இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை: சிறிதரன் எம்.பி

379 Views

ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம்

இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை. நீதியை வழங்கவில்லை. கிருசாந்தியினுடைய கொலை வழக்கு நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை பழிவாங்குவதற்கான சட்டமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களை ஒழிப்பதற்காக அவர்கள்  மீது ஏவப்பட்ட மிகக் கொடூரமான ஒரு சட்டமாகவே அமைந்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை இந்த மண்ணிலே இழந்திருக்கின்றோம். பல ஆயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்களின் சொத்துக்களை இழந்துள்ளோம். எமது மண்ணில் மாவீரர்களை நினைவு கூர முடியாதவர்களாக, எமது உறவுகளை நினைக்க முடியாதவர்களாக, எங்களுக்காக போராடிய சங்கிலிய மன்னன், பண்டாரவன்னியன், அக்கராயன் மன்னன் ஆகியோரை நினைக்க முடியாதவர்தவர்களாக பயங்கரவாத தடைச் சட்டம் எங்கள் மீது பாய்கிறது. எதற்கெடுத்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்கள் இன்றும் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

யுத்தத்திற்கு பிற்பாடும் பல நூற்றுக்கணக்கனக்கான இளைஞர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். என்னுடைய காரியாலத்தில் கூட 2013 ஆம் ஆண்டு இலங்கைப் படைகளால் கைக்குண்டுகள், குண்டு செய்கின்ற பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு எமது காரியாலயத்தில் இருந்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் கேட்பார் இல்லாமல் விசாரணையின்றி இருந்தார்கள். ஆகவே இந்த கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களது ஏகோபித்த குரல்.

ஒரு உலகம் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், மனித சாசனங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலக கட்டத்தில் அந்த உரிமைகளையும், சாசனங்களையும் மீறி இலங்கையினுடைய இந்த கொடூரமான சட்டம் எங்கள் மீதுது தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்த சட்டத்தை நீக்குமாறு மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இன்னும் பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டு இந்த சட்டம் நீக்கப்படும் வரை எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அண்மையில் கூட இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல கொலைகள், கொள்ளைகளில் ஈடுபட்ட ஈபிடிபியினுடைய நெப்போலியன், மதன்ராஜன் போன்றவர்கள் கூட தப்பி ஒரு நாட்டிற்கு சென்று அங்கு ஒழித்திருக்கின்ற காலத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்ரபோல் பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரசன் அன்று அறுப்பான் இறைவன் நின்றறுப்பான் என்பதற்கு ஏற்ப ஒரு நியாயம் அந்த நாட்டிலே கிடைத்திருக்கிறது. அந்த நாடு அதனை சிந்திக்கிறது.

அதேபோல் இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் கையாளவில்லை. நீதியை வழங்கவில்லை. கிருசாந்தியினுடைய கொலை வழக்கு நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை. திருகோணமலையில் விருலக்சன் என்ற மாணவன் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தற்போது தான் விடுவிக்கப்பட்டான். இவையெல்லாம் எமது கண்முன்னே நடைபெறுகின்ற சம்பவங்கள். அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள், அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஆகியோர் யாரையும் பழிவாங்க வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற சட்டமாக, அரசாங்கம் பழிவாங்குவதற்கான ஒரு சட்டமாக இதனை வைத்திருகிறது” என்றார்.

Tamil News

Leave a Reply