‘அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடந்ததே தெரியாது’:இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர் சொல்லும் தகவல் 

அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடந்ததே தெரியாது

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற 12 இலங்கையர்களின் படகுப் பயணத்தின் போது படகின் இயந்திரம் மோசமான சூழல் கொண்ட கடல் பகுதியில் பழுதாகியிருக்கிறது. தஞ்சம் கோரும் முயற்சியில் பயணத்தை அவர்கள் நடுக்கடலில் இரத்த வாந்தி எடுத்திருக்கின்றனர். இப்படகில் நாம் உயிரோடு அவுஸ்திரேலியாவுக்கு சென்று சேருவோமா என்ற அச்சம் அவர்களிடையே பரவியிருக்கிறது.

“அவுஸ்திரேலிய எல்லைப்படையினர் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தாமதமாக வந்திருந்தால், எங்களில் ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும். சிலரின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கான குடித்தண்ணீர் மட்டுமே எங்களிடம் இருந்தது,” என்கிறார் இலங்கை மீனவரான 31 வயதுடைய அந்தோணி பிரதாப்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு அருகே அவுஸ்திரேலிய தேர்தல் நடந்த மே 21 அன்று அவர்களின் படகு இடைமறிக்கப்பட்டது. படகில் பயணித்தவர்களின் கூற்றுப்படி, கிறிஸ்துமஸ் தீவு அருகே அவர்கள் இடைமறிக்கப்படுவதற்கு முன்னதாக 19 நாட்கள் இந்திய பெருங்கடலில் பயணித்திருக்கின்றனர்.

“இந்த நாளில் சென்று சேர முடியும் என்பதை எப்படி (கடலில் பயணிக்கும்) எங்களால் கணிக்க முடியும். நாங்கள் கரை சேர்ந்து எங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ளவே நினைத்தோம். அவுஸ்திரேலியாவின் தேர்தல் நடந்தது என்பது கூட எங்களுக்கு தெரியாது. அவுஸ்திரேலியாவை சென்றடைய எத்தனை நாட்கள் ஆகும் என்றும் எங்களுக்கு தெரியாது,” எனக் கூறியிருக்கிறார் இலங்கையரான அந்தோணி.

கடந்த மே 21ம் தேதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்தும்ஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்ட படகை அவுஸ்திரேலியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கம் திருப்பி அனுப்பியிருந்தது.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் தேர்தல் தினத்தன்று அகதிகள் படகு வருகைக் குறித்து ஊடக செய்தி அறிக்கை வழங்கி தனது சொந்த கொள்கையை அவுஸ்திரேலிய எல்லைப்படை மீறியது ஏன் என்பது குறித்து விசாரிக்கவும் தொழிற்கட்சி அரசாங்கம் உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News