ஞானசாரதேரர் காணி பிரச்சினையை தீர்ப்பதாக கூறியமை இன அழிப்பின் முன்னெடுப்பே- அருட்தந்தை மா.சத்திவேல்

371 Views

இன அழிப்பின் முன்னெடுப்பே

ஞானசார தேரர் மன்னார் கோவில்பட்டி கிராமத்தின் மக்களை சந்தித்து அவர்களின் காணிப் பிரச்சினையை தீர்க்கப் போவதாக தெரிவித்துள்ளமை தமிழர் தேசியத்திற்கு எதிராக புதிய முகத்துடனான இன அழிப்பின் முன்னெடுப்பே என்றே கருத வேண்டியுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மா.சத்திவேல் இன்று   வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதோடு, அவர்களின் தொல்பொருளியல் திணைக்களத்தினர் மிகப் பழமையான சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆக்கிரமிக்க முனைப்போடு களமிறங்கியுள்ளனர். அத்தோடு பௌத்த விகாரைகள் கட்டப்படுவதோடு இரவிரவாக அரச விதைகளும் தமிழ் தேசத்தில் விதைக்கப்படுகின்றன.

தற்போது பௌத்த கலாச்சார மண்டப பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது. இந் நிலையில் இவற்றுக்கெல்லாம் கட்டமைப்பு ரீதியில் எதிர்ப்பு தெரிவித்து செயல்படுவதற்கான சமூக அரசியல் சக்திகள் இல்லாத நிலையில் தமிழ் தேசியத்திற்கான சமய எல்லைகளை கடந்து போராடிய மக்களை சிதைக்க களமிறங்கியுள்ள சக்திகளுக்கு முகம் கொடுக்க தமிழர் தாயகத்தின் இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க தலைமைகள் மிகவும் புரிந்துணர்வுடன், விட்டுக் கொடுப்புடன் கூட்டாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு  அடுத்த கட்ட நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

கடந்த வாரத்தில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள் கூட்டு செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் உணர்த்தி நிற்கின்றன. ஒன்று பேரினவாதத்தின் அதிதீவிர செயற்பாட்டாளரும், இன வன்முறைகளுக்கு தூபமிடுகின்றவருமான ஞானசார தேரர் மன்னார் கோவில்பட்டி கிராமத்தின் மக்களை சந்தித்து அவர்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக அறிவித்துள்ளமை தமிழர் தேசியத்திற்கு எதிராக புதிய முகத்துடனான இன அழிப்பின் முன்னெடுப்பு என்றே கருத வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்ல இவர் அங்கு சென்ற விதம், வரவேற்கப்பட்ட விதம் எல்லாமே ஏற்கனவே தீர்மானித்ததை போன்று தோற்றமளிக்கின்றது. பேரினவாதத்தின் காவலனாக விளங்குபவரை மலர்தூவி வரவேற்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத, அங்கீகரிக்க முடியாது செயலுமாகும்.

இரண்டாவதாக சிவசேனை அமைப்பின் இலங்கை காவலரும், இலங்கை பிஜேபி கட்சியின் ஸ்தாபகருமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் கடந்த வாரத்தில் “சிவபூமி மன்னாரை சிதைக்கும் கிறிஸ்தவ அட்டூழியம்” எனும் தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக  நடாத்திய நிகர்நிலை கலந்துரையாடல். இதில் உண்மைகள் இருக்கலாம். எனினும் ஒரே காலப் பகுதியில் முன்வைக்கப்படும் கருத்துக்களும், ஞானசாரரின் கோவில்பட்டி கிராம மக்கள் சந்திப்பும் திட்டமிடப்பட்டதா? இவையெல்லாம் ஒரு அடி மரத்தின் ஆணிவேர் என்றே சிந்திக்கத் தூண்டுகின்றது.

மேற்கூறிய இரண்டு சக்திகளும் தனித்தனியாக இயங்குவது போன்று தோன்றினாலும் நோக்கம் ஒன்றே. தெற்கில் கடந்த காலத்தில் பௌத்த, முஸ்லிம் பிரச்சினையை தோற்றுவித்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதோடு  கிறிஸ்தவ கத்தோலிக்க முஸ்லிம் முரண்பாட்டினை கட்டவிழ்த்து அரசியல் நாடகமாடினர்.

தற்போது இந்து, கிறிஸ்தவ கத்தோலிக்க  முரண்பாட்டை ஊக்குவித்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். இதுவே கடந்த காலத்திலும் நிகழ்ந்தது.

இந்தப் பின்புலத்தில் வடக்கில் இந்து கிறிஸ்தவ கத்தோலிக்க பிரச்சினையை தோற்றுவித்து எம்மவர்களையே மோதிக்கொள்ள வைத்து தமிழர் தாயக தேசியத்தின் அரசியலை சிதைத்து, தாயக அரசியல் அரசியலை அழிவுக்கு தள்ளிவிட திட்டமிடுகின்றனர். இதனை தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சமய அரசியல் தலைமைகளும் உன்னிப்பாக அவதானித்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

இல்லையெனில் சமயங்கள் பேசும் உண்மைகள் பொய்த்துவிடும். மனிதம் சிதையும். அதனோடு தமிழர் தேசியமும் தேசியத்தின் எல்லைகளும் அழியும். அரசியல் காக்கும் போராட்டமும் நீர்த்து ஏமாந்த மக்களாவோம்.இதனையே பேரினவாத ஆட்சியாளர்களும், சர்வதேச பூகோள அரசியல் சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடம் கொடுத்தால் நாமும் எதிரிகளின் கைக்கூலிகளாகவே அடையாளம் காணப்படுவோம். ஆதலால் சமய தலைமைகளாக விழிப்போடு செயல்பட்டு சந்தேகம், பயம் தீர்த்து தேச விடுதலைக்காக கூட்டு சக்தியாக  செயல்படல் வேண்டும்” என்றார்.

Leave a Reply