காணி விடுவிப்பு தொடர்பான பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கருத்து திரிபுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கருத்து

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராளுமன்றில் கூறவில்லை என்றும் அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிபுப்படுத்தி கூறுகின்றனர் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லை. இராணுவத் தேவைகளுக்கான காணிகள் தவிர, மக்களுக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே கூறினார்” என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 40 வருடங்களாகப் பூட்டப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, வட மாகாணத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடிகள் பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. 37 வருடங்களுக்குப் பிறகு பலாலி வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அதேவேளை , பலாலி இராணுவ வைத்தியசாலை தனியார் காணியில் அமைந்துள்ளது.

அந்த காணிக்கு நஷ்ட ஈடு வழங்குவதா ? அல்லது அவருக்கு மாற்று காணி வழங்குவதா ? அல்லது வைத்தியசாலை அங்கிருந்து அகற்றுவதா என்பது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் , காணி உரிமையாளர்களை அழைத்து பேசி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.