இலங்கையின் நெருக்கடியை பயன்படுத்தப் பார்க்கும் இந்தியா, சீனா – பா.அரியநேத்திரன்

351 Views

“சீனாவும், இந்தியாவும் கீரியும் பாம்பும் போன்ற நிலையில் உள்ள போதும், இதில் யார் இலங்கையில் கூடுதலாக கால் ஊன்ற வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ளே போட்டியும் பொறாமையும் உண்டு.  இந்த இரு நாடும் இலங்கையின் வங்குரோத்து நிலையை வைத்து வடக்கு கிழக்கை சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை” என   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான சீனத் தூதுவர் கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் முஸ்லிம்  சிவில் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. மேலும் இலங்கையின் மிக நெருங்கிய நாடாகவும், பொருளாதார உதவிகளை தொடர்ந்தும் செய்த – செய்கின்ற அண்டை நாடாகவும் இந்தியா மிளிர்கின்றது.

தற்போதைய பொருளாதார வங்குரோத்து நிலையில் சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு பல நிதி உதவிகளை செய்கின்றன.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி உள்ளது. இது சீனாவுக்கு ஒரு விரும்பத்தகாத செயலாக இருந்தாலும், மனிதாபிமான உதவிகளை அவர்களால் தடுக்கமுடியாது.

இந்த நிலையில்தான்  வடக்கு கிழக்கில் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் சில வேலைத்திட்டங்களை முன்வைக்கும் நிலையில் அரசியல்வாதிகளை தவிர்த்து, மட்டக்களப்புக்கு  உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர்,  மாவட்ட சிவில் சமூகத்தினரை சந்தித்துள்ளார்.

 மட்டக்களப்பின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.

மேலும் பல அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்திருந்தார்.

சீனத் தூதுவருடைய கிழக்கு மாகாண வருகைக்குப் பின்னர் இந்திய தூதுவரும் கிழக்கில் வந்து பலரை சந்திப்பதற்கு வாய்ப்புகள் வரலாம். ஆனால் இந்திய தூதுவர் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் அரசியல் ரீதியான உறவுகளை வைத்திருப்பதால், அவர் தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்களைத்தான் சந்திக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.

Tamil News

Leave a Reply