பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு

உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்களுக்கு மத்தியில், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தில் காணப்படும் குறிப்பிட்ட விடயங்கள் அல்லது குறைபாடுகளைக் கலந்துரையாடல்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் நான்கு தசாப்தங்களாகக் காலம் காலமாகத் தனது ஜனநாயகமற்ற தன்மைக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், மிகவும் ஜனநாயகமானதும், பயனுள்ளதும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு இணங்குவதுமான மாற்றுச் சட்டம் ஒன்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தினால் தொடரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு புதிய சட்டக் கட்டமைப்பு அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டைப் பாதுகாக்க எங்களுக்கு ஒரு சட்டம் தேவை. இந்த சட்டமூலம் தொடர்பான குறிப்பிட்ட விமர்சனங்களை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நாங்கள் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த புதிய சட்டமூலமானது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் முந்தைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளில் காணப்படும் பல குறைபாடுகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது அல்லது விரிவுபடுத்துகிறது என எச்சரித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.