பொருளாதார நெருக்கடி: சுற்றுலா விசாக்களில் வேலைத் தேடி செல்லும் இலங்கையர்கள், நாடுகடத்தும் மலேசியா

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயல் படை கண்டறிந்துள்ளது. 

இதன் காரணமாக, சுற்றுலா விசாக்கள் எனப்படும் பார்வையாளர் விசாக்களில் செல்லும் இலங்கையர்களை மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வாரந்தோறும் 20 இலங்கையர்களுக்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இலங்கைக்கு நாடுகடத்துவதாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றுலா விசாக்கள் மூலம் மலேசியாவுக்குள் நுழைந்த பல இலங்கையர்கள், தரகர்களின் பேச்சை நம்பி மோசமான நிலையில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மோசமான சூழ்நிலைகளின் கீழ் வலுக்கட்டாயமாக எவ்வித தொழிலாளர் உரிமைகளுமின்றி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு செல்லும் இலங்கையர்கள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், பலர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர். ஏற்கனவே அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையர்கள் படகு வழியாக தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்லும் நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.