உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
முன்னதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஏன் ட்விட்டரை வாங்குகிறேன் என்பதற்கான விளக்கம் அளித்திருந்தார். அதில், “ட்விட்டரை வாங்குவது முக்கியமானது. ஏனெனில் ஒரு பொதுவான டிஜிட்டல் தளம். எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து, ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஒரு தளம் தேவை” என்று பதிவிட்டிருந்தார்.
ஏற்கெனவே ட்விட்டர் மஸ்க் கைவசம் வந்த பின்னர் அவர் இப்போது இருக்கும் ஊழியர்களில் 75% பேரை பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிடாமல் பேட்டியளித்த ஊழியர்களில் சிலர், “எலான் மஸ்க்கின் தலைமையில் வேலை பார்க்க விருப்பமில்லாததால் நாங்கள் பணியிலிருந்து விலகிவிட்டோம்” என்றனர். இன்னும் சிலர், “இப்போதைக்கு எந்த கடினமான முடிவையும் எடுப்பதாக இல்லை. சந்தேகத்தின் பலனை அளித்து இன்னும் சில காலம் இங்கேயே பணியைத் தொடர்வோம்” என்று கூறினர். இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “மஸ்க் ட்விட்டரை நடத்தினால் அதில் நம்பகத்தன்மையற்ற தகவல்களும், பல்வேறு அவதூறுகளும், தொல்லைகளும் அதிகரிக்கும்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சிக்கான மலிவு விலை ராக்கெட்களைத் தயாரிக்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கியவர் எலான் மஸ்க். அதோடு, கனரக மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தையும் அவர் விலைக்கு வாங்கினார். இவ்விரு நிறுவனங்களிலும் அவர் பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுகிறவர் மட்டுமல்ல. ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்களின் தலைமை வடிவமைப்பாளரும் அவர்தான். டெஸ்லாவிலும் பல்வேறு மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய புதிய மாடல் கார்களின் வடிவமைப்பில் சி.இ.ஓ. மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரான அவருக்கு முக்கியப் பங்குள்ளது.
இவ்வாறு பல நிறுவனங்களைத் தொடங்கியும் விலைக்கு வாங்கியும் விண்வெளி ஆராய்ச்சி, வாகன உற்பத்தி, சூரியசக்தி மின்கலன் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, சுரங்க வடிவமைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து, உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.