விசாரணை எதுவுமின்றி 94 நாள்களாக அறையில் என்னை மூடிவைத்துள்ளனர்; ரிஷாத்

182 Views

பாராளுமன்றம் விசாரணை எதுவுமின்றி 94 நாள்களாக அறையில் என்னை மூடிவைத்துள்ளனர்; ரிஷாத்“விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் நான் 94 நாள்களாக மூடிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் 100 நாள்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சரத்துக்கமைய சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியயல்ல இன்று சபையில் தெரிவித்தார்.

இவ்வேளையில், சில விடயங்கள் தொடர்பில் தான் சபையில் உரையாற்ற, சபாநாயகரிடம் ரிஷாத் பதியுதீன் அனுமதி கோரியதைத் தொடர்ந்தும், இரண்டு நிமிடங்கள் உரையாற்ற சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்கினார். ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது, சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இருந்தனர்.

அவர் உரையாற்றும்போது தெரிவித்ததாவது:-

“நான் ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டேன். அதன்பின்னர் 5 நாள்களே விசாரணைகள் நடைபெற்றன. நான் கைது செய்யப்பட்டு இன்றுடன் 122 நாள்கள் ஆகும் நிலையில், அவற்றில் 94 நாள்கள் என்னை அறையில் மூடிவைத்துள்ளனர். 24 மணிநேரமும் அந்த அறை மூடப்பட்டுள்ளது. மலசலகூடத்துக்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கின்றனர். ஆனால், இன்று வரையில் எந்தவித விசாரணைகளும் நடைபெறவில்லை.

என்னை ஏன் கைதுசெய்தீர்கள் என்று பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது, எனது அமைச்சின் மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன் ஒன்றரை நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பாகவே கைதுசெய்ததாகக் கூறினார். இதனைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் முன்வைக்கவில்லை” என்றார்.

இதன்போது, உங்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு நிமிடங்களும் முடிந்துவிட்டன என்று சபாநாயகர் அறிவித்து, அவரது ஒலிவாங்கியும் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்தும் உரையாற்றுவதற்கு ரிஷாத் பதியுதீன் எம்.பி. அனுமதி கோரியபோதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply