நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் ஐந்து விடயங்களுக்கு தடை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பக்தர்களின் வசதிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்தநிலையில், சினிமா பாடல்கள், ஆடல் பாடல்கள் உட்பட ஐந்து கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடுதல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள், விளம்பரங்களை திரையிடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்களை அல்லது காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று யாழ். மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேநேரம், ஆளில்லா விமான கருவிகளை பறக்க விடுவதற்கும் ஆலய வளாகத்துக்குள் யாசகம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.