ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கம் தென்னிந்தியக் கரையில் இந்திய இறைமை ஒடுக்கத்தை ஏற்படுத்தும் | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 248
இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் கடந்த 10ம் திகதி நங்கூரமிட்ட 138 அதிகாரிகளைக் கொண்ட 129 மீற்றர் நீளமான ‘ஹாய் யாங் 24 ஹாஓ’ என்ற சீன ஆய்வுக்ககப்பல் வெற்றிகரமாகத் தனது களப்பணிகளை நிறைவு செய்து கொண்டு 12ம் திகதி புறப்பட்டுச் செல்லும் பொழுதே, சீனாவின் மற்றொரு பெரிய ஆய்வுக்கப்பலான 3999 தொன் எடைகொண்ட ‘ஷி யான் 6’ இலங்கைக்குக் கள ஆய்வுப்பணிக்கு அக்டோபர் 6ம் திகதி வந்து நங்கூரமிடுமென்கிற செய்தி இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சீனாவின் ‘யுவான் வாங் ‘ ஆய்வுக்கப்பல் 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் திகதி அம்பாந்தோட்டைக்கு வந்து நங்கூரமிட்டது முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கப்பல்களின் இலங்கை வருகை, தென்னிந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ அதிமுக்கிய மையங்களை சீனா புலனாய்வுக்கு உட்படுத்துவதற்கான தொடர் செயற்திட்டமாக அமைகிறது என்ற சந்தேகமும் அச்சமும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் வலுவாக எழுந்துள்ளது.
இதனை உறுதி செய்வது போல 2025 முதல் 2028க்கு இடையிவ் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனா தனது கடற்படைத் தளமாக மாற்றும் திட்டமொன்றைக் கொண்டுள்ளதென அமெரிக்காவின் வேர்ஜினியா மாநில ஆய்வு நிறுவனமான எய்ட்டேட்டா விடுத்துள்ள தகவல் அமைகிறது.
மேலும் சீன ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதியளிக்க வேண்டாமென 2022 முதல் இந்தியா சிறிலங்காவிடம் ராஜதந்திர முறையில் முயற்சித்தும் இதுவரை சீனாவுடான சிறிலங்காவின் உறவு மேலும் மேலும் வளர்கின்றதே தவிர இந்தியாவுக்குச் சார்பான ஒரு சிறு மாற்றத்தைக் கூட இந்தியாவால் பெறமுடியவில்லை.
இவற்றை எல்லாம், பொருத்திப் பார்க்கின்ற பொழுது இந்தியா ஈழத்தமிழர்களின் இந்துமாக்கடல் மேலான கடற்புலிகளின் பாதுகாப்பினை சிறிலங்கா இனஅழிப்பு போரால் ஒடுக்குவதற்கு அதற்குப் பக்கத் துணையாக நின்றதன் விளைவாக தென்னிந்திய இந்துமாக்கடல் மேலான தனது இறைமையை இழக்கத் தொடங்கியுள்ளதை உலகுக்குத் தெளிவுபடுத்துகிறது.
அத்துடன் சிறிலங்கா நடைமுறை அரசியலில் இந்தியாவை அலட்சியம் செய்கின்ற ஒவ்வொரு முறையும் சிறிலங்கா சீன உறவு மேலும் மேலும் உறுதியாவதும் வரலாறாக உள்ளது. அதற்கமைய சீனாவின் தெற்குப்பகுதியில் நடைபெற்ற சீன- தெற்காசிய எக்ஸ்போ வில் கலந்து கொள்ளச் சென்ற சிறிலங்காவின் பிரதமர் தினேஸ் குணவர்த்தனாவுக்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி (Wang Yi), சிறிலங்கா வறுமையின் பொறியில் இருந்தும் வளர்ச்சிகளின்மை என்னும் பொறியில் இருந்தும் வெளிவருவதற்கும் சிறிலங்காவின் தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்களுக்கும் விவசாய உற்பத்திகளின் நவீனமயப்படுத்தலுக்கும், இவற்றில் சிறிலங்கா சுதந்திரமான முறையில் வளர்ச்சிகள் பெறுவதற்குச் சீனா உதவும் என உறுதிமொழியளித்துள்ளார். அத்துடன் சீன தெற்காசிய எக்ஸ்போவில் சிறிலங்கா முக்கிய பங்காளராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த உதவிகள் எல்லாம் சிறிலங்கா தனது இறைமையுள்ள சுதந்திரத்தையும், தேசிய அடையாளப்படுத்தலையும் உறுதிப்படுத்தும் வகையில் ஆளுவதில் சீனாவுக்கு உள்ள அனுபவத்தை பகிர்ந்து பலதரப்பட்ட களங்களில் ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதில் ஈழத்தமிழர்களின் மேலான சிறிலங்காவின் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு எல்லாமே சிறிலங்கா தனது இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கான சட்டரீதியான செயற்பாடாகச் சீனா மட்டுல்ல இந்தியா மட்டுமல்ல உலகநாடுகளாலும் நியாயப்படுத்தப்படுவதுதான் வேதனையான விடயம் மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்கா அரசாங்க இனஅழிப்பு செயற்திட்டங்களுக்கான பலமும் வளமுமாகவும் திகழ்கின்றது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவை தங்களது வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களது இறைமையுள்ள சுதந்திர வாழ்வை வாழ்வதற்குரிய வகையில் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுகளை சிறிலங்காவின் இறைமைக்குள் ஈழத்தமிழர் இறைமையை அடக்கி ஒடுக்காது ஈழத்தமிழர்க்கு பாதுகாப்பான அமைதியை ஏற்படுத்தத் தக்கவகையில் முன்மொழியுமாறு கோர வேண்டியவர்களாக உள்னர்.
இறைமை என்பது மக்களுக்கு மண்ணுக்கு மேலுள்ள பிரிக்கப்பட இயலாத பிறப்புரிமை. மக்களுடன் நல்லுறவுகளை உறுதிப்படுத்துவதன் மூலமே ஒரு தேச மக்கள் இன்னொரு தேசமக்களுடன் தங்கள் இறைமையைப் பகிர்ந்து கூட்டொருங்கு இறைமையுடன் இருதேச மக்களுக்கான இறைமையுடன் கூடிய தன்னாட்சி உரிமைகளையும் அனைத்துலகத் தொடர்புகளையும் வளர்த்துக் கொள்ள முடியும். எனவே இந்தியா ஈழத்தமிழ் மக்களுடன் நல்லுறவை அவர்களது இறைமையுடன் கூடிய சுதந்திர வாழ்வுக்கு உதவுதன் வழியாகவே தென்னந்தியாவுடன் கடல் வழிப் பகிர்வு எல்லையை மட்டுமல்ல பிரிக்கப்பட இயலாத தமிழின மக்கள் என்ற இனத்துவ ஒருமைப்பாட்டையும் மொழித்துவப் பண்பாட்டு வாழ்வியலையம் கொண்டிருக்கும் இந்துமாக்கடல் பகுதிகளில் இந்தியா தனது இறைமையை நட்புறவாடலால் ஈழ – இந்திய கூட்டொருங்கு இறைமையாக வலுப்படுத்த முடியும். இதுவே இரு தேச மக்களதும் இறைமை இழப்பைத் தடுக்க ஒரேவழி. இதனை விடுத்து, ஈழத்தமிழர்களிடை சிந்தனைக் குழப்பங்களையோ செயலாக்கத் திறன் குறைப்புக்களையே ஏற்படுத்தும் சிந்தனைகள் உரையாடல்கள் செயற்பாடுகளைத் தாயகத்திலும் புலத்திலும் இந்தியா தானும் தவிர்த்து மற்றயை அனைத்துலக நாடுகளையும் தவிர்க்கச் செய்து ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுதந்திர வாழ்வுக்கு வலுவூட்டும் பொழுதே இயல்பாகவே இந்திய ஈழமக்கள் இறைமை கூட்டொருங்குச் செயற்பாடுகள் இந்துமாக்கடல் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்பது இலக்கின் எண்ணம். இந்த உறுதிப்படுத்தல் ஈழத்தமிழ் மக்களின் இறைமையும் இந்திய இறைமையும் இணைக்கும் ஆற்றலாக மாறி இந்து மாக்கடலின் தென்னிந்தியக் கரைக்கான கூட்டொருங்குப் பாதுகாப்பாக நிலைபெறும்.