கொடிகட்டிப் பறந்த சாத்திர – மந்திரவாதி ஞானாக்காவுக்கு நேர்ந்த கதி

ஞானாக்காவுக்கு நேர்ந்த கதி

இலங்கை அரசியலில் பௌத்த மதம் எந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றதோ, கிட்டத்தட்ட அந்த அளவுக்கு சாத்திரம் பார்த்தலும், மந்திரம் செய்து கொள்வதும்கூட செல்வாக்கு பெற்றிருக்கின்றது. குறிப்பாக ராஜபக்சக்கள் இதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக் கின்றார்கள். இந்த வகையிலேயே மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் திருப்பதிக்குச் சென்று வணங்கி ஆசீர்வாதம் பெறுகின்ற பழக்கத்தையும் கொண்டிருந்தார்.

அது மட்டுமல்ல, சுயலாப நன்மைகளைப் பெறுவதற்காக  குறி – சாத்திரம் பார்த்து மந்திர ரீதியாக கையில் நூல்கட்டி, இக்கட்டான வேளைகளில் மந்திரிக்கப்பட்ட நீருடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்கான ஒரு மந்திரவாதிப் பெண்மணியும் ராஜபக்சக்களை வழிநடத்துவதற்கென இருக்கின்றார். நன்மை தீமைகளை குறிபார்த்தும், சாத்திரத்தின் மூலம் கண்டறிந்தும் கூற வல்வலர் என பெயர் பெற்றுள்ள இவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களின் அரசியலிலும் 12, 13 வருடங்களாகத் தொடர்புகளை மேற்கொண்டிருக்கின்றார்.

அவரை ‘ஞானாக்கா’ என்று அழைப்பார்கள். ஞானவதி ஜயசூரிய என்பது அவருடைய பெயர். வயது 65. அனுராதபுரத்தைச் சேர்ந்தவர். குறி சொல்லுதல், சாத்திரம் கூறல் மந்திரித்த நீர் வழங்கி ஆசீர்வதித்தலில் 41 வருட அனுபவம் கொண்டவர். மகிந்த ராஜபக்ச மட்டுமன்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரே மந்திர, மத சாத்திர வழியிலான வழிகாட்டி. கோட்டாபய தனது துணைவியாருடன் ஞானாக்காவைச் சந்தித்து சாத்திரத்தின் மூலம் எதிர்கால நிலைமைகளை அறிந்து கொள்வதும், ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதும் வழக்கம்.

பொருளாதார நெருக்கடிகள், துன்பங்கள், பிரச்சினைகளைத் தொடர்ந்து, காலிமுகத்திடலின் கோத்தா கோ கம போராட்டத்தை முறியடிப்பதற்காக மகிந்த ராஜபக்சவுக்கு அவர் மந்திரிக்கப்பட்ட நீரை வழங்கியிருந்தார் என்றும் அதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் குண்டர்களை ஏவிவிட்டதன் காரணமாகவே ராஜபக்சக்களின் வீடுகள் தீப்பற்றி எரிந்து, அவர்களும் ஒடி ஒளிய நேரிட்டது என்றும் கூறப்படுகின்றது.

பிரதமர் பதவியைத் துறந்த பின்னர், மகிந்த ராஜபக்ச சீற்றம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக ஓடி ஒளிந்த அவர், இன்னும் மறைவிடத்தை விட்டு வெளியில் வரமுடியாதிருக்கின்றார். அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று கடமைகளை நிறைவேற்ற முடியாத இக்கட்டான நிலைமையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார். உயிரச்சத்தில் ஒடுங்கியுள்ள ராஜபக்சக்களின் பாதுகாப்பு பல இடங்களிலும் அதி உச்ச நிலையில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று அவர்களின் சாத்திர மந்திர முறைகளிலான வழிகாட்டியாகிய ஞானாக்காவும் அதி உச்ச நிரையில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

ஒரு பிரிகேடியரின் தலைமையில் 250 இராணுவத்தினரும், 10 காவல்துறையினரும் பாதுகாப்புக்கென அவருடைய இல்லப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தனர். அவரது சாத்திர வழிமுறைகளும் ராஜபக்சக்களுக்கும், ஏன் அவருக்கும்கூட நேரவிருந்த ஆபத்துக்களை முற்கூட்டியே அறிந்து, அவற்றைத் தடுத்துக் கொள்வதற்கு உதவவில்லை. ராஜபக்சக்களின் வழிகாட்டியாகிய அவர் மீதும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் சீற்றம் கொண்டிருந்தனர்.

வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இருந்த இராணுவத்தினரின் பாதுகாப்பையும் கடந்து சென்ற பேராட்டக்காரர்கள், ஞானாக்காவின் சொத்துக்களை அடித்து நொறுக்கினார்கள். வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். நிர்க்கதியாகத் தவிக்கவிடப்பட்ட ஞானாக்கா இப்போது மகிந்த ராஜபக்சவைப் போன்றே மறைந்து வாழ்வதாகத் தகவல்.

தினை விதைத்தவன் தினை அறுவடை செய்வான். வினை விதைத்தவன் வினைகளையே அறுவடை செய்வான் அல்லவா? அதேபோன்று ராஜபக்சக்களும் தங்களுடைய செயற்பாடுகளுக்கான வினைகளை அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று அவர்களை அரசியல் வாழ்வில் வழிநடத்திய சாத்திர மந்திரவாதியாகிய ஞானாக்காவும் வினைகளை அறுவடை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

Tamil News