உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்று எவ்வாறு கூறுவது-நீதி அமைச்சர் அலி சப்ரி

209 Views

பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை

உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?” என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முகாம்களில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூற வேண்டியது உங்களின் கடமையல்லா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பாதுகாப்பு படைகளிலேயே நான்காயிரத்திற்கு அதிகமான பேர் காணாமல் போயுள்ளனர் என்றால், அதனை விடவும் அதிகமான நபர்கள் விடுதலைப் புலிகள் பக்கத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மை என அலி சப்ரி கூறுகின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினால் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட பலர் உள்ளமையினால், அவர்கள் யுத்த காலத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை என்பதை, உறவினர்களின் முகங்களை பார்த்து எவ்வாறு கூறுவது என குறிப்பிட்ட அவர், ஆணைக்குழுவின் அறிக்கையில் இந்த விடயங்கள் வரும் வரை மௌனமாகவே இருக்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றார்.

அத்துடன், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 4000திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதைவிடவும் அதிகமான அளவு விடுதலை புலி அமைப்பிலிருந்த பலர் காணாமல் போயிருக்கலாம்.

விடுதலைப் புலிகளுடன் அதிகளவிலான பொதுமக்கள் பயணித்துள்ளமையினால், அவ்வாறானவர்களே அதிகளவில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனதாக கூறப்படும் முறைப்பாடுகளில் 99.9 வீத முறைப்பாடுகள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரே பதிவாகியுள்ளன. 2009ஆம் ஆண்டின் பின்னர் மிகக் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்து தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஆயுதத்தின் பக்கம் தள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

இராணுவத்தை போர் குற்றவாளிகள் என கூறுவதை சிங்கள தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எம்மை பொறுத்தவரை இந்த காயத்தை சுகப்படுத்த வேண்டும். ஏற்பட்ட காயத்தை மேலும் மேலும் பெரிதாக்க வேண்டாம் என நினைக்கின்றோம்” என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

யுத்த காலப் பகுதியில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என கூறிய அவர், அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என கேட்டால், எவ்வாறு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிடுகின்றார்.

”காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களா, அல்லது பொதுமக்களா, எங்கே காணாமல் போனார்கள், இப்போது வேறு நாடுகளில் உள்ளார்களா அல்லது நீங்கள் கூறுவதை போன்று சரணடைந்த நபர்களை இராணுவம் வேறு எங்கேனும் கடத்தி சென்றதா என்ற சகல விடயங்களையும் ஆராய்வோம். இதில் தவறுகள் இடம்பெற்றுள்ளது என்றால், அது அரச தரப்பில் இருந்து இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிராகவும் உள்ளக பொறிமுறையில் விசாரணைகளை நடத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்” என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறுகின்றார்.

Tamil News

Leave a Reply