பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய அவர், புதிய சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
பொதுமக்களுடனான கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்னதாகவே குறித்த சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், குழுவின் கலந்துரையாடலுக்கு எதிர்ப்பில்லை என்றாலும், அதன் அடிப்படையில் இறுதி முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வருவதுடன், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பாரதூரமானவை என்று குறிப்பிட்ட சாணக்கியன், புதிய சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதிய சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, சட்டமூலங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களிலேயே தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.



