இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

146 Views

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இந்திய சிறிலங்கா பௌத்த உறவுப் புதுப்பிப்பு; ஈழத் தமிழர்களின் அனைத்துலக ஆதரவுக்குத் தடுப்புச் சுவர்

இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள பௌத்த பிரமுகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் புடைசூழ வந்திறங்கிய நிகழ்ச்சியுடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் குஷிநகர் அனைத்துலக விமானநிலையத் திறப்பு விழா தொடங்கப் பெற்றுள்ளது.

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இந்நகருக்கான விமானச்சேவையின் தொடக்கம் என்பது 2500 ஆண்டுகால இலங்கை இந்தியத் தொடர்பின் மீள்புதுப்பித்தலின் ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழி வழியாகத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பௌத்தமே சிறிலங்காவில் 2500 ஆண்டுக்கு முன்பிருந்த பௌத்தம் என்பது மறக்கப்பட்ட நிலையில், இந்த இலங்கை இந்தியத் தொடர்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய விடயம்.

சிறிலங்காவின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராசபக்சவும் பகவத்கீதையின் வடமொழியில் அமைந்த சுலோகங்களைத் தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்த தொகுதி ஒன்றை அன்பளிப்புச் செய்து, இலங்கை இந்திய உறவுப்புதுப்பிப்பை ஏற்று மகிழ்ந்துள்ளார். இந்த பகவத்கீதை மொழிபெயர்ப்பு, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராசபக்சவின் கட்டளையின் பேரில் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும்  இந்து சமய கலாச்சாரத்  திணைக்களத்தால்  நூலுருவாக்கம் செய்யப்பட்டது என்ற விளக்கத்துடன் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிவபூமியெனத் திருமூலரால் சைவமண்ணாகச் சுட்டப்பெற்ற இலங்கையில், இந்து சமய கலாச்சாரத் திணைக்களம் என்பது, சிங்களத் தலைமைகளின் அரசியல் அதிகாரத்தின் முடிவெடுக்கும் உரிமையின் கீழ் செயற்படும், தன்னளவில் தீர்மானம் எடுக்கும் உரிமையற்ற சிங்கள அரசின் நிர்வாகக் கட்டமைப்பு.

இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களின் நாடென்ற உண்மையை மறுத்து, சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி ஆட்சியை முன்னெடுத்துள்ள ராசபக்ச சகோதரர்கள், தங்கள் அரசியல் இலாபத்தை முன்னிறுத்தி, பகவத்கீதையினை மும்மொழிகளிலும் பதிப்பித்து, இந்தியா முன் தனது மதச்சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் செயலாக இந்த நாடகத்தை குஷிநகர் பௌத்த மேடையில் அரங்கேற்றியுள்ளனர்.

இந்த பௌத்தர்களின் ஆன்மிக சுற்றுலா மேம்படுத்தல் என்ற மறைமொழிக்குள் நடைபெற்ற சிங்கள பௌத்த –  இந்துத்துவ புது உறவாடல் நோக்கு என்ன?

ஈழத்தமிழர்களுக்கான சமுகநீதிக்கு உலகம் எழுப்பக் கூடிய எந்த விதமான ஆதரவுக் குரலையும் அடக்குவதற்கான சிறிலங்காவின் இந்தியாவுடனான உறவு குறித்த புதுமுயற்சியின் தொடக்கங்களில் இதுவும் ஒன்று என்றே விமர்சனம் பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனிதஉரிமைகள் வன்முறைகள் போன்ற அனைத்துலகச் சட்டங்களை மீறிய குற்றச் செயல்களுக்காகச் சிறிலங்காவை யுத்தக்குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு போவதற்கான சாட்சிகள், சான்றாதாரங்களைத் திரட்டி, ஆவணப்படுத்தும் அலுவலகத்தைச் செயலிழக்கச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறல் என்ற சிறிலங்காவின் நோக்கே, இப்புதிய முயற்சிக்கான காரணியாகவுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

அதேபோல் சீனா சிறிலங்காவில் அது வழங்கியுள்ள கடன்கள், உதவிகள் அடிப்படையில் சிறிலங்காவைத் தனது பொருளாதார மேலாண்மை மூலமான புதிய காலனித்துவ நாடாக மாற்றுவதைத் தடுத்து நிறுத்தி, தனது தென்னிந்தியப்பகுதிக் கடல் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கில் சிறிலங்காவுடன் உறவுகளை வளர்த்தல் என்பது இந்தக் குஷிநகர் சிங்கள பௌத்த இந்துத்துவ உறவுப் புதுப்பிப்பின் இந்திய நோக்கு.

இந்த இலங்கை இந்திய உறவுப் புதுப்பித்தல் என்பது எப்பொழுது தமிழர்களுக்கான அனைத்துலக ஆதரவு அதிகமாக உள்ளதோ, அப்பொழுது செயற்படுத்தப்படும் அரசியல் தந்திரோபாயம். 1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதன் மூலம்  அன்று இலங்கைத் தமிழருக்கு 1983 ஜுலைத் தமிழின  அழிப்புக்கு எதிராக நான்கு ஆண்டுகளாக வளர்ந்து வந்த உலக ஆதரவு திசைமாற்றம் செய்யப்பட்டது.

அன்றும் இன்றும் என்றும் சிறிலங்காவுக்கான இந்திய ஆதரவு என்பது, ஈழத்தமிழர்களின் உயிர் வாழ்தல், உடைமைகளை வைத்திருத்தல், தங்களின் பூர்வீகத் தாயகத்தில் ஈழத்தமிழர் தங்களின் தன்னாட்சியை முன்னெடுத்தல் என்கிற அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகவே அமைந்து வருகிறது.

இதற்கு ஒரேயொரு மாற்று வழிதான் உள்ளது. உலக நாடுகளை ஈழத்தமிழர்களுடைய தன்னாட்சி உரிமையை, அவர்களின் நாளாந்த வாழ்வை, உடைமைகளை, வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் ஒரே அரசியல் முறைமையாக ஏற்கும்படி, புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கோர வேண்டும். இதனை ஒன்றுபட்ட குரலில் முன்வைத்தாலே, அது நடைமுறைக்கு வரும் என்பதையும் புலம்பதிந்து வாழும் தமிழர்கள் மனதிருத்தல் அவசியம்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply