அணுக்குண்டு வீச்சில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி? | ஆர்திகன்

1,048 Views

அணுக்குண்டு வீச்சு

அணுக்குண்டு வீச்சு-பாதுகாப்பது எப்படி?

உக்ரைன் சமர் உலகில் மீண்டும் அணுவாயுதப் போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அணுவாயுத மோதலில் இருந்து எவ்வாறு தப்புவது என்பது தொடர்பான தேடல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அணுக்குண்டு வீச்சுஅணுக்குண்டுகளை சுமந்து வரும் ஏவுகணைகள் 300 தொடக்கம் 800 கிலோ தொன் எடைகொண்ட ரி.என்.ரி எனப்படும் வெடிமருந்துக்கு இணையான சக்தி கொண்ட அணுவாயுதங்களைச் சுமந்துவரும் வல்லமை கொண்டவை.

ஆனால் 300 கிலோ தொன் எடை கொண்ட ரி.என்.ரி வெடிமருந்து வோசிங்டன் அல்லது இலண்டன் அல்லது பரீஸ் போன்ற நகரங்களை முற்றாக அழிப்பதற்குப் போதுமானது.

இந்த தருணத்தில் பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும், ரஸ்யாவும் மக்களுக்கு வழங்கிய அணுவாயுதத் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்ற கையேடுகள் உட்பட பல ஆவணங்களை மீண்டும் பார்ப்பது நல்லது. இந்த கையேடுகளில் அடிப்படையான சில தகவல்கள் உள்ளன.

அதில் உள்ள முதன்மையான விதி என்னவெனில், குண்டு விழும் போது அதனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது வெடிக்கும் போது சூரியனைப்போல எழும் ஒளியானது பார்வை இழப்பை ஏற்படுத்தும். எனவே வெடிப்பின் அலைகளில் இருந்து முகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் தரையை அல்லது வேறு ஏதும் திடமான பொருளை நோக்கியே எமது முகத்தை வைத்திருக்க வேண்டும். தரைக்கு கீழான பதுங்கு குழியில் இருப்பது சிறந்தது.

வெடிப்பில் இருந்து வெளிவரும் மிக அதிக வெப்பம் மனிதர்களை உடனடியாகக் கொல்லும். எனவே திறந்த வெளிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

அணுக்குண்டு வீச்சுவெடிப்பின் பின்னர் எமது உடலில் கதிர்வீச்சுக்கள் படிந்தால், உடனடியாகவே சேமித்து வைக்கப்பட்ட நீரில் உடலை கழுவுதல் வேண்டும்.  நீர் அதனை அகற்றி விடும். ஆனால் கதிர்வீச்சுக்கள் கலந்த நீரை பயன்படுத்தக் கூடாது. எனவே நீரை பாதுகாப்பாக சேமித்து வைப்பது அவசியம்.

வெடிப்பின் பின்னர் பரவும் கதிர்வீச்சுக்களே எமக்கான பிரதான எதிரி. அதுவே படிப்படியாக மனிதர்களை கொல்லும். உடைகளில் கதிர்வீச்சுக்கள் பட்டிருந்தால், உடனடியாக உடைகளை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் உடைகளில் படிந்துள்ள கதிர்வீச்சுக்கள் படிப்படியாக எமது உடலைத் தாக்கும்.

அணுக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற இடத்திலோ, அதற்கு அருகாமையிலோ நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் அதற்குள் நீங்கள் குண்டு வெடித்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் தொடக்கம் 48 மணிநேரம் வரை இருப்பது நல்லது. எனினும் 48 மணிநேரமே மிகவும் சிறந்தது. ஏனெனில் 48 மணி நேரத்தின் பின்னர் கதிர்வீச்சின் தாக்கம் குறைவடைய ஆரம்பிக்கும்.

சிமெந்தில் தயாரிக்கப்பட்ட கொங்கிறீட் அல்லது செங்கல் ஆகியன கதிர் வீச்சுக்களையும், வெப்பத்தையும் தடுக்கும் சக்தி வாய்ந்தவை. எனவே அவ்வாறான இடங்களில் தங்குவது பாதுகாப்பானது.

அணுக்குண்டு வீச்சுநீங்கள் பாதுகாப்பாகத் தங்கும் இடங்களில் உணவு மற்றும் நீர் உட்பட அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களைச் சேமித்து வைக்கவும். இரு வாரங்களுக்கு தேவையான பொருட்களை சேமிப்பது சிறந்தது.

மேலும் ஒளிப்பிறப்பாக்கிகள் (flashlight), மின்கலங்கள், முதலுதவிச் சாதனங்களும் இருப்பது அவசியம். சில மருந்துகள் கதிர்வீச்சுக்களின் தாக்கத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுவதுண்டு. உதாரணமாக, பொட்டாசியம் அயடைட் கதிர் வீச்சுக்களின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதாகும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

குழாயில் வரும் குடிநீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் கதிர்வீச்சுக்கள் கலந்திருக்கலாம். எனவே போத்தல்களில் குடிநீர்களை சேமித்து வைக்கவேண்டும்.

அணுக்குண்டின்  வெடிப்பு இலத்திரனியல் சாதனங்களை செயலிழக்கச் செய்துவிடும். வெடிப்பின் போது உருவாகும் மின்காந்த அலையின் (Electro magnetic pulse) பாதிப்பே இதற்கான காரணம். எனவே தகவல்களை அறிவதற்கு டைனமோவில் இயங்கும் வானொலி பெட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் நாம் எப்போது பாதுகாப்பான இடங்களில் இருந்து வெளியேறலாம் என அறிய முடியும்.

அணுக்குண்டு வீச்சுகுண்டு வெடிப்பின் பின்னர் பெய்யும் மழை நீரில் அதிக கதிர்வீச்சுக்கள் கலந்திருப்பதால், அதில் நனைவதை நாம் தவிர்க்க வேண்டும். ஹிரோசிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளின் பின்னர் அங்கு பெய்த மழை கறுப்பு மழையாகவே பொழிந்தது. அதில் நனைந்ததனாலேயே பெருமளவான மக்கள் பலியாகியிருந்தனர். குண்டு வெடித்த 15 நிமிடங்களின் பின்னர் மழை பொழியும் வாய்ப்புக்கள் உண்டு.

கதிர்வீச்சுக்களினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மயக்கம், வாந்தி, உடல்பலவீனம், தோல் நோய்கள் போன்ற சில பொதுவான நோய் அறிகுறிகள் தென்படும்.

அணுக்குண்டு வெடிப்பில் இருந்து தப்புவதற்கு ஓடுவது என்பது சிறந்த உபாயம் அல்ல, பாதுகாப்பாக பதுங்குவதே சிறந்தது.

குண்டுவெடித்த இடம் எப்போது வழமையான நிலைக்கு திரும்பும்?

ஆய்வுகளின் அடிப்படையில் குண்டு வெடித்த பின்னரான 48 மணி நேரத்திற்கு பின்னர் கதிர்வீச்சுக்களின் தாக்கம் குறைவடைந்தாலும், குண்டு வெடிப்புக்கு முன்னர் இருந்த நிலையை அது அடைவதற்கு இரு வாரங்கள் செல்லும் என தெரிவிக்கப் படுகின்றது.

அணுவாயுதப் போர் என்பது மிகப்பெரும் அழிவைக் கொண்டது. அதில் இருந்து தப்புவதற்கு நாம் கடுமையாக போராட வேண்டும். சில அடிப்படை விதிகளை கற்பது நல்லது தான் ஆனால் அணுவாயுதப் போர் ஏற்படாது தடுப்பதே மிகவும் சிறந்தது.

Tamil News

1 COMMENT

  1. […] அணுக்குண்டு வீச்சு-பாதுகாப்பது எப்படி? உக்ரைன் சமர் உலகில் மீண்டும் அணுவாயுதப் போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அணுவாயுத மோதலில்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-173-march-13/ https://www.ilakku.org/  […]

Leave a Reply