ஈழத்தமிழர் இறைமையை முன்வைத்து அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 271

ஈழத்தமிழர் இறைமையை முன்வைத்து அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 271

இலங்கைத் தீவு தமிழ் சிங்கள அரசுக்களை உள்ளடக்கிய தேசமாகவே பிரித்தானியா 1833இல் யாழ்ப்பாண வன்னித் தமிழரசுக்களையும் கோட்டே கண்டிச் சிங்கள அரசுக்களையும் ‘சிலோன்’ என்ற ஒரு அரசாக ஆட்சிப்படுத்தத் தொடங்கும் வரை தமிழ் சிங்கள இறைமைகள் தனித்தனியாக இருந்தன. இரு தேசங்கள் ஒரு தேசமாக பிரித்தானிய காலனித்துவ அரசால் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயற்கையான முறையால் உருவாக்கப்பட்டு செயற்கையான ‘சிலனிஸ்’ என்ற தேசியம் ஒன்றும் 115 ஆண்டுகள் பிரித்தானியாவால் கட்டமைக்கப்படக் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் 1921 முதல் ஈழத்தமிழ்த் தேசியம் என்பதும் சிங்களத் தேசியம் என்பதும் ‘சிலனிஸ்’ தேசியமாக ஒருமைப்பாடு அடையவில்லை என்பது வரலாறு. இந்த வரலாற்று உண்மைகளை உள்வாங்காது சட்டவாக்கத்தில் சிங்களப் பெரும்பான்மை தோன்ற மன்னிங்ஸ் அரசியல் சீர்திருத்தத்தின் மூலமும் நிர்வாகத்தில் தனிச்சிங்கள அமைச்சரவை தோன்ற டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலமும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற கொடுங்கோன்மை தோன்ற 04.02. 1948 இல் சிலோனுக்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பு மூலம் சுதந்திரம் வழங்கி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் முடிக்குரிய அரசகுடும்பத்தினர் கட்டமைத்த இலங்கைத் தீவுக்கான அரசியலமைப்பு மாற்றங்களே ஈழத்தமிழர்களின் இறைமை சிங்கள இறைமைக்குள் ஒடுக்கப்படுவதற்கான படைபலத்துணையையும் அனைத்துலக ஆதரவையும் சட்டத்தன்மையுள்ளதாகவும் அனைத்துலக நாடுகளோ அமைப்புக்களோ தலையிட முடியாதவாறு சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கங்கள் ‘தலையிடாக் கொள்கையை’ முன்னிறுத்தி தாங்களே ஈழத்தமிழர்களுக்குமான அரசு என்ற அரசியல் நெருக்கடியை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தவும் மூலகாரணமாகியது.
சிங்களவர்கள் தமக்கு பிரித்தானிய காலனித்துவம் வழங்கிய ஈழத்தமிழர்கள் மேலான இறைமை மேலாண்மையை வைத்தே 22.05. 1972 இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யலாம் என்ற சோல்பரி அரசியலமைப்புப் பாதுகாப்பையும் அதனை நடைமுறைப்படுத்தும்படி பிரித்தானிய பிரிவுக்கவுன்சில் கோடீஸ்வரன் வழக்கில் வழங்கிய தீர்ப்பையும் வன்முறைப்படுத்தி ஈழத்தமிழர்களை அரசற்ற தேசஇனமாக 22.05. 1972 இல் மாற்றி ஈழத்தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலோன் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் நிராகரித்த சிங்கள பௌத்த சோசலிச சிறிலங்காக் குடியரசு என்ற சிலோன் சிங்கள நாடு சிங்களவர்களின் நாடு பௌத்த நாடு என்ற புதிய அரசமுறைமையை உருவாக்கி ஈழத்தமிழின அழிப்பு அரசியல் கொள்கைகள் கோட்பாடுகளை மக்கள் மேலான யுத்தத்தால் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இந்த தங்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியற்ற ஆக்கிரமிப்புச் சிறிலங்காப் பாராளுமன்ற ஆட்சியை ஏற்க மறுத்த ஈழத்தமிழர்களின் அக்காலத் தலைமை 1975இல் காங்கேசன்துறைத் தேர்தலை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அடையாளக் குடியொப்பமாக அறிவித்து அதில் பெற்ற அறுதிப்பெரும்பான்மை வாக்கு வெற்றியால் சிறிலங்காப் பாராளமன்றத்தில் தந்தை செல்வநாயகம் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் பிரகடனத்தை உலகுக்கு சனநாயகமுறையில் அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்பப் பிரகடனப்படுத்தினார். 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்குத் தனியரசே ஒரேவழியென உலகுக்கு எடுத்துரைத்து இதனை சிறிலங்கா சனநாயக வழிகளில் ஏற்க மறுத்தால் வேறெந்த வழியிலும் அடைவோம் என உலகுக்கு அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப உறுதிப்படுத்தினர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் குடியொப்பமாக இடம்பெற்ற 1977 தேர்தலில் மக்கள் ஆணையாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மக்களாணையை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நடைமுறையரசை 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் தங்களின் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சீருடை தாங்கிய முப்படைகளும் சட்டவாக்க சட்ட அமுலாக்க நிர்வாகக் கட்டமைப்புக்களும் கொண்ட அரசாக அதற்கான அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்று சனநாயக அரசாகப் பரிணமிக்கச் செய்யும் ஆட்சியை அமைக்கச் செயற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சிறிலங்காவும் அதன் ஆதரவு பிராந்திய மேலாண்மைகளும் அனைத்துலக வல்லாண்மைகளும் இணைந்து 17.05. 2009 இல் ஒரு தேசமாகவே ஈழத்தமிழர்கள் 176000 பேரை இனப்படுகொலை செய்து ஈழத்தமிழர்களின் அனைத்து உட்கட்டுமானங்களையும் இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு நோக்கில் இன்று வரை இனஅழிப்புச் செய்து ஈழத்தமிழர்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற வைத்து அவர்களின் நிலத்தையும் கடலையும் இயற்கை வளங்களையும் சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் சிங்களப் படைகளின் குடியேற்றங்கள் மூலமும் சிங்கள பௌத்த மயப்படுத்திக் கொண்டிருப்பதே இன்றைய ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினையாகவுள்ளது.
பலஸ்தீனிய மக்களுக்கு இருதேசத் தீர்வு மேற்குலகால் முன்மொழியப்பட இந்தியாவோ தனி யரசே ஏற்புடையதென அதனை அமைத்துக் கொடுக்க ஜி4 அமைப்பில் செயற்படவும் செய்கிறது. இந்நிலையில் ஈழத்தமிழர்களின் தனியரசே அவர்களுக்குத் தேவையென்பதை உலகுக்கு இறைமையை முன்வைத்து ஈழத்தமிழர்கள் அரசியலைத் தெளிவாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது என்பதே ஈழத்தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பிரித்தானிய மன்னரை நோக்கி தன்னாட்சிக்கான குரல் எழுப்பி சிலோனுக்கு பிரித்தானிய காலனித்துவ முடிக்குரிய அரசு சுதந்திரம் வழங்கி ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கமடையச் செய்த 76வது ஆண்டாகிய 04.02. 2024இல் பேரணி நடாத்தவுள்ளனர். உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரித்தானிய தூதரங்களை நோக்கி உலகின் குடிகளாகவுள்ள ஈழத்தமிழர்கள் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளனர். இந்நேரத்தில் இலங்கையிலும் புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சிறிலங்காப் பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்களை அழைத்துப் பேசத் தொடங்கியுள்ளார். ஆயினும் மண்ணுக்குரிய மக்கள் மக்களுடைய பாதுகாப்பு என்பது குறித்து இறைமையை முன்னிறுத்தி அங்கு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லையென்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலைமாறி தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழர்கள் இறைமையை முன்வைத்து அரசியலை முன்னெடுக்க வேண்டிய நேரமிது என்பதே இலக்கின் வலியுறுத்தலாக உள்ளது.

Tamil News