உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்து தாக்குவோம்: ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் சேர உக்ரைன் விரும்பியது. மேலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேரவும் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தால் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது,  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கு உக்ரைன் இராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்து வருகின்றன. இந்தப் போர் 100 நாட்களைத் தாண்டி உள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. அந்த ஆயுதங்களில் புதிதாக ஒன்றும் இல்லை. அவை ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்களுக்கு நிகரானவைதான்.

உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், உக்ரைனில் இதுவரை தாக்கப்படாத இடங்களை குறிவைத்துதாக்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதை புதின் தெரிவிக்கவில்லை. உக்ரைனுக்கு ஹிமார்ஸ் மல்டிபிள் லாஞ்ச்ராக்கெட் அமைப்புகளை வழங்கப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் புதின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Tamil News