தமிழகம்: தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு – சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்த்திருவிழாவின் போது 11 பேர் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் செய்தியினை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த 16 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இப்பணிகளை மேற்பார்வையிடவும் துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இன்று அப்பகுதிக்கு நேரில் செல்ல உள்ளேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tamil News