கச்சதீவுக்குக்கு இரகசியமாக புத்தர் சிலை வந்தது எப்படி?-அருட்தந்தை வசந்தன் செவ்வி

கச்சதீவில் இரண்டு புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு அரச மரங்களும் நடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்திய அரசியலிலும் இது எதிரொலித்திருக்கின்றது. கச்சதீவு அந்கோனியார் தேவாலயத்தின் பரிபாலகர் அருட்தந்தை வசந்தன்தான் இந்த விவகாரத்தை முதலில் அம்பலப்படுத்தியவர்.

இந்த நிலையில், கச்சதீல் என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை அவர் தெரிவிக்கின்றார். அந்த நோ்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்கு தருகின்றோம்.

கேள்வி – கச்சதீவில் புத்தா் சிறை எதுவும் இல்லை என முதலில் மறுத்த கடற்படை சிறிய சிலை ஒன்றுதான் அங்குள்ளது என இப்போது கூறியிருக்கின்றது. இந்த விவகாரத்தை முதலில் அம்பலப்படுத்தியவா் நீங்கள்தான். எவ்வாறான நிலையில் அங்கு அதனை நீங்கள் அவதானித்தீா்கள்?

பதில் – மாா்ச் மாதம் மூன்றாம் நான்காம் திகதிகளில் அங்கு திருவிழா நடைபெற்றது. இதற்காக நான் முதலாம் திகதியே அங்கு சென்றிருந்தேன். மூன்றாம் திகதி மாலை நற்கருணை திருப்பலி திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு சுமாா் 15 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் வந்திருந்தாா்கள். இவ்வளவு தொகையான பௌத்த பிக்குகள் வந்திருந்தமை அங்குள்ளவா்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. எதற்காக இவ்வளவு பிக்குகள் வந்திருக்கின்றாா்கள் என்ற கேள்வி அவா்களிடம் எழுந்திருந்தது. இருந்தபோதிலும் அது தொடா்பாக நாம் அதிகளவுக்கு வனத்தை செலுத்தவில்லை.

மறுநாள் நான்காம் திகதி பெருநாள் திருப்பலிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னா் -திருவிழாவுக்கு வந்திருந்த இலங்கை, இந்திய மக்கள் வெளியேறிக்கொண்டிருந்தாா்கள். நான் என்னுடைய உதவியாளா்களுடன் என்னுடைய பணிகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சந்தா்ப்பத்தில் நான் கொண்டு சென்றிருந்த சில பந்தல் தகரங்கள் காணாமல் போயிருந்தன. எனவே நானும் எனது உதவியாளரும் அவற்றைத் தேடி அந்தத் தீவில் – எமது ஆலயத்துக்குப் பின்பக்கமாகச் சென்ற போது அங்கே பனை ஓலையால் அமைக்கப்பட்ட மிகவும் உயரமான வேலியை நாம் பாா்த்தோம். அதற்குள் என்ன இருக்கின்றது என்பதை அறிவதற்காக உள்ளே சென்ற போது, நான்கு பக்கமும் அந்த வேலி மிகவும் உயரமாக  அடைக்கப்பட்டிருந்தமையை அவதானித்தோம்.

அதனைவிட அதற்குள் அரச மரம் ஒன்று நாட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்படுவதையும் அவதானிக்க முடிந்தது. அந்த அரச மரத்துக்கு கீழே சுமாா் மூன்றடி உயரமான புத்தா் பெருமானின் சிலை ஒன்றும். அந்த அரச மரத்துக்கு முன்பாக ஐந்து அடிக்கு மேல் உயரமான மற்றொரு சிலையும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இவற்றைவிட அந்த அரச மரத்தை சுற்றி புதிதாக நான்கு மரங்கள் நாட்டப்பட்டிருந்தது. அவற்றுக்கு பசளை போடப்பட்டு, தண்ணீா் உற்றப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டுவருவதையும் நான் அவதானித்தேன்.

இவை அனைத்தையும் நான் உடனடியாக புகைப்படமாக எடுத்துக்கொண்டேன். என்னுடன் வந்தவா்களும் அதனை அவதானித்தாா்கள். இதுதான் அன்று அங்கு நடைபெற்றது. இதன்மூலமாகவே கச்சதீவில் புத்தா் சிலை இரகசியமாக அமைக்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் வெளிவந்தது.

கேள்வி – இந்தப் புத்தா் சிலை கச்சதீவில் நிலைகொண்டுள்ள படையினரின் வழிபாட்டுக்காகத்தான் அமைக்கப்பட்டது என கடற்படை தெரிவித்திருக்கின்றது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

பதில் – இந்தக் கருத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இந்த விவகாரம் தொடா்பாக முதல்முதலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சாா்ள்ஸ் நிமலநாதன் தெரிவித்திருந்தாா். இது குறித்து கடற்படைப் பேச்சாளரிடம் பி.பி.சி. செய்தியாளா் கேட்டபோது அவ்வாறு எதுவும் இல்லை என கடற்படைப் பேச்சாளா் மறுதலித்திருந்தாா்.

கச்சதீவில் ஏழு முதல் பத்து வரையிலான கடற்படையினா்தான் இருக்கின்றாா்கள். இவா்கள் வழிபடுவதற்கு ஏன் இவ்வளவு பிரமாணடமான புத்தா் சிலை தேவை என்ற கேள்வி முன்னெழுகின்றது. அதனைவிட அரச மரம் அந்தத் தீவில் இல்லாத ஒரு மரம். கச்சதீவில் எங்குமே அரச மரம் இல்லை. எனவே இதனை திட்டமிட்ட முறையில் பிரதான நிலப்பரப்பிலிருந்து கொண்டு சென்றிருக்கின்றாா்கள். அதனைவிட இப்போது நான்கு புதிய மரங்களை நட்டு வளா்க்கின்றாா்கள்.

இவற்றையெல்லாம் நாம் பாா்க்கும் போது – எதிா்காலத்திலே வரலாற்றைத் திரிவுபடுத்துகின்ற அல்லது புதிதாக ஒரு பௌத்த வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதுதான் இங்கு நோக்கமாக இருக்கின்றது என்பது இங்கு வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது. ஏனன்றால் வடக்கு கிழக்கில் இப்படியான சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.

கச்சதீவில் உள்ள படையினருக்கு வேண்டுமானால் சிறிய புத்தா் பெருமானின் சிலையை வைத்து அவா்கள் வணங்குவதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அரச மரத்தை எதற்காக நட்டு வளா்க்க வேண்டும்?

கச்சதீவு என்று சொல்லும் போது நுாற்றாண்டுகளாக அந்தோனியாருக்காகவே அா்ப்பணிக்கப்பட்ட ஒரு தீவு அது. மதங்கள், மொழிகள் அனைத்தையும் கடந்து அனைவரும் ஒன்றாக வந்து அந்தோனியாா் திருவிழாவை அண்டாண்டு காலமாக கொண்டாடி வருகின்றோம் என்பது கடற்படையினருக்கே தெரியும்.

இந்த நிலையில் கடற்படையினா் தெரிவித்த கருத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

கேள்வி – இந்தப் பிரச்சினை இப்போது இந்தியாவிலும் எதிரொலித்திருக்கின்றது. இந்தியா இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தில் இந்தியா ஏதாவது வகையில் அழுத்தம் கொடுக்குமா?

பதில் – இவ்விடயத்தில் நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், கச்சதீவு என்பது கத்தோலிக்க கிறிஸ்த்தவா்களின் ஒரு பெரிய அடையாளமாக இருக்கின்றது. அதனைவிட இன – மொழி ஒற்றுமையின் அடையாளமாகவும் இருக்கின்றது. அங்கு அந்தோனியாா் ஆலயத்தைத் தவிர வேறு எதுவுமே நுாற்றாண்டுகள் கடந்தும் இருக்கவில்லை. இந்த நிலைமை தொடா்ந்தும் நீடிக்க வேண்டும். சமாதானத்தை மதிப்பவா்கள், இன அடையாளங்கள் பேணப்படுவதை விரும்புபவா்கள் இதற்காக நிச்சயமாக குரல் கொடுப்பாா்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

கேள்வி – இன இடையாளங்கள் அண்மைக்காலத்தில் சா்ச்சைக்குரியதாக இருக்கின்றது. நெடுந்தீவிலும் வெடியரசன் கோட்டையை பௌத்த – சிங்கள சின்னத்தைக் கொண்டது எனக் காட்டிக்கொள்வதற்கான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் –  இதுபோன்ற விடயங்களில் எனக்கு நிறைந்த அனுபவம் உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நான் முன்னா் இருந்த போது குறுந்துாா் மலையாக இருக்கலாம் அல்லது நீராவியடிப் பிள்ளையாா் கோவில் பிரச்சினையாக இருக்கலாம் – இவையெல்லாம் இந்து மக்களுடைய பாரம்பரிய வழிபாட்டுத் தலங்காக இருக்கின்றன. அவை அனைத்தும் இப்போது பௌத்த தலங்களாக மாற்றப்படுகின்ற தன்மை அதிகரித்து காணப்படுகின்றது.

இதுபோல நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையில் கூட கடற்படையினரால் விளம்பரப்பலகை ஒன்று போடப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும், சிங்களத்திலும்தான் அந்த அறிவித்தல் போடப்பட்டிருந்தது. பௌத்த இடிபாடுகள் இங்கே உள்ளன என்பதை விளம்பரப்படுத்துவதாகவே அந்த அறிவித்தல் இருந்தது.

ஆனால், தமிழ் பௌத்தா்கள் இருந்துள்ளாா்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்றாய்வாளா்கள் கூறுகின்றாா்கள். ஆனால், அரசாங்கம் இதனை இதுவரையில் ஏற்றுக்கொள்வதாக இல்லை. போருக்கு பின்னரான காலப்பகுதியில் உள்நோக்கம் ஒன்றை வைத்துக்கொண்டு தனித் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற, வரலாற்றை திரிவுபடுத்துகின்ற செயற்பாடுகளுக்காக இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு எங்களுடைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது என்பதுதான் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.