இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 201

இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது
இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர்

இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மழையிலும் குளிரிலும் வாடையிலும் கோடையிலும் தெருவில் இறங்கி எல்லா சனநாயக வழிகளிலும் போராடி 158 போராட்டத்தில் ஈடுபட்டோர் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் நினைவு ஏக்கத்துடனேயே உயிரிழந்த நிலையில் கூட அதனை ஏறெடுத்துப் பார்க்காத சிறிலங்கா அரசாங்கத்தின் மேல் எந்தவிதமான தாக்கமான தீர்மானத்தை எடுக்காமலே 13 வது ஆண்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வின் 50/1 ம் இலக்க நகல் வரைபும் வெளிவந்துள்ளது. திருத்தங்கள் இந்த நகல் வரைபையும் மேலும் மென்மைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பே தமிழர்களின் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அப்படியாயின் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முன்னைய 46/1 தீர்மானத்தை விட எந்தவகையில் சிறப்புற்றுள்ளது என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் 46/1 தீர்மானம் சிறிலங்காவின் மனித உரிமைகளை வன்முறைப்படுத்தல், யுத்தக்குற்றச் செயல், மனிதாயத்திற்கு எதிராக குற்றங்களை கண்காணிப்பதற்கு சாட்சியங்களைப் பதிவு செய்தலுக்கான பொறிமுறைகளை நிறுவியது. ஆயினும் இதனை இறைமையுள்ள நாடு ஒன்றின் மேலான தலையீடு எனச் சிறிலங்கா கூறி ஒத்துழைக்க மறுத்தது. இதனை மேற்கொள்ளும் விதத்தில் பொருளாதாரக் குற்றச் செயல்களைச் செய்தவர்களையும் விசாரித்தல், கொள்ளையிடப்பட்ட மக்களின் சொத்துக்களை மீளவும் பெறலுக்கான பொறிமுறைகளை உருவாக்கல் என்னும் இருபுதிய பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50/1 தீர்மானம் உள்ளடக்குகிறது. இது அனைத்துலக சட்டங்களின் நீதி அதிகார வரம்பெல்லைகளை விரிவுபடுத்திச் சிறிலங்காவை அதனுள் கொண்டு வருவதற்கான முயற்சியாக அமைகிறது. இது சிறிலங்கா எதிர்நோக்கும் நிதி நெருக்கடியின் காரணிகள், மக்கள் பிரச்சினைகள் என்பன குறித்த அக்கறையின் பின்னணியில் முன்மொழியப்பட்டுள்ளது. இதனையும் சிறிலங்கா இறைமைக்குள் தலையீடு என்ற அடிப்படையில் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் கடந்த 13 ஆண்டுகளாகச் சிறிலங்கா அனைத்துலக அமைப்புக்களின் விசாரணை எதுவும் தன்னைப் பாதிக்காதவாறு இறைமையுள்ள நாடு தான் என்பதையே பயன்படுத்தி வெற்றிகரமாக தடுத்து வெற்றியடைந்து வருகிறது.
ஆனால் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் வாழ்ந்து வரும் தேச இனமான ஈழமக்கள் தங்களின் தேசிய பிரச்சினை தங்களின் இறைமையைக் கடந்த 75 ஆண்டுகளாக சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சிமுறை மறுத்து வருவதே என்பதையும், தங்களின் இறைமையை உறுதிப்படுத்தும் போராட்டமே ஈழமக்களின் அரசியல் போராட்டம் என்பதையும் வெளிப்படுத்தத் தவறுகின்றனர். சிறுபான்மையினமொன்றின் மனித உரிமைக்கான பாதுகாப்புக் கோரிக்கையினையே ஈழத்து அரசியல் வாதிகள் தாயகத்திலும் புலத்திலும் பேசி வருகின்றனர். இதுவே கடந்த 13 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் இனஅழிப்புக்கான நீதியைப் பெற இயலாது தவிப்பதன் காரணமாக அமைகிறது.
வரலாற்றில் ஈழதேச இனம் 1505இல் போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சி ஏற்பட்ட பொழுது தங்களின் தனியான இறைமையுள்ள யாழ்ப்பாண அரசிலேயே வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்த யாழ்ப்பாண அரசின் இறைமையையே 1621இல் 116 வருடப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேய காலனித்துவம் கைப்பற்றியது. பின்னர் இவ்விறைமை 1656 இல் டச்சுக்காலனித்துவத்தைச் சென்றடைந்து 1796இல் இலண்டனின் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி மதராசு எனப்படும் சென்னையில் இருந்து இலங்கைத் தீவில் உள்ள அனைவரையும் ஒரு அரசியல் அலகாக ஒரே நிதியுடன் 1802 வரை ஆறு வருடங்கள் ஆண்டனர். 1802இல் பிரித்தானிய முடிக்குரிய நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது முதல் 1948 வரை பிரித்தானிய அரசிடம் ஈழத்தமிழரின் இறைமைதொடர்ந்தது.
24.09. 1947இல் தான் பிரித்தானியா இலங்கைத் தீவுக்குச் சுதந்திரம் வழங்கவென நியமித்த சோல்பரி ஆணைக்குழு உருவாக்கிய சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழான முதலாவது இலங்கைப் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 14இல் பாக்கிஸ்தானுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட நாளில் தொடங்கி செப்டெம்பர் 20வரை நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 42, சுயேட்சைகள் 21, லங்கா சமசமாஜக்கட்சி 10, பொல்சிவிக் லெனின் கட்சி 05, கம்யூனிஸ்ட் கட்சி 03 தமிழ்க்காங்கிரஸ் 07, இந்தியன் காங்கிரஸ் 06, லேபர் கட்சி 01 என 95 பிரதிநிதிகள் இலங்கையின் முதல் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி இலங்கைளின் பன்மொழி பல்கலாச்சாரத் தன்மையை உலகுக்கு வெளிப்படுத்தினர். செப்டெம்பர் 24இல் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் டி.எஸ்சேனநாயக்கா பன்மொழி பல்கலாச்சார இலங்கை அரசாங்கத்தின் முதல் பிரதமரானார். இந்த இலங்கை அரசாங்கத்திடமே ஈழத்தமிழரின் இறைமையையும் சிங்களவர்களின் இறைமையையும் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் சோல்பரி அரசியலமைப்பால் இணைத்து, இலங்கைக்குச் சுதந்திரத்தை 04.02. 1948 இல் வழங்கியது. இந்த வரலாற்றின் அடிப்படையில் இந்த செப்டெம்பர் மாதத்துடன் ஈழத்தமிழரின் பாராளுமன்ற சனநாயக ஆட்சி தொடங்கி 75 ஆண்டுகளாகின்றன. இந்த 75 ஆண்டுகளிலும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அவர்களின் இறைமையைச் சிங்கள பெரும்பான்மை பாராளுமன்ற ஒற்றையாட்சி முறைமை மறுத்து வருவதேயாகும்.
எனவே இந்த ஈழத்தமிழரின் இறைமையினை அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் அவர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அங்கீகரிக்கக் கோருவது ஒன்று மட்டுமே ஈழத்தமிழர் மேலான சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலை ஒழுங்குபடுத்தும் என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது. இந்த உண்மையில் உறுதியுடன் நின்று இதனை உலக மக்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஈழத்தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்கள், முஸ்லீம்கள், மலையகத்தவர்களையும் அவர்கள் எதிர்நோக்கி நிற்கும் மனித உரிமைப் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க முடியும். என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது

Tamil News