இலங்கை – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்த அவதானம் – இந்திய விமானப்படை தளபதி தெரிவிப்பு

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஒத்துழைப்பையும், ஈடுபாட்டையும் வலுவாக்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில், இந்திய விமானப்படை  தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம்  மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி செவ்வாய்கிழமை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதே வேளை புதன்கிழமை இந்திய விமானப்படை படைப்பிரதானிக்கும் , பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்குமிடையிலான சந்திப்பொன்றும் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு விமானப்படைகளுக்கிடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பின் அடையாளமாக, திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நட்புறவு கேட்போர் கூடத்தை நிர்மாணிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக எயா சீப மார்ஷல் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் இரு நாட்டு விமானப் படைகளும் இலங்கைக் கரையோரப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும், இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியை மேலும் வலுப்படுத்த இந்தியா அதன் ஒத்துழைப்பை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.