எங்கும் ஏனையவர்களைக் குறை கூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது. எம்மை எமக்கான ஒளியாக மாற்றா விட்டால் நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாது விட்டால், நமக்கு நன்மை நடக்காது, நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. நெருக்கடிக்குத் தீர்வும் இல்லை. முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால் ‘சிஸ்டம் சேஞ்’ பற்றித் தொண்டை கிழியக் கத்தினாலும் நாம் அடிப்படையில் இருந்து மனம் மாறாவிட்டால் முறைமையை எம்மால் மாற்ற முடியாது” என விளக்குகிறார் அதே வேளை இந்தக் கொள்கை விளக்க உரைக்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தான் சிறிலங்காவின் தங்கள் மேலான இனஅழிப்புச் “சிஸ்டம் சேஞ்சுக்காக” ஈழத்தமிழர் தாயகமெங்கும் 04.02. 2024இல் சிறிலங்காவின் 76 வது சுதந்திர தினத்தை கரிநாளாக சனநாயக வழிகளில் அமைதிப் போராட்டங்கள் பேரணிகள் மூலம் வெளிப்படுத்தினர். அந்நேரம் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் ஈழத்தமிழ் மாணவர்கள் இளம் பெண்கள் இளைய சமுகத்தினர் முதியவர்கள் அனைவரையும் இதே ரணில் விக்கிரமசிங்காவின் பொலிசார் அடிமைகளை நடாத்துவது போல் பெண்களை ஆண் பொலிசார் காரணமின்றி உடலில் தொட்டுத்தள்ளும் பண்பாட்டு மரபு மீறல் உட்பட தாக்கி அடித்தல் தண்ணீர்தாரை பாய்ச்சுதல் தெருக்களில் தரையில் நாய்களைப் போல் கொர கொர இழுவையாக இழுத்துச் செல்லல் கைதுசெய்தல் பதிவாகின. இது ரணில் விக்கிரமசிங்கா ‘சிஸ்டம் சேஞ்’ பற்றிப் பேசினாலும் அவருக்குக் கனவிலும் அதனை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அறவே இல்லையென்பதை உலகுக்குத் தெளிவாக்குகிறது. மேலும் இலண்டனில் ஈழத்தமிழர்கள் நடாத்திய 04.02. 2024 கரிநாள் பேரணிக்கு ரணிலின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோக பூர்வமான கண்டனத்தைக் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதுவருக்குத் தெரிவித்துள்ளமை ரணிலின் அரசாங்கம் ஈழத்தில் மட்டும் அல்ல உலகில் உள்ள ஈழத்தமிழர்களையும் அவர்களுடைய தாயக மக்களின் ‘சிஸ்டம் சேஞ்’ க்கு சனநாயக வழிகளில் குரலெழுப்ப அனுமதிக்காது என்பதை கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குள் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
மேலும் மகிந்தாவின் சிந்தனையான “ஒரு சிறிலங்காவினர்’ என்ற பல்லின பன்மொழி பல்கலாச்சாரத்தை மறுத்தல் ரணிலின் சமுக கொள்கை. கோட்டபாயவின் தம்மை ஆட்சிக்குக் கொண்டுவந்த சிங்கள பௌத்த மக்களுக்கே தங்கள் ஆட்சி பணி என்ற சிந்தனை” ‘சிறிலங்காவினரின் தேவைகளுக்கு’ என்ற ரணிலின் அரசியல் கொள்கை. இந்தச் சிறிலங்காவினரின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு அனைவரும் கூட்டொருமித்த கருத்துடன் ‘பொதுவான இணக்கத்துடன்’ பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வைத்தல் என்பது ரணிலின் பொருளாதாரக் கொள்கை. இந்த ஒரு சிறிலங்காவினர் – சிறிலங்காவின் தேவைகளுக்காக- பொதுவான இணக்கத்துடன் கூடிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உழைத்தல் என்பதே ரணிலின் நிர்வாகம். இவை ஈழத்தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லீம் மக்களையும் நாட்டுரிமையற்ற சிறிலங்காவின் சமுகத்தினர் (Community) என்ற அடிமைநிலை உருவாக்கம். இதனை நிறைவேற்றிய பின்னர் 2026 இல் அடிமையாக்கப்பட்ட சமுகத்தினர்க்கான சிங்கள எசமான்களின் கருணைப் பார்வைக்கான உளவியலை உருவாக்கலே ரணிலின் நல்லிணக்கம். ரணிலின் சமுக நீதியென்பது சிங்கள எசமான்களுடன் சமரசமாக மற்றவர்களை பழக்குதல். இந்நிலையில் இதனைத் தடுக்க ஈழத்தமிழர்களையும் மலையக மக்களையும் முஸ்லீம்களையும் கூட்டொருங்குச் செயற்பாட்டுக்குள் கொண்டு வரவல்ல பொது அமைப்பு உடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம்.