நாமல் ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் நீட்டிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் வழக்கு தொடர்பில் வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (29) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ரூபா 100 மில்லியன் நிதி முறைகேடு மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கிலேயே கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னதாக இன்று வரை வழங்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் நிறைவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு கொம்பனித்தெரு ‘கிரிஷ்’ நிலக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் 4 ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, இன்றையதினம் காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.