கிழக்குமாகாண ஆளுநரின் இறைமைப் பயன்படுத்தலும் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சரின் மதவெறியும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 249

கிழக்குமாகாண ஆளுநரின் இறைமைப் பயன்படுத்தலும் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சரின் மதவெறியும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 249

வெல்கம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் திருகோணமலையில் தமிழரின் அறுபது பேச்சர்சு நிலத்தை ஆறுவருடங்களுக்கு முன்னர் தமது பொரலுகந்த ரஜமகாரவிகாரைக்கென அபகரித்தார். கடந்த வாரத்தில் அதனை ஆட்சிப்படுத்த முனைந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டமான் அவருக்குக் காணிக்குள் நுழைவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு திருகோணமலையின் நகரம் மற்றும் பட்டினங்கள் பிரதேசச் செயலாளரை நெறிப்படுத்தினார். இதன்வழி மக்களின் இறைமையைக் காக்கும் தன்னுடைய கடமையைச் சரிவரச்செய்தார்.
ஆனால் சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தின தேரர் கிழக்குமாகாண ஆளுநரின் சட்டரீதியான செயற்பாட்டுக்கு ஏதிராக கேள்வி எழுப்பினார். அக்கேள்விக்கு பதிலளித்துள்ள புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா “பொரலுகந்த விகார 13-15-024 இலக்கத்தில் புத்தசாசன அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரருக்கு அக்காணி அரசாங்கத்தால் சட்ட பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் கிழக்கு மாகாண ஆளுநரின் தடையுத்தரவு முற்றிலும் செல்லாதெனவும், தேரர் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ அங்கு சென்று ஆட்சிப்படுத்தலாமென்றும் தீர்வு” கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் பட்டினங்கள் பிரதேச செயலகப் பிரிவுப்புகுதிகள் தொல்பொருள் மரபுரிமைக்கு சொந்தமானது எனப் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தித் திருகோணமலை முழுவதையுமே பௌத்த சிங்கள மயப்படுத்தும் தங்கள் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமானது என உலகுக்கு அறிவித்து மதஇனமொழி கலவரத்தை பௌத்தமதவெறி மூலம் தோற்றுவிக்க முயற்சிக்கும் பௌத்த தேரர்களை ஊக்குவித்துள்ளார். இதனால் அரசபயங்கரவாதத்துடன் கூடிய இனக்கலவரம் ஒன்று விரைவில் ஈழத்தமிழரை மேலும் இனவழிப்புச் செய்யத் திட்டமிடப்பட்டுவருகிறது என்பது மேலும் உறுதியாகிறது. .
இந்நிலையில் மாகாணசபைகளுக்கு நிர்வாக அதிகாரங்களைப் பகிரும் 13ம் திருத்தத்தினை இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு தொடக்கப்புள்ளி என்று உலகநாடுகள் உலக அமைப்புக்களை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தீர்வுகாணவிடாது தடுக்கும் இந்தியா, இப்பொழுது அதன் ஆதரவுடன் கிழக்குமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியாயமான முடிவினை மதவெறித்தனமான முறையில் சிறிலங்காவின் புத்தசாசன அமைச்சு நிராகரித்துள்ளமைக்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்கப் போகிறது? நடைமுறை அரசியல் எதார்த்தம் இப்படியிருக்கையில் 13ம் திருத்தத்தின் வழி கட்டமைக்கப்படக் கூடிய மாகாணசபையின் ஆளுநர் கூட அரசின் கைப்பொம்மையாக ஈழத்தமிழ் மக்களைப் பாதுகாக்கும் செயற்திறன் அற்றவராகவே மதவெறி இனவெறி மொழிவெறிச் சிங்கள ஆட்சியாளர்களால் செய்யப்படுவார் என்பதற்கு கிழக்கு ஆளுநரின் உத்தரவை முற்றிலும் செல்லுபடியற்றதாக்கிய அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவின் பாராளுமன்ற அறிவிப்பு தலைசிறந்த சமகால உதாரணமாகவுள்ளது. இந்நிலையில் இந்தியா நடைமுறையில் இறைமைப்பகிர்வை சிறிலங்காவுடன் பலநிலைகளில் மேற்கொண்டுள்ள அயல்நாடாகத் தன்னைக் கட்டமைத்துள்ள போதிலும் அதன் தமிழர்கள் தொடர்பான எந்த நெறிப்படுத்தலையும் சிறிலங்கா ஏற்றுச் செயற்படுத்தாது என்பது இந்திய இலங்கை உடன்படிக்கை முதல் இன்று வரை 36 ஆண்டுகால அரசியல் அனுபவமாக உள்ளது.
இப்பொழுது சீன ஆய்வுக் கப்பல்களின் வரைவை எல்லைப்படுத்துவதற்கு கூட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறிலங்காவிடம் நேரடியாக வரவேண்டியிருப்பதைச் செப்டெம்பர் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ள அவரது இலங்கை வருகை உறுதி செய்கிறது. ஈழத்தமிழர்களுக்கு அவர்களது கடல்மேலான பாதுகாப்பை மேற்கொள்ளும் வலிமை இருந்த பொழுது இந்தியாவுக்கு இந்த நிலை இருக்கவில்லை என்பது வரலாறு. மீளவும் இறைமையுடன் கூடிய ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் வாழ இந்தியா வழிசெய்தாலே இந்தியாவின் தென்னிந்தியக்கரை இந்துமாக்கடல் பாதுகாப்பான அமைதியுடன் திகழும். இதனை ஈழத்தமிழர்களுடன் இணைந்து மாண்பமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைக்க வேண்டுமென்பதே இலக்கின் கருத்தாக உள்ளது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழினவுணர்வுடன் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகி இன்றைய காலத்துக்கேற்றவகையில் ஈழத்தமிழர்களுடைய பாதுகாப்பான அமைதிக்கான அனைத்துலக அணுகுமுறைகளை முன்மொழிந்து அவற்றைச் செயற்படுத்த உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் தமிழக முதலமைச்சர் ஊக்குவிக்க வேண்டும் என இலக்கு உரிமையுடன் கேட்கிறது. இவ்வாறு ஏன் தமிழக முதலமைச்சரிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றால், ஈழத்து அரசியல் தலைவர்கள் இன்று சோரம்போன நிலையில் உள்ளனர்.
அவர்கள் தன்மான இனமான உணர்வற்றவர்களாக நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற தமிழ் முதுமொழிக்கு உதாரணங்களாக உலவிக் கொண்டிருக்கின்றனர். கடந்த வாரத்தில் புத்தசாசன அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்கா திருகோணமலை பொரலுகந்த நில ஆக்கிரமிப்பு விடயத்தில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் யாருமே எதிர்வினை செய்யாது இருக்கையில் அரசின் அலுவலரான ஆளுநர் செந்தில் தொண்டமான்தான் பிரச்சினையை உருவாக்குகிறார் எனச் சிறிலங்காப் பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நக்கிப் பிழைக்கும் அரசியலை நாவாரப் புகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல ஈழத்தமிழர்களின் இறைமையாளர்களாக உலகுக்கு வெளிப்பட்டு நிற்கும் இந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் செந்தில் தொண்டமான் போன்ற மக்களின் இறைமைக்குப் பாதுகாப்பு வழங்க முற்படும் அரச அலுவலகர்களுக்கும் அவர்களது செயல்களைச் சிறிலங்கா நிராகரிக்க நியாயத்தளங்களை எற்படுத்திக் கொடுக்கின்றன. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஈழத்தமிழின அழிப்புக்காக வாய்திறந்து அண்ணா கப்பலும் பெரியார் கப்பலும் இணைந்து வருமென்று எச்சரித்தது போல பௌத்த மரபுரிமை பாதுகாப்பு என்னும் பெயரில் வேகம் பெற்றுள்ள சிங்கள பௌத்த பேரினவாத நில ஆக்கிரமிப்புக்குத் தமிழகக் கட்சிகள் எல்லாவற்றையும் இணைத்து மாண்பமை தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பாதுகாப்பு அணியாக எழ வேண்டும் என்பதே இலக்கின் இன்றைய அவசர அழைப்பாக உள்ளது.
மேலும் சிறிலங்கா ஜனாதிபதியின் நெறிப்படுத்தலான தமிழ்பௌத்தம் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்த காலத்து தொல்பொருள் சின்னங்களாக அவை கருதப்பட வேண்டுமென்பதையோ அல்லது விகாரையின் பயன்பாட்டுக்கு மேலதிகமான நிலமேன் விகாரைகளுக்கென கையகப்படுத்தப்பட வேண்டும் என்ற அவரின் கேள்வியையோ கூட பௌத்த மடாதிபதிகள் கவனத்தில் எடுக்காது வெளிப்படையாக நில அபகரிப்பில் வேகமாக முன்னேறுவது இனக்கலவரமொன்றை உருவாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சியாகவும் உள்ளது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இறைமையை அதனுடைய சிங்கள பௌத்தர்களே ஏற்காத நிலை உறுதியாவதால் சிறிலங்கா அரசால் இறைமையும் தன்னாட்சி உரிமையும் உள்ள ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வை தரஇயலாதென்பது உறுதியாகிறது. இந்நிலையில் உலகத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தங்கள் ஈழத்தமிழினம் விரைவில் இனஅழிப்புக்கு உள்ளாக இருக்கும் அபாயத்தில் இருந்து அவர்களைக் காக்க ஈழத்தமிழர்களுடைய இறைமையுடன் கூடிய தன்னாட்சிஉரிமையை உலகைக் காலம் தாழ்த்தாது ஏற்க வைக்க உழைப்பதே ஈழத்தில் பாதுகாப்பான அமைதிக்கான ஒரே வழியென்பதை இலக்கு வலியுறுத்திக் கூறிட விரும்புகிறது.

Tamil News