ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வி: ட்ரம்பின் மிரட்டலால் அதிகரிக்கும் ஆபத்து!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிந்துள்ளது.

  அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியிருந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை காலையில், அவருடைய ட்ரூத் சோசியல் பதிவுகளின் வாயிலாக வெளியானது.

அமெரிக்கா ஈரானின் மீது ஒரு கடற்படை முற்றுகையை நடத்தும் என்றும் சட்டவிரோதக் கட்டணம் செலுத்தும் எவருக்கும், நடுக்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல்  பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க இராணுவம் “முழுமையாகத் தயார் நிலையில்” இருப்பதாகவும், “பொருத்தமான ஒரு தருணத்தில்” ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.