ஒரு சர்வதேச அமைப்பு “இனப்படுகொலை” என முதன்முறையாக அறிவித்த கறுப்பு யூலை! : பா.அரியநேத்திரன்

1983, யூலை, 23, ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் வீதியில் படை நகர்வுக்காக சென்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலை தூண்டுதலாக எடுத்து திட்டமிட்ட இனப்படுகொலையை அப்போதைய ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன, பிரதமர் ஆர் பிரமதாசா, அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்ட கூட்டு இனப்படுகொலை இதுவாகும். இதனை கறுப்பு யூலை என பின்னர் அடையாளப் படுத்தப்பட்டது. 2026, யூலை,23, இன்று 43, வருடங்கள் அந்த கொடுரம் நடந்து இன்று வரையும் அதற்கான நீதியில்லை.
“இந்த படுகொலை கொடுரத்தை முதன் முதலாக ஒரு சர்வதேச அமைப்பான பன்னாட்டு நீதித்துறை வல்லு நர்கள் ஆணையம் (International Commission of Jurists) என்ற அரசசார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் யூலை படுகொலை இப்படுகொலை என்று விவரித்தது” எப்படி இந்த இனப்படுகொலை 1983,யூலை,23, தொடக் zகம் 1983, யூலை,30, வரையும் தொடர்சியாக 8, நாட்கள் அரங்கேறியது என்பதை விரிவாக பார்போம்.
1️ஆம் நாள்
1983 யூலை 23,சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதலை தொடுத்தனர். இதன்போது இரண்டு இராணுவத்தினர் காயமடைந்தனர். அதன் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த இராணுவத்தினர் தங்கள் சக வீரர்களுக்கு உதவக் கீழே இறங்கினர். அவர்கள் மீது போராளிகள் தானியங்கி ஆயுதங்கள், கைக்குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தி னர். தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிர ண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
2️ஆம் நாள்
1983, யூலை.24 , ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாழ் பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி செல்லும் பாதையில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கியதுடன 51 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப் பட்டனர்.
13 இராணுவத்தினரின் இறுதிச் சடங்குகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாது என இராணுவத்தின் தளபதி திச்ச வீரதுங்க உட்பட்ட இராணுவ அதிகாரிகள் முடி வெடுத்தனர். அதற்குப் பதிலாக கொழும்பில் பொரளை கனத்தை சேமக்காலையில் முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன, பிரதமர் ரணசிங்க பிரேமதாசா, 1983, யூலை 24 மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றனர். இறந்த இராணுவத்தினரை அவர்களது சொந்தக் கிராமங்களில் அடக்கம் செய்வதற்காக அவர்க ளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வழக்கமான நடை முறைக்கு மாறாகவே இது நடந்தது.
பொரளையில் உள்ள காவல் நிலையத்தில் கலகத் தடுப்புப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மாலை 5 மணியாகியும் உடல்கள் கொழும்புக்கு வரவில்லை.இராணுவ வீரர்களின் உடல்களை தங்களிடம் ஒப்படைத்து, பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என இராணுவ வீரர்கள் வலியுறுத்தினர்.
நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, சடலங்கள் பலாலி இராணுவ முகாமில் தொடர்ந்து இருந்தன. பலாலி விமானப்படை தளத்தில் இருந்து உடல்களை ஏற்றி வந்த அவ்ரோ விபானப்படை விமானம் இரவு 7.20 மணிக்கு இரத்மலானை வானூர்தி நிலையத்தை வந்தடைந்தது, சடலங்கள் கனத்தை மயானம் கொண்டு செல்ல தாமத மானதன் காரணமாக கனத்தை சேமக்காலையில் பதற்றம் அதிகரித்தது. கொழும்பு வனாத்தமுல்லை சேரியைச் சேர்ந்த சுமார் 3000, தொடக்கம் 8000, பேர் உட்பட ஒரு பெரிய கூட்டம், தாக்குதல் செய்தியால் கோபமடைந்த நிலையில் கனத்தையில் திரண்டனர்.
உடல்களை மயானத்தில் அடக்கம் செய்வதை விட குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தினர் சத்தமிட்டு கோசமிட்டனர். கூட்டத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது, கலவரப் படை வரவழைக்கப்பட்டது. கலகத் தடுப்புப் பிரிவினர் கூட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர இராணுவம் வரவழைக்கப்பட்டது.
இறுதியில் இராணுவ இறுதிச் சடங்கு நிறுத்தப்பட்டு உடல்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஜே ஆர் முடிவு செய்தார். இரத்மலானையிலிருந்து உடல்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் இராணுவத் தலைமையகத்திற்கு திருப்பி விடப்பட்டன. கனத்தையில் குழுமி இருந்த கூட்டத்திற்கு இரவு 10 மணியளவில் ஜனாதிபதி ஜே ஆரின் முடிவு தெரிவிக்கப்பட்டது. பின்னர் திரண்ட மக்கள் சேமக் காலையை விட்டு வெளியேறியனர்.
வெளியேறிய கூட்டத்தின் ஒரு பகுதி சிங்ககள குண்டர்கள் டி. எஸ். சேனநாயக்கா வீதியில் இருந்து பொரளை வீதிவரை உள்ள தமிழருக்குச் சொந்தமான நாகலிங்கம் ஸ்டோர் என்ற கடையை தீயிட்டு அழித்து தமிழர் களுடைய வீடுகளையும் உடைத்தனர். இவ்வேளையில் 10,000 இற்கும் அதிகமானோர் இக்கும்பலில் சேர்ந்தனர்.
அவர்கள் பொரளையில் உள்ள கடைகளைக் கொள்ளையடித்தனர், பொரளை சந்திக்கு அருகில் உள்ள பொரளை அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ் யூனி யன் துடுப்பாட்டக் கழகம் உட்பட தமிழ்த் தொடர்பைக் கொண்டிருந்த அனைத்துக் கட்டடங்களையும் தாக்கிக் கொள்ளையடித்துத் தீ வைத்தனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ள தமிழர்களின் வீடுகள் குறிவைக்கப்பட்டன. பின்னர் தெமட்டகொடை, மருதானை, நாரகேன்பிட்டி, பாலத் துறை, திம்பிரிகசாய ஆகிய திசைகளில் கூட்டம் கலைந்து, அங்கு தமிழர்களின் சொத்துக்களை தாக்கி சூறையாடி தீ வைத்தனர்
3️ஆம் நாள்,
1983, யூலை,25, திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு ஜே ஆர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை மாலையில் கூட்டினார். பாதுகாப்பு பேரவை கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த ‘அம்பாள் கபே’ தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. அருகில் யோர்க் வீதியில் ‘சாரதாஸ்’ நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின.
அன்று மாலை 6 மணி முதல் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிங்களகாடைக்கும்பல் ஒல் கொட் மாவத்தை வழியே சென்று கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இருந்த ‘ஆனந்த பவன்’, ‘இராஜே சுவரி ஸ்டோர்’, ‘அஜந்தா ஓட்டல்’ ஆகியவற்றிற்கும் தீ வைத்தனர்.
அமைச்சர்களான சிறீல் மத்தியூ உட்பட பலர் அன்று காலை கொழும்பின் பல்வேறு இடங்களில் தமிழர் குடியிருப்புகளைத் தாக்குமாறு கும்பல்களை வழி நடத்திக் கொண்டிருந்தனர். ரணசிங்க பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அடியாளான சிறில் மத்தியூ கோட்டை, புறக்கோட்டை பகுதிகளிலும், கொழும்பு நகர முதல்வரின் அடியாட்கள், மாநகரசபைப் பணியாளர்கள், போக்குவரத்து அமைச்சர் எம். எச். முகம்மதின் ஆட்கள் பொரளையிலும், மாவட்ட அமைச்சர் வீரசிங்க மல்லிமாராச்சியின் அடியாட் கள் கொழும்பு வடக்கிலும், துணை அமைச்சர் அனுர பஸ்தி யானின் ஆட்கள் கொழும்பு தெற்கிலும் தமிழ்ர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இன்னுமொரு கும்பல் பாலத்துறை, கிருலப்பனை, கொட்டாஞ்சேனை,  மருதானை,  முகத்துவாரம், நாரகேன்பிடடி, கொம்பனித் தெரு, வனாத்தமுல்லை உட்பட பெரும்பாலான பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. கம்பிகள், சமையலறைக் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் தெருக்களில் சுற்றித் திரிந்து, தமிழர்களைத் தாக்கிக் கொன்றது. அடுத்ததாக, யாழ்ப்பாணத் தமிழ்ர் பெருமளவு வசிக்கும் வெள்ளவத்தை, தெகிவளை போன்ற பகுதிகளில் வன்முறை பரவியது. பெருமளவு வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
கொழும்பு பிரதான வீதி, ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள கடைகளும் தாக்கப்பட்டன. அன்டர்சன் தொடர் குடியிருப்பு, எல்விட்டிகல, டொரிங்டன் திம்பிரிகசாய தொடர் குடியிருப்புகளில் இருந்த தமிழ் வீடுகள் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. மிகவும் பாதுகாப்பானதெனக் கருதப்பட்ட கறுவாத்தோட்டத்தில் இருந்த தமிழ்ர் வீடுகளும் தாக்கப்பட்டன.
கடவத்தை, களனி, நுகேகொடை, இரத்மலானை போன்ற புறநகர்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டன. இந்தியத் தூதரின் வீடும் தாக்கப்பட்டு கொள் ளையடிக்கப்பட்டது.ஏறக்குறைய நகரின் அனைத்துப் பகுதிகளும் தீயில் மூழ்கின. அன்று மாலை 6.00 மணிக்கு அமுலாகவிருந்த ஊரடங்கு மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு கொண்டுவரப்பட்டது. நீர்கொழும்பிலும் தமிழர் பகுதிகள் தாக்கப்பட்டதை அடுத்து, கம்பகா மாவட்டத்திலும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. களுத்துறையில் டி.கே.வி.எஸ் என்ற வணிக நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் உரிமை யாளரான தமிழர் மாடியில் இருந்து குதித்துத் தப்ப முயன்றார், ஆனால் வன்முறைக் கும்பல் அவரை மீண்டும் தீப்பற்றிய கடைக்குள் எறிந்து அவரைக் கொன்றனர்.ஊரடங்கு சட்டம் களுத்துறை மாவட்டத்திற்கும் நீடிக்கப்பட்டது. காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலோ அல்லது விரும்பாததாலோ, காவல்துறைக்கு உதவ இரா ணுவம் வரவழைக்கப்பட்டது.
கலவரக்காரர்கள் தமிழர்களைக் குறிவைக்க வாக் காளர் பதிவுப் பட்டியலைப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அடையாளம் காணும் கும்பல்களிடம் தேர்தல் பட்டியல்கள் கைவசம் இருந்தமை, அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளின் ஒத்து ழைப்பைக் குறிக்கிறது. சனாதிபதி ஜெயவர்தன பின்னர் ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டது போல், “நடந்த கலவரங்கள், கொள்ளைகளில் ஒரு அமைப்பி னால் திட்டமிட்ட முறையில் கவனிக்கப்பட்டமை அவதானிக் கப்பட்டது.”சொய்சா குடியிருப்பில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான 92 குடியிருப்புகளில் 81 குடியிருப்புகள் தாக் கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான பல தொழிற்சாலைகளைக் கொண்ட இரத்மலானை கைத்தொழில் பகுதி மீது இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது.
காலி வீதியில் இருந்த ஜெட்ரோ கார்மென்ட்சு, டாட்டா கார்மென்ட்சு முற்றிலும் எரிந்து நாசமானது. பாண்ட்ஸ், எஸ்-லான், ரீவ்ஸ் கார்மென்ட்சு, ஹைடோ கார்மென்ட்சு, ஹைலக் கார்மென்ட்சு, ஏ ஜி எம் கார்மென்ட்சு, மன்ஹாட்டன் கார்மென்ட்சு, புளோய் பெக், பெரெக், மாஸ்கான்ஸ் ஆசுபெசுட்டசு ஆகியவை தாக்கியழிக்கப்பட்ட ஏனைய தொழிற்சாலைகள் ஆகும். குண்டன்மால்ஸ், ஆக்ஸ்போர்டு மற்றும் பேக்சன் கார்மென்ட்சு போன்ற இந்தியருக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் தாக்கப்படவில்லை, இது வேண்டுமென்றே இலங்கைத் தமிழர் இலக்குகளையே வன்முறைக் கும்பல் பின்தொடர்ந்தது என்ற கருத்துக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
இரத்மலானையில் 17 தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமான கேப்பிடல் மகாராஜா இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்க ளில் ஒன்றாகும். இரத்மலானாவில் உள்ள அவர்களது ஆறு தொழிற்சாலைகளும், பேங்சால் தெருவில் உள்ள அவர் களின் தலைமையகமும் அழிக்கப்பட்டன. வன்முறைக் கும்பலால் கல்கிசையில் உள்ள டில்லிஸ் பீச் ஹோட்டலுக்கு தீவைக்கப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்
1983,யூலை,25,திங்கட்கிழமை கொழும்பு நகரில் தாக்கு தல் நடத்தும் சம நேரத்தில் நடந்த மிக மோசமான இனப்படுகொலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை யில் இடம்பெற்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள், சிங்களக் கைதிகளால் கத்திகள் மற்றும் இரும்புக்கம்பி, தடிகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
சிங்கள சிறை அதிகாரிகள் தமிழ் அரசியல் கைதிகள் இருந்த அறைகளின் சாவிகளை சிங்களக் கைதி களுக்கு வழங்கினர் . இதனை உயிர் பிழைத்தவர்கள் கூறி னர். ஆனால் சிறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து சாவிகள் திருடப்பட்டதாககூறினர்.
4️ஆம் நாள் 
1983,யூலை,26, செவ்வாய்கிழமை வெள்ளவத்தை, தெகிவளை யில் சிங்கள காடைக்கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்தன. தெகிவளை இரத்னாகர வீதியில் இருந்த 53 வீடுகளில், தமிழர்கள் வசித்து வந்த 24 வீடுகள் எரிக்கப்பட்டன.தமிழர் வாடகைக்குக் குடியிருந்த சிங்களவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை எரிக்காமல் உடமைகளை மட்டும் வெளியே அகற்றி அவற்றை எரித்தனர். நகரின் பல பகுதிகளில், இராணுவத்தினரும் காவல்துறையினரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதையும், மக்கள் கொல்லப்பட்டதையும் பார்த் துக் கொண்டிருந்தனர்.
அன்று யூலை 26, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கண்டிக்கும் வன்முறை பரவியது. பிற்பகல் 2.45 மணியளவில் பேராதனை வீதியிலுள்ள டெல்ட்டா மருந்தகம் தீப்பற்றி எரிந்தது. அதன் பின்னர், லக்சலா கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள தமிழருக்குச் சொந்தமான கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது, மேலும் வன்முறை காசில் தெரு, கொழும்பு தெரு வரை பரவியது. பின்னர் காவல்துறையினரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது, ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எரிபொருட்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் கண்டி, கோட்டை, கொழும்பு, கிங்ஸ், திருகோணமலை வீதிகளில் உள்ள தமிழ்க் கடைகளைத் தாக்கத் தொடங்கியது. பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள கம்பளைக்கு சென்றது.1983,யூலை 26 மாலையே கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி யதாகவும், காரைநகர் கடற்படைத் தளம் அழிக்கப்பட்டதாகவும், நாக விகாரை தேதப்படுத்தப்பட்டதாகவும் பொய்யான வதந்திகள் திருகோணமலையில் பரவ ஆரம்பித்தன. திருகோணமலை கடற்படைத் தளத்தை தளமாகக் கொண்ட கடற்படையினர் மத்திய வீதி, கப்பல்துறை வீதி, பிரதான வீதி மற்றும் வடக்கு கடற்கரைச் சாலையைத் தாக்கி வெறித்தனமாகச் சென்றனர். அவர்கள் தங்கள் தளத்திற்குத் திரும்புவதற்கு முன் 170 தமிழர்களுடைய வீடுகள்,கட்டடங்களுக்கு தீ மூட்டினர். திருஞானசம்பந்தன் வீதியிலுள்ள சிவன் ஆலயமும் தாக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழு வதும் 1983,யூலை,26,ல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. பல் வேறு இனக்குழுக்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொள்ளைகள் அதிகமாக இடம்பெற்றன. திருநெல்வேலித் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் 1983, யூலை, 26, இரவு ஊரடங்கு உத்தரவின் போது
அடக்கம் செய்யப்பட்டன.
5️ஆம், நாள்
1983, யூலை,27,புதன்கிழமை இரண்டாம் தடவையாக வெலிக் கடை சிறையில் டாக்டர் இராஜசுந்தரம் உட்பட 18, பேர் படுகொலை செய்யப்பட்டனர். மத்திய மாகாணத்தில், நாவலப்பிட்டி, அட்டன்வரை வன்முறை பரவியது. அதற்கு அண்டைய ஊவா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான பதுளையில் அன்று காலை 10.30 மணியளவில் மணிக்கூட்டு கோபுரத்தின் முன் தமிழர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டது.நண்பகலில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நகரின் வணிகப் பகுதி வழியாக சென்று கடைகளுக்கு தீ வைத்தது. கலவரம் பின்னர் குடியிருப்புப் பகுதிகளுக்கும் பரவியது, மேலும் பல தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. பின்னர் அந்தக் கும்பல் தாங்கள் திருடிய வாகனங்களிலும் பேருந்துகளிலும் நகரை விட்டு பண்டாரவளை, ஆலி-எல, வெலிமடை ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு தொடர்ந்து சொத்துக்களுக்கு தீ வைத்து எரித்தது. கலவரம் இரவு நேரத்தில் லுணுகலை வரை பரவியது.
6️ஆம் நாள்
1983, யூலை,28 , வியாழக்கிழமை பதுளை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது, மேலும் கலவரம் லுணுகலையில் இருந்து பசறை வரை பரவியது. நுவரெலியா மற்றும் சிலாபத்திலும் கலவரம் ஏற்பட்டது.ஆனால் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலையில் வன்முறைகள் குறைந்தன.
ஜே ஆர் ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை யும் அன்று அவசர கூட்டத்தை நடத்தி ஜெயவர்தன ரூபவாஹினி தொலைக்காட்சியில் மக்களுக்கு உரை யாற்றினார், அதில் அவர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து விட்டு அதே நேரம் அவர் கூறியது “1976 ஆம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி, மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்த போது, சுதந்திர தமிழ் அரசுக்காக விடுத்த அழைப்புகளால், “சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வளர்ந்த ஆழமான மோசமான உணர்வும் சந்தேகமும்” வன்முறைக்கு காரணம் என்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. சிங்கள மக்கள் எதிர்வினையாற்றிய விதம் தமிழ்ப் போராளிகள் செய்த வன்முறைக்கே என்றும் அவர் நியாயம் கற்பிக்கும் விதமாக குற்றம் சாட்டினார்.2,500 ஆண்டுகளாக ஒரே தேசமாக இருந்த ஒரு நாட்டைப் பிரிப் பதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள் என்று சபதம் செய்த ஜெயவர்தனா, அரசாங்கம் “சிங்கள மக்களின் கூக்குரலுக்கு இணங்கும்” மற்றும் தேசத்தைப் பிளவுபடுத்த முயலும் எந்தக் கட்சியும் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்”
1983, யூலை,28 வியாழக்கிழமை
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஜெயவர்தனாவிடம் யூலை கலவரம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை அவருக்குத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் பி. வி. நரசிம்மராவைத் தனது சிறப்புத் தூதராக ஜெயவர்தனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண் டார். ஜெயவர்தனே அதனை ஏற்றுக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு ராவ் இலங்கைக்கு வந்தார்.
7️ஆம் நாள்
1983, யூலை,29 வெள்ளிக்கிழமை கொழும்பு அமைதியாக இருந்தது. நகரத்தில் உள்ள பல அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை தமிழ் மக்கள் பார்வையிட்டனர். காலை 10.30 மணியளவில் காஸ் வர்க்சு வீதியில் இரண்டு சிங்கள இளைஞர்கள் சுடப்பட்டனர்.அடம் அலி கட்டடத்தில் இந்த இளைஞர்கள் தமிழ் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கட்டடம் இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறையினரால் சூழப்பட்டது, அவர்கள் கட்டிடத்தின் மீது துணை இயந்திரத் துப்பாக்கிகளினால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒரு உலங்குவானூர்தியும் கட்டிடத்தின் மீது சுட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டிடத்திற்குள் நுழைந்த போது உள்ளே தமிழ் புலிகள், ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இராணுவம் தமிழ் புலிகளுடன் போரில் ஈடுபட்டதாக கொழும்பில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. புலிகளை எதிர்த்துப் போரிடத் தயாராக கோடரிகள், செங்கல்கள், இரும்புக் கம்பிகள், கத்திகள் மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களுடன் தெருக்களில் கும்பல்களாக சிங்கள் மக்கள் கூடத் தொடங்கினர். வாகனங்களை நிறுத்தித் தமிழர்களைத் தேடினர். அவர்கள் கண்டறிந்த தமிழர்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டனர்.
கிருள வீதியில் ஒரு தமிழர் உயிருடன் எரிக்கப்பட்டார். அத்திடிய வீதியில் பதினொரு தமிழர்கள் உயிருடன் எரிக் கப்பட்டனர். இரண்டு தமிழர்களினதும், மூன்று முசுலிம் களினதும் சடலங்கள் இருந்த ஒரு வாகனத்தை அதே வீதியில் காவல்துறையினரால் 15 கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். யூலை 29 பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆகத்து 1 திங்கள் காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் உலங்குவானூர்தியில் கண்டிக்கு செல்வதற்கு முன்னர் அரசுத்தலைவர் ஜனாதிபதி ஜெயவர்தன, வெளிவிவ கார அமைச்சர் ஏ. சீ. எஸ். அமீது ஆகியோருடன் கலந்து ரையாடினார்.
8️ஆம் நாள்
1983, யூலை,30, சனிக்கிழமை நுவரெலியா, கந்தப்பளை, காவ எலிய, மாத்தளை ஆகிய இடங்களில் வன்முறைகள் இடம் பெற்றன. நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. வன்முறைகளைத் தூண்டியமைக்காக அதே நாள் இரவில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளுக்கு அரசு தடை வித்தது. ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் இடாப்புக்களை கையில் வைத்திருந்த வன்முறையாளர்கள், தமிழர்களின் வீடுகளையும் வணிக நிலையங்களையும் தேடித்தேடித் தாக்கினர். ஏழு நாட்களில், 1983, யூலை,24, தொடக்கம் யூலை 30, வரையும் நடந்த இனப்படுகொலையால் மூவாயிரம் (3,000) தமிழர்கள் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டது, வீடுகளையும், உடமைகளையும் இழந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ எண்ணாயிரம் (8,000) வணிக நிறுவனங்களும் அழிக்கப் பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு முன்னூறு (300) மில்லியன் என மதிப்பிடப்பட்டது.
இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங் கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர். கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது கறுப்பு யூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத் தமிழரின்நினைவு மாதமாக நினைவு கூரப்படுகிறது.