சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தடைகள், இழுபறிகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்தாலும்கூட தேர்தலை எப்படியும் நடத்தி முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் நிலைமைகளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தேர்தலைத் தொடர்ந்தும் தாமதப்படுத்த முடியாத நிலைமைக்குள் தள்ளியிருக்கின்றது. அதுவே இந்தத் தீர்மானத்திற்கான முக்கிய காரணம்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலைமையிலேயே மார்ச் மாதம் கொரோனா நோயிடர் குறுக்கிட்டு நிலைமைகளைத் தலைகீழாக்கியது.

தேரதலுக்காகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டவிதிகளையும் மீறிய நிலையில் – மூன்று மாதங்களுக்கு மேலாகச் செயலிழந்துள்ளது. முடக்க நிலையில் இருக்கின்றது. சட்டவாக்கத்துறையின் நடவடிக்கைகள் இதனால் செயலற்றுப் போயிருக்கின்றன. இந்தச் சூழலில் நிறைவேற்றதிகாரமாகிய ஜனாதிபதியின் அதிகாரங்களே நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. இதனால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஜனநாயகவாதிகளும் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கவலை கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய பின்னணியில்தான் தேர்தலை ஆகஸ்ட் 5 ஆம் திகதி எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்ற இறுக்கமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஒருவகையில் இது வரவேற்கப்பட வேண்டிய தீரமானம் என்றே கூற வேண்டும்.

ஆனால் இப்போதுள்ள நிலைமையில் இந்தத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுமா, நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.AP20084297214628 சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்

கொரோனா நோயிடர் அச்சுறுத்தல் ஒரு தடையாக அமையலாம் என்பது முதலாவது காரணம். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாகத் தொற்றிப் பரவுவதற்கு இந்தத் தேர்தல் நடவடிக்கைகள் வழிவகுத்துவிடுமா என்ற அச்சம் பொதுவாக அனைவரிடமும் காணப்படுகின்றது.ஏனெனில் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளல் மக்கள் ஒன்றுகூட வேண்டிய அவசியம் எழுக்கின்றது. சாதார நிலைமைகளில் இடம்பெறுவது பொன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்கின்ற பொதுக் கூட்டங்களும் பிரசாரக் கூட்டங்களும் இடம்பெறாவிட்டாலும்கூட வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்வார்கள்.

அவ்வாறு செல்கின்ற வேட்பாளர்களும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கிளின் முக்கியஸ்தர்களும் உடன் செல்லவே செய்வார்கள். இதனால் ஒரு சிறிய கூட்டமாகவே வேட்பாளர்களின் வாக்காளர் தரிசன நடவடிக்கைகள் இடம்பெறும். அவ்வாறு செல்வது கொரோனா காலத்து சுகாதார நடைமுறைகளுக்கு முரணானது. அந்தச் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும் என்று தடுக்கப்படுமானால், அதுவே, சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தைத் தடை செய்ததாக அமைந்துவிடும். தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியாமல் போனதாகக் கருதச் செய்துவிடும்.

சட்டங்கள் முரண்படுகின்ற நிலைமை

கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். எனவே அவை தொடர்பான நடவடிக்கைகளும் சட்ட ரீதியானவை. அதிகார அந்தஸ்து பெற்றவை. அவற்றை மதிக்க வேண்டும். அதற்கு அமைவாகச் செயற்பட வேண்டும் என்பதும் கட்டாயம். அதனைத் தவிர்க்க முடியாது.

அதேவேளை, ஜனநாயக உரிமைகள் என்று வரும்போது, ஆட்சி அதிகாரத்தின் முக்கிய அம்சமாகிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்ற கடப்பாட்டைக் கொண்ட தேர்தல் செயற்பாடுகள் பற்றிய சட்டங்களும் இதில் தொடர்புபடுகின்றன.

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தமது கொள்கைகள் நிலைப்பாடுகள் அதிகாரத்திற்கு வந்தால் என்னென்ன செய்வார்கள் என்பது பற்றிய திட்ட விளக்கங்கள், கொள்கை விளக்கங்கள் என்பவற்றை வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கு விளக்கிக் கூறுவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். தேர்தல் சட்டத்தில் இது முக்கிய அம்சம். தவிர்க்கப்பட முடியாதது.

ஆனால் இப்போதுள்ள நிலைமையில் சுகாதார விதிகளுக்கமைய 50 பேர் மாத்திரமே ஒரு பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பற்றிய ஆள் அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்கள் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது.secont1 சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்பொதுக்கூட்டம் என்றால் அதுவும் தேர்தல் பிரசாரக் கூட்டம் என்றால் பொதுமக்கள் பெருமளவில் இயல்பாகவே கலந்து கொள்ள விரும்புவார்கள். இந்த விருப்பம் அவ்வப்போது நிலவுகின்ற நிலைமைகைள் பொறுத்து வேறுபடும் என்பது வேறு விடயம். ஆனால் பொதுநிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பொதுமக்களுடைய ஆர்வத்தையும் விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையையும் தூண்டவே செய்யும்.

இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரமே கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை பொலிசாரும், சுகாதாரத்துறையினரும் உறுதி செய்து கொள்வதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த முற்பத்pவு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பொதுக்கூட்டங்கள் நடத்த முடியாது. நடத்தப்படுகின்ற சிறிய அளவிலான கூட்டங்களிலும் ஆட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைமைகளும் வழமையான தேர்தல்களைவிட இந்தத் தேர்தலை மிக மோசமாகப் பாதிக்கவே செய்யும். இதனால் இந்தத் தேர்தலின் சுதந்திரத் தன்மை கேள்விக்கு உள்ளாகின்றது.

தேர்தல்களில் வேட்பாளர்களுக்குள்ள உரிமைகள் சார்ந்த சட்டவிதிகளும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான சுகாதாரத்துறை சார்ந்த சட்டவிதிகளும் இதனால் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற ஒரு சூழ்நிலை இந்தத் தேர்தலில் உருவாகும். ஏற்கனவே உருவாகியிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

செயலணியின் கண்காணிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான சுகாதாரத்துறையினருடைய சட்டவிதிகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும். நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டு மக்களின் உயிர்களைப் பலியெடுக்கின்ற ஒரு நச்சுக்கிரும் சார்ந்த சட்ட நடவடிக்கைகளை மதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதனைத் தவறென்று கூற முடியாது.

இத்தகைய சட்ட விதிகளைத் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சந்தர்ப்பவசமாகவோ மீறுகின்ற வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்பட்டால் அவர்கள் தமது பிரசார நடவடிக்கைளில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகிவிடும்.

குறிப்பாக இந்த சுகாதார விதிமுறைகள் சார்ந்த சட்டத்தின் முதல் அம்சமாக நோய்த்தொற்றுக்க உள்ளாகியவர்கள் அல்லது நோய்த்தொற்றை ஏற்படுத்துபவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவ்வாறு வேட்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டால், மிகக் குறுகிய காலத்தை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்காகக் கொண்டுள்ள வேட்பாளர்களின் நிலைமை என்னவாகும் என்பதை விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை.

இது ஒருபுறமிருக்க, பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினரும் இந்தத் தேர்தல் நடவடிக்கைகைக் கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முப்படைகளின் தளபதிகள், நாட்டின் அனைத்துப் புலனாய்வு பிரிவுகளினதும் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் என முழுக்க முழுக்க இராணுவ உயர் மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய இந்தக் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அனைத்துச் சட்டங்களையும் மீறியதாகவும் தேர்தல் செயற்பாடுகளுக்குப் பாதகமாகவுமே அமையும் என்ற அச்சம் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

அரசு சார்ந்த இந்த உயர்மட்ட குழுவுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, இந்த செயலணி தனது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கே நேரடியாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும். எந்த நடவடிக்கையானாலும், ஜனாதிபதியின் நேரடி தலையீட்டிலும், அவருடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையிலுமே இந்தச் செயலணி முன்னெடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

அரசு சார்ந்திருப்பதனால், இந்த செயலணியின் செயற்பாடுகள் அரசு சார்ந்த பொதுஜன பெரமுன கட்சியினருக்கு ஆதரவான முறையிலேயே அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையும் பலமான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. இத்தகைய சூழலில் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியான முறையிலும் நடைபெறுமா என்பது கேள்விக்கு உள்ளாகின்றது.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருவார்களா?

மறுபுறத்தில் பொதுவாகத் தேர்தல்களைக் கணகாணிப்பதற்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கான ஒப்பந்தங்களைத் தேர்தல் திணைக்களம் சம்பந்தப்பட்ட சர்வதேச தரப்பினருடன் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையில் இம்முறை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்பாளர்களா என்பதும் சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

தேர்தலில் பங்கேற்கின்ற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான சுகாதார சட்டவிதிகளுக்கமைய விமான நிலையத்தில் சுகதாhரப் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும். அத்துடன் 14 நாட்கள் தனிமைப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்த பின்பே நாட்டிற்குள் பொது வெளியில் நடமாடுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.NW09 சுதந்திரமாகத் தேர்தல் நடைபெறுமா? -பி.மாணிக்கவாசகம்
இத்தகைய நடைமுறைகளைக்கு உள்ளாகின்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பல இடங்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து புரிந்து கொண்டால்தான் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உரிய முறையில் செயற்பட முடியும். ஆகவே தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் வந்து சேர வேண்டும். இதற்கமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

மறுபுறுத்தில் இன்றைய சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் நிலைமையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவார்களாக என்பதும் சந்தேகத்திற்கு உரியதாகவே தென்படுகின்றது. எனவே, முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் திணைக்களம் செய்திருப்பதாகத் தெரியவில்லை.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எந்த வேளையிலும் உருவாகலாம் என்ற அச்சத்திற்கமைய ஒரு நோய் நெருக்கீட்டு நிலைமை உருவாகுமானால் தேர்தலை முறையாக நடத்துவது கடினமான காரியமாகலாம். அத்தகைய நிலைமை உருவாகும் என்று நிசசயமாகக் கூறுவதற்கில்லை. என்றாலும், அத்தகைய நிலைமைக்குத் தேர்தல் திணைக்களமும், வேட்பாள்களும் பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே நிலைமைகள் காணப்படுகின்றன.

அதேவேளை, சுகாதார நெறிமுறை சட்;டங்கள், ஜனாதிபதி இராணுவ செயலணியின் கண்காணிப்பு, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் நிச்சயமற்ற தன்மை என்ற மும்முனை நெருக்குதல்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே தென்படுகின்றது.