சிறிலங்காவால் பண்பாட்டு இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ள சைவ ஆலயங்களின் பட்டியல்…

ஓட்டுச் சுட்டான் தான்தோன்றீசுவரர் ஆலயம், மாந்தை கிழக்கு பூவரங்குளம் பத்திரகாளியம்மன் கோவில், குமாரபுரம் சிறி சித்திரவேலாயுதம் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில், பாண்டியன் குளம் சிவன் கோவில், வவனிக்குளம் சிவபுரம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக் குமரன் கோவில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மயிலிட்டியில் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கோயில், ஓதியமலையில் வைரவர் கோயில், முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமி கோயில், செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம், புல்மோட்டை அரிசியாலை மலைக்கோவில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், மூதூர் சூடைக்குடா மத்தளமலைப்பகுதி ஆலயம், திருகோணமலை திருக்கோணேசுவரம், மூன்று முறிப்பு சிவபுரம் கண்ணகி அம்மன் ஆலயம், சிவபுரம் ஆலயம், மாந்தை கிழக்கு ஆதி சிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோயில், சிறீமலை நீலியம்மன் கோயில், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம், மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமி மலை போன்ற கோயில்கள். இந்தப் பட்டியலை ‘ தீம்புனல்’ 01.04.2023ம் திகதிய ‘தமிழ் மக்களுக்கு எதிரான கலாச்சாரப் போர்’ என்னும் ஆசிரிய தலையங்கத்தில் வெளியிட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று, யாழ்ப்பாணம் மந்திரி மனை, நெடுந்தீவு வெடியரன் கோட்டை, என்பன தொல்லியல் திணைக்களத்தின் பார்வையுள் விழுந்துள்ளதையும் ‘தீம்புனல்’ சுட்டிக்காட்டியுள்ளது. கூடவே நிலாவரை, கச்சதீவு அந்தோனியார் ஆலயம் என்பவற்றில் புத்தர்சிலை நிறுவும் முயற்சிகள் இடம்பெற்றுளதையும் சுட்டிக்காட்டிய தீம்புனல் கொழும்பில் கொச்சிக்கமை அந்தோனியார் ஆலயக் கோபுரம் கடலில் வரும் கப்பல்களுக்கு இலங்கை என்பதைக் காட்டும் அடையாளமாக இருந்ததை மாற்றி மிக உயரமான புத்தர்சிலை அமைத்து இந்நாடு சிங்கள பௌத்த நாடெனக் காட்டிய அதே பாணியிலேயே கச்சதீவு அந்தோனியார் ஆலயம் கப்பலில் வருபவர்களுக்கு இலங்கை என்பதற்கு அடையாளமாக விளங்குவதை மாற்ற புத்தர்சிலை அமைக்கப்பட்டு தமிழர் தாயகமும் சிங்கள நாடென்பதை உலகுக்கு அறிவிக்கச் சிறிலங்கா முயற்சிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.