தரிசு நிலத்தில் விவசாயம் | துரைசாமி நடராஜா

8 1 தரிசு நிலத்தில் விவசாயம் | துரைசாமி நடராஜாதரிசு நிலத்தில் விவசாயம்:

இலங்கையின் சமகால நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. பல்வேறு துறைகளும் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்து இலங்கை காத்துக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்கள் சொல்லொணா துன்ப துயரங்களையும் அனுபவித்து வரும் நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களின் நிலைமைகள் ஒரு படி அதிகமாகவே மோசமடைந்து வருகின்றமை யாவரும் அறிந்ததேயாகும். இதனிடையே எதிர்வரும் காலங்களில் மேலும் இறுக்கமடையும் உணவுத் தட்டுப்பாட்டினை தவிர்ப்பதற்காக வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

எனினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வீட்டுத்தோட்டச் செய்கையில் கரிசனை காட்டி வருகின்றபோதும் உரிய நிலமற்ற நிலை இந்நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, அதில் விவசாய நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இது சாத்தியப்படாத நிலையில்  எல்லாம் ஏட்டுச்சுரைக்காயாகி இருக்கின்றது. இதனிடையே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பெருந்தோட்ட வெற்றுக் காணிகளில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இவரின் கோரிக்கையும் புஸ்வாணமாகிவிடக் கூடாது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும் என்பதோடு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இலங்கை இப்போது கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றது. அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்று தெரியாது நாட்டின் நகர்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. பசி பட்டினி மக்களை வாட்டியெடுக்கும்  நிலையில்  தாய் பிள்ளையை ஆற்றில் வீசியெறியும் கொடூரமும்,  பிள்ளைகளின் பசியின்மையை போக்க முடியாத தாய் நச்சு விதைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் சம்பவங்களும் , வறுமையால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இங்கு அதிகமாகவே அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இலங்கையர்களின் துயர் துடைப்பதற்கு சர்வதேசத்திடம் இலங்கை கையேந்திய போதும் அதனால் உரிய சாதக விளைவுகள் கிடைக்கவில்லை. நிலைமைகள் இழுபறியாகவே இருந்து வரும் நிலையில் இலங்கையின் சமகாலமும் எதிர்காலமும்  சூனியமாகி இருக்கின்றது. இதனிடையே செப்டம்பர் மாதம் இலங்கைக்கு நிதி கிடைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி  உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு அதன் பிரதானியிடம் கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இதனிடையே நிதியத்தின் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து பிரதமர் ரணில் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் சாதக விளைவுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. எவ்வாறெனினும் எதிர்வரும் மூன்று மாத காலம் எல்லாத் துறைகளிலும் இலங்கைக்கு சவால் மிகுந்த ஒரு காலமாகவே அமையும் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமேயாகும். அத்தோடு சிறுபோகம் மற்றும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இவ்வருட இறுதிக்குள் முழுமையாக கிடைக்காவிடின் எதிர்வரும் காலங்களில் மிகவும் மோசமான உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடும். நாட்டின் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் உணவுத் தட்டுப்பாடுச் சவாலை வெற்றி கொள்ளாவிடின் மூன்று வேளை உணவுக்கு பதிலாக இரண்டு வேளை உணவை உட்கொள்ள வேண்டியேற்படுமென்றும் அரசதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.

பிற்போக்கு அரசியல்வாதிகள்

நாட்டு மக்கள் எரிவாயு, மண்ணெண்ணெய், பால்மா, எரிபொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் பல மணித்தியாலங்களை கடத்த வேண்டியுள்ளது. தந்தை, தாய், மகன், மகள் ஆகியோர் வெவ்வேறு வரிசைகளில் பொருட் கொள்வனவிற்காக காத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு வரிசைகளில் நின்ற அப்பாவி மக்கள் மயங்கி விழுந்து இறந்த சம்பவங்களுக்கும் குறைவில்லை..

உணவுப் பொருட்களின் பற்றாக்குறை, விலைவாசி அதிகரிப்பு ஒரு புறமிருக்க  உள்ள உணவுப் பொருட்களையும் சமைத்து உண்ண முடியாத நிலைக்கு எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு  மக்களை பாதாளத்தில் தள்ளி இருக்கின்றது. இந்நிலையில் மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு வித்திட வேண்டிய அரசியல்வாதிகள் இதை விடுத்து கனவுலகக் கதைகளைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் வயிற்றுப் பசியையும், அவர்கள் படும் அல்லல்களையும் கனவுலக அரசியல்வாதிகள் கண்டும் காணாதுள்ளமை வெட்கக்கேடான விடயமாகும். மக்களின் சாபம் அவர்களைச் சும்மா விடாது. அவர்களின் பரம்பரையையே அது நாசமாக்கி விடும் என்பதே உண்மையாகும்.

நாட்டின் இளைஞர்கள் ஜனாதிபதி  உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினரை வீட்டுக்கனுப்பும் நோக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில்   ஊழலை  ஒழித்து, ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவது இவர்களின் பிரதான நோக்கமாகவுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தலைவலிக்கு தலையணையை மாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம்  மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இடம்பெற்று வருகின்றன.

பாராளுமன்றத்தில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காமல் தமக்கிடையேயான குரோதங்களை வெளிப்படுத்தும் ஒரு களமாக பாராளுமன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை பலரினதும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. மக்களுக்கு தோள் கொடுக்காத இப்படியொரு பாராளுமன்றமும், அரசியல்வாதிகளும் அவசியந்தானா? என்று நாட்டு மக்கள் தமக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். நாடு அனுபவித்து வரும் பலவிதமான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்து அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். எனினும் இவர் ராஜபக்ஷ குடும்பத்தினரை பாதுகாக்க வந்த ஒருவர் என்பதனை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்ட நிலையில் ரணிலின் சாயமும் இப்போது வெளுத்துப் போய் இருக்கின்றது.

இதனிடையே எதிர்வரும்  மாதங்களில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வீட்டுத்தோட்டத்தில் பயிரிடல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டினை தாக்குப் பிடிக்க முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகவுள்ளது. இது சிறப்பாகுமெனினும் உடனடி மாற்றத்தை இதனால் ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வி பலரது மனங்களிலும் மேலோங்கி காணப்படுகின்றது..

நாட்டின்  சமகால நெருக்கடியினால் பெருந்தோட்ட மக்கள் தலைநிமிர முடியாதுள்ளனர். எனவே இவர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்கம் உதவ முன்வருதல் வேண்டும். அத்தோடு இந்த நாட்டில் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட இந்திய வம்சாவளி மக்களுக்கு கையளவேனும் சொந்தமான நிலம் இல்லாமை வருந்தத்தக்க ஒரு விடயமாகும். வீட்டுரிமையற்ற சமூகமாகவும் இவர்கள் இருந்து வருவதோடு அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி வீட்டுத்தோட்ட விவசாய நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கும் இவர்கள் வாய்ப்பில்லாதுள்ளனர். இதனால் தோட்டத் தொழிற்றுறை மூலமான வருமானத்தில் திருப்தியற்றுள்ள இம்மக்களின் வறுமை நிலை முடிவுக்கு வருவதாக இல்லை.

எனவே தோட்டப் புறங்களில் காணப்படும் தரிசு நிலங்கள் அல்லது வெற்றுக் காணிகளை இம்மக்களுக்கு பகிர்ந்தளித்து ஓரளவேனும் பொருளாதார மேம்பாட்டிற்கு கை கொடுக்க வேண்டும் என்று பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார். தரிசு நிலங்களை தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வடிவேல் சுரேஷ் நிர்வாகங்களிடமும், தோட்டத்தை நிர்வகிக்கும் கம்பெனிகளிடமும் கூடுதல் அழுத்தங்களை வழங்கி வந்தார். இன்னும் வழங்கியும் வருகின்றார். அத்தோடு பெருந்தோட்டத் காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது என்பதிலும் இவர் தனது கண்டனத்தை அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றார். இவரின் முயற்சியினால் வெளியாரின் கைக்கு செல்லவிருந்த பல ஹெக்டேயர் பெருந்தோட்டக் காணிகள்  வெளியாரின் கைகளுக்குச் செல்லாது தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதியின் பணிப்புரை  

தோட்டப் புறங்களில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான பயிரிடப்படாத 9000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலங்கள் உள்ளதோடு 23 கம்பெனிகளுக்கு சொந்தமாக அந்நிலங்கள் காணப்படுகின்றன. தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடயம் சாத்தியப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் அண்மையில் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றினையும் அனுப்பி இருந்தார். சமகால நெருக்கடிகளை கருத்தில் கொண்டு உழைக்கும் மக்களுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கைகளையும், பொருளாதார அபிவிருத்தியையும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத அனைத்து நிலங்களையும் கண்டறிந்து, அவற்றில் உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு

ஜனாதிபதி கோத்தபாய உரிய அதிகாரிகளுக்கு  அண்மையில் பணிப்புரை விடுத்திருக்கின்றார். இது  ஒரு நல்ல முயற்சியாகும் என்றபோதும் தோட்டத்தில் வதியும் தொழிலாளர்கள் இதில் அதிகூடிய நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வண்ணம் வழியேற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். தோட்டப்புற தரிசு நில விவசாய நடவடிக்கைகளில் வெளியாரின் ஊடுருவல்கள் முற்றாக தவிர்க்கப்படுதல் வேண்டும். வந்தவரை வாழவைத்துவிட்டு எம்மவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

தனக்கு வைத்துக் கொண்டே தானம் செய்தல் வேண்டும். அத்தோடு அரசாங்கத்தின் தீர்க்கதரிசனமற்ற இரசாயன உரக் கட்டுப்பாட்டு  கொள்கையின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்கு சோறு கொடுத்த விவசாயி இன்று வீட்டுக்கு உணவில்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார். எனவே பெருந்தோட்ட தரிசு நிலங்களில் தொழிலாளர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமிடத்து அவர்களின் பயிர்செய்கைக்குத் தேவையான உர வகைகளை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் உறுதி பூண வேண்டியதும் அவசியமாகும். தோட்டப் புறங்களில் காணப்படும் தரிசு நிலங்களை உழைக்கும் தொழிலாளர் தோழர்களுக்குப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Tamil News