பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது – அருட்தந்தை மா.சத்திவேல் 

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். 

அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளியுலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும்; எந்த வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கக்கூடாது; அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருடைய தனிப்பட்ட மகிழ்வில் நாமும் பங்கு கொள்கின்றோம். ஆனால், பொது மன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை ‘விடுதலை’ என வெளியில் அனுப்புவதை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை.

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்பது அரசு பயங்கரவாதத்தினை அங்கீகரிக்கும், அதற்கு எதிரான மக்களின் விடுதலை செயற்பாட்டினை தொடர்ந்து பயங்கரவாதமாக்குவதுமான செயலாகும். தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் கைதியான சதீஷ்குமாரின் விடயத்திலும் அதுவே மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல; பயங்கரவாதிகளும் அல்ல. அவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி காலத்துக்கு காலம் ஜனாதிபதிகள் விடுதலை என வெளியில் அனுப்புவது என்பது தமிழ் மக்களையும், தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் செயலாகும்.

தற்போதைய ஜனாதிபதி 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று பாராளுமன்றத்தில் கொக்கரித்தார்.

தமிழ் மக்கள் விரும்பாத 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்தப்போவதாக அரசியல் நாடகம் ஆடினார்.

அது பயங்கரவாதமாகும்; அரசியல் யாப்பில் உள்ள 13ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று கூறி பெருமளவான இயக்கத்தினர் வீதி போராட்டத்தை நடத்தினர். பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களுக்கு எதிராக பாயவில்லை. இவர்களா தேசப் பற்றாளர்கள்?

விடுதலை செயற்பாட்டை பயங்கரவாதமாக்கி, அதற்கு துணையாக பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்து 44 ஆண்டு காலமாக பாதுகாப்பதும், 75வது சுதந்திர ஆண்டிலும் அதன் பாதுகாப்பிலே ஆட்சி செய்ய நினைப்பதும், அச்சட்டத்தினை புதுப் பெயரில் தொடர வழிசமைப்பதும் பயங்கரவாதமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தூக்குத் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுப்பதே தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப செயற்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அன்று குட்டிமணி கூறியது போன்று தற்போது அரசு பயங்கரவாதம் வேறு வடிவத்தில் தெற்கு பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு எதிரான தெற்கின் சக்திகள் தமிழ் மக்களுடைய அரசியலை அங்கீகரித்து அதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் தீவிரப்படுத்த முடியும். இல்லையேல், நாடு தொடர்ந்து பிளவுபட்டே இருக்கும் என்பதையும் தெற்கின் சக்திகள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.