பலஸ்தீனியர் இறைமையும் ஈழத்தமிழர் இறைமையும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 272
இருதேச அரசு கொள்கையின் அடிப்படையில் பலஸ்தீனிய தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் பிரித்தானியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியைப் பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளர் சேர். டேவிட் கமரோன் தெரியப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் 2024 சனவரி 30க்கு இடையில் இஸ்ரேயல் பலஸ்தீனிய மக்கள் மேலான காட்டுமிராண்டி யுத்தத்தால் 25000க்கு மேற்பட்ட பலஸ்தீனியக் குழந்தைகள் பெண்கள் வலுவிழந்தவர்கள் நோயாளிகள் பொதுமக்களை இனஅழிப்புச் செய்து 1.6 மில்லியன் பலஸ்தீனியர்களை அவர்களின் வாழ்விடங்களை தாக்கியழித்து வெளியேற்றி அவர்களது வாழ்வாதார உட்கட்டுமானங்களையும் பாழ்படுத்தி அந்தப் பகுதிகளுக்குத் திரும்பி வந்து அவர்கள் குடியமர முடியாமல் செய்த இன்றைய சூழலில் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரின் இந்த இருதேசத் தீர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘இஸ்ரேயல் சனநாயக ஆட்சி நடைபெறும் நாடல்ல இனஒதுக்கல் அடிப்படையில் விலக்குதல் ஆட்சியை முன்னெடுக்கும் நாடு’ என்று அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான அமைப்புக்கள் உலகளாவிய நிலையில் மக்கள் மயப்படுத்தியதன் விளைவே இன்று அனைத்துலக மக்களின் அழுத்தம் காரணமாக பலஸ்தீனீயர்களுக்கான தேசத்தையும் ஏற்கின்றோம் என்கின்ற இருதேச அரசுத் தீர்வு பலம் பெறுகிறது. 1998ம் ஆண்டு உரோம சாசனத்தின் படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கட்டமைக்கப்பட்ட பொழுது “திட்டமிட்ட ஆக்கிரமிப்பு மூலமும் மேலாண்மை வழியாகவும் ஒரு இனத்துவக் குழுவை மற்றொரு இனத்துவக்குழவை ஒடுக்கி அவர்கள் வாழும் பகுதியைத் தங்களுடையதாக்கத் துன்புறுத்தல் செய்வது மனிதாயத்துக்கு எதிரான குற்றம். அத்துடன் இது அடிப்படை மனித உரிமைகளையும் அனைத்துலகச் சட்டங்களையும் அந்தக் குழு அனுபவிப்பதைத் தடுக்கும் குற்றமுமாகும்.”எனத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே தென்னாபிரிக்கா இஸ்ரேயலை அனைத்துலக நீதிக்காக நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது. நீதிமன்ற நெறிபப்டுத்தலாக இஸ்ரேயல் அனைத்துலக யுத்த மரபுசாசனங்களை சிலவிடயங்களில் மீறியிருக்கிறது என்று கூறினாலும் இஸ்ரேயலை பலஸ்தீனத்தின் மீதான யுத்தத்தை நிறுத்தும்படி நெறிப்படுத்தாது அதனை அனைத்துலக யுத்தச் சட்டங்களைப் பின்பற்றும்படியும் இனஅழிப்பு நடைபெறாத வகையில் அதனுடைய இராணுவம் செயற்படுவதை உறுதி செய்யும்படியுமே நெறிப்படுத்தியது. இந்நிலையிலேயே பிரித்தானிய அமெரிக்க அரசுக்களின் பலஸ்தீனியர்களுக்கான இருதேச அரசுத் தீர்வு தங்களின் அனைத்துலக கண்ணியத்தை அனைத்துலக புதிய அரசியல் ஒழுங்கில் காப்பாற்றும் முயற்சியாக முன்மொழியப்பட்டு வருகிறது. இருதேச அரசுத் தேர்வை, இஸ்ரேயலை பலஸ்தீனிய மக்களிடை காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி உருவாக்கிய பிரித்தானியாவும் அதனை மத்திய கிழக்குக்கான தனது கைப்பொம்மை அரசாக ஆயுத நிதி உதவிகள் மூலம் மாற்றி 1967இல் படையெடுப்பு மூலம் இஸ்ரேயல் யோர்தான் அரசிலிருந்து கைப்பற்றிய வெஸ்ட்பாங் மற்றும் கிழக்கு யெருசலேம் பகுதிகளையும் அதே போரில் எகிப்தின் அரசிலிருந்து கைப்பற்றிய காசா பகுதியினையும் இன்று வரை இஸ்ரேயல் தனது அரசு என்று ஆக்கிரமித்து 700000 இஸ்ரேலியர்களை ஆக்கிரமித்த நிலங்களில் குடிகளாக்கி ஆட்சி செய்வதை உறுதிப்படுத்தி நிற்கும் அமெரிக்காவும், இன்று சீனாவை முன்னிறுத்திய புதிய உலக அரசியல் ஒழுங்கு மேலெழும் சூழலில் புதிய உலக அரசியல் பொருளாதார செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாட்டு மாற்றங்களுக்கு முகங்கொடுக்க இயலாது பலஸ்தீனிய தேசம் இஸ்ரேலிய தேசம் என்கின்ற இருதேச அரசுத் தீர்வு குறித்துப் பேசத் தொடங்கியுள்ளன. இது சமுகநீதியின் அடிப்படையிலோ அல்லது உலக அமைதிக்கான நோக்கிலோ அல்ல தங்களின் இருப்பைப் பாதுகாக்கும் போக்கிலேயே இடம்பெறுகிறது.
ஆனால் இந்தத் தீர்வை இஸ்ரேயல் பலஸ்தீனத்தைத் தங்களுக்குச் சமமான அரசாக ஏற்க மறுத்து தங்களைவிட குறைவான “ஸ்ரேட் மைனஸ்” என்ற நிலையில் பாதுகாப்புக்கான ஆயுதப்படைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படாத நிதியிலும் வெளியுறவிலும் இஸ்ரேயலுக்குக் கட்டுப்பட்ட பலஸ்தீனிய இருப்பை ஏற்க விரும்புகிறார்கள். காரணம் முழுஅளவான அரசாக ஏற்றால் தாங்கள் இனத்துவ சிறுபான்மையாகி பலஸ்தீனியர்களில் தங்கி வாழும் நிலை உருவாகும் எனக் கருதுகின்றார்கள். ஆனால் கடந்த கால அனுபவங்களில் இஸ்ரேயல் அரேபியர்கள் மேலான யூத மேலாண்மையை நிறுவுவதற்குப் பலஸ்தீனியர்களை இனத்துடைப்பு இனஅழிப்பு பண்பாட்டு இனஅழிப்பு செய்யும் அரசியல் கொள்கைகள் கோட்பாடுகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 2018 முதல் அரபு மொழியையும் உத்தியோகபூர்வ மொழி என்பதை மறுத்த சட்டத்தின் மூலம் இஸ்ரேயலில் ஐந்தில் ஒரு பகுதியில் உள்ள அரபுமொழி பேசுபவர்களுக்கு நாளாந்த வாழ்வு மறுப்பையும் ஏற்படுத்தினர். பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியரை குடியமர் மக்களாக ஏற்று அவர்களின் அரசியல் உரிமைகளைத் தாங்கள் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப உறுதிப்படுத்த விரும்புகின்றார்களே தவிர இஸ்ரேயலைத் தங்களுக்குச் சமமான அரசாக ஏற்கத் தயாரில்லை.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கும் பலஸ்தீனிய தேசியப்பிரச்சினைக்கும் இடையில் உள்ள இனஒதுக்கல் இனவிலக்கல் இனஅழிப்பு குறித்த விடயங்களில் உள்ள ஒற்றுமைகளை மையப்படுத்தி இருதேச அரசுத் தீர்வு ஈழத்தமிழர்களுடைய தேசிய பிரச்சனைக்கும் இயைபுடையது என்கின்ற கருத்தாடல்களும் இப்போது எழுகின்றன. ஆனால் இஸ்ரேலியர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டுப் பாரிய புலப்பெயர்வு அடைந்து 985 ஆண்டுகளின் பின்னர் மீளவும் தங்கள் தொன்மைத் தாயகத்தில் குடிவரவு பெற்றவர்கள். அவ்வளவு ஆண்டுகளும் பலஸ்தீன மக்களின் இறைமையிலேயே அம்மண் இருந்த நிலையில் அவர்களுடனான பேச்சுக்கள் மூலமான மீள்குடியமர்வு இடம்பெறாததுதான் அங்குள்ள தேசியப் பிரச்சினை. ஆனால் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிற உலகின் மூத்த மக்கள் இனம். இந்த இறைமையின் அடிப்படையிலான ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைப் பிரித்தானிய முடிக்குரிய அரசே தன்னிச்சையான செயல்களால் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைமைக்குள் கட்டமைத்தது என்பதால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது காலனித்துவ காலத்துத் தீர்க்கப்படாத பிரச்சினையாக ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினை. இதனாலேயே பிரித்தானிய காலனித்துவம் விலக்கப்பட்ட 76 வது ஆண்டு நிறைவான 04.02. 2024இல் பிரித்தானிய மாண்பமை மன்னரை நோக்கி ஈழத்தமிழர்கள் தேசமாக எழுந்து தங்கள் தன்னாட்சிக்குரலை எழுப்பி பிரித்தானிய மாண்பமை மன்னரிடம் உண்மைகளை உலகுக்கு உறுதிப்படுத்தி தங்களுடைய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைக்க உதவுமாறு பேரணி நடாத்துகின்றனர். பொருத்தமான காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தேவையான சனநாயகச் செயற்பாடு. மாண்பமை மன்னரும் அவரின் பிரித்தானிய அரசும் நீதியும் நேர்மையுமான முறையில் ஈழத்தமிழர்களின் தனியான அரசைத் தாங்களே தங்கள் ஆட்சி நலன் கருதி ஒன்றிணைத்ததால் இன்று ஈழத்தமிழர்களும் பலஸ்தீனிய மக்களை விட மிகமோசமான நிலையில சிறிலங்காவின் இனஅழிப்பு மூலமான தங்கள் இருப்பினை இழக்கும் நிலை மாறிட இயன்றன செய்ய வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகவே உள்ளது. ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் இறைமையற்ற பதவிகளுக்கான சங்கீதக் கதிரை விளையாட்டை விட்டு விலகி இறைமையை முன்னிலைப்படுத்தி சனநாயக வழிகளில் தங்கள் அரசியலை உறுதியுடனும் ஒற்றுமையாகவும் முன்னெடுக்கச் “சம்பந்தர் சகாப்தம்” என்ற இருள் படிந்த 14 ஆண்டுகளை முடித்துவைத்துள்ள புதிய தமிழரசுக்கட்சித் தலைவர் சிறீதரன் உரியன செய்து உலகத் தமிழர்களையும் இணைத்து சமுக முதலீடுகளால் வறுமையையும் அரசியல் அறிவூட்டலால் அறியாமையும் நீக்குவாராக!