இடமாற்றத்தை ஏற்க முடியாது – கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினா் கண்டனம்

IMG 20240211 WA0003 இடமாற்றத்தை ஏற்க முடியாது - கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினா் கண்டனம்
கிண்ணியா கல்வி வலயப் பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மாத்திரம் வீணாக திட்டமிட்டு பழிவாங்கி இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது இதனை கண்டிக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

கிண்ணியா விழிப்புணர்வு தகவல் மையத்தில் இன்று (11) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 17 கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து வலயங்கள் என காணப்படுகின்ற போதிலும் 2021ம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்டவர்களில் இருந்து மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்கு இடமாற்றம் செய்திருப்பது பாரிய திட்டமிட்டு செய்யப்பட்ட அப்பட்டமான இடமாற்றத்தை கண்டிக்கிறோம்.

கிண்ணியா வலயத்தில் 228 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யவே நியமிக்கப்பட்டார்கள் இவர்கள் நேரசூசி வழங்கப்பட்டு பாட விதானங்களில் நூறு வீத தேர்ச்சிகளை பெறுவதற்கு அளப்பெரிய ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளார்கள் கிண்ணியாவின் கல்வி சமூகத்தின் வெற்றிக்கு இவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றன. இருந்த போதிலும் தற்போது 16பெண் உத்தியோகத்தர்களும் 11ஆண் உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

நாடு பொருளாதார கஷ்டங்களை அனுபவிப்பது போன்று இவர்களின் பொருளாதான சுமைகளும் அதிகரித்துள்ளன. தங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தாயாக தந்தையாக இருந்து இங்கு இருந்தால் தான் திறம்பட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். கிண்ணியா வலயத்தில் 360 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருகின்றன இங்கு சுமார் 27500 மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இருந்த போதிலும் கல்வி திணைக்களத்தின் புரிதலற்ற அப்பட்டமான தகவல்கள் இவ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றத்துக்கு வழி சமைத்துள்ளது ஏனைய வலயங்களில் தகவல்கள் கோரப்பட்ட போதிலும் அங்கு நில் அறிக்கை வழங்கப்பட்டிருப்பது போன்று கிண்ணியா வலயத்தில் மாத்திரம் அநீதி ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

எனவே கிழக்கு மாகாண ஆளுனர் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்வதன் மூலம் கிண்ணியாவில் அவர்களை மீளவும் அதே பாடசாலையில் இணைப்புச் செய்வதனாலும் சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்க முடியும் எனவும் நீதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுவதற்கான வழி வகைகளை அமைத்துக் கொடுக்கவும் செயற்படுகிறேன் இல்லாத பட்சத்தில் போராட்டத்தின் மூலமான வெற்றியை பெறுவதற்காக முயற்சிப்பேன் எனவும் மேலும் தெரிவித்தார்.