மாவீரர் தினம் விளக்கேற்ற அனுமதியுங்கள்; முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை

212 Views

மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை
எதிர்வரும் 27ஆம் நாள், எங்கள் உறவினர்கள், சக நண்பர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, விழுந்து அழுது எங்கள் கவலைகளை ஞாபகப்படுத்த அந்தத் தினத்தை தருமாறு அன்பாக வேண்டுகிறோம்.

இவ்வாறு வடக்கின் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் எழுவர் மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை  முன் வைத்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு கடந்த 11ஆம் நாள் வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றபோதே இந்தக் கோரிக்கையை உருக்கமாக அவர்கள் முன்வைத்தனர்.

அவர்கள் தமது கோரிக்கையில், மேலும் தெரிவித்தவை வருமாறு,

ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கேட்கின்றோம். எங்கள் உறவினர்கள், சக நண்பர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, விழுந்து அழுது எங்கள் கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

இராணுவம் வெற்றி தினத்தை நினைவு கூருகின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது உறுப்பினர்களுக்குக்கூட யாழ்ப்பாணத்தில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு இரு தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு – எங்கள் உறவுகளை நினைத்து மெழுகுதிரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்?

எங்கள் இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கு நினைவு கூர அனுமதிதர மறுக்கின்றார்கள். இது எங்களின் சாதாரண உரிமையாகும். நாங்கள் நினைவுகூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி. ஐ. டியினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள் – கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி. ஐ. டியினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும், எங்கள் குழந்தைகளும் அச்சமடைகின்றனர். நாங்கள் தற்போது, இங்கு – கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி. ஐ. டியினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர்.

எங்கள் வாழ்நாளில் இதுவே ஓர் ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும். நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் – என்றார்.

முன்னாள் போராளிகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்தபோது, ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இந்த அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

முன்னாள் போராளிகள் ஆணைக்குழு முன்பாக தமது கோரிக்கையை முன்வைக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணனும், அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad மாவீரர் தினம் விளக்கேற்ற அனுமதியுங்கள்; முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் கோரிக்கை

Leave a Reply