பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க பாகிஸ்தான் அரசு முற்படுவதால் அதற்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த போராட்டங்களின் போது பாகிஸ்தானின் படை அதிகாரிகளின் இல்லங்கள் உட்பட பல இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டதுடன் பெருமளவான உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

அங்கு மேற்கொள்ளப்பட்ட போரட்டங்களை தொடர்ந்து இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டிருந்தார். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பல ஆயிரம் பேர் அங்கு கைது செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது அவர்களை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு முற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு எதிராக பல மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன், இது அனைத்துலக விதிகளுக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளன.

1947 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் அரசியலில் பாகிஸ்தான் இராணுவம் அதிக தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தன் மீதான நடைவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் இரணுவத்தளபதி ஜெனரல் சஜீட் அசீம் முனீரோ காரணம் என இம்ரான்கான் குற்றம்சாட்டி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply